இந்தியா, தேர்தல்

காங்கிரசின் உத்தரவாதங்கள் வெற்றிக்கனியை பறித்து தருமா?

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுவரை 5 கட்டங்களை நடத்தி முடித்துள்ளது. இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்த இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் அதிக தொகுதிகளில் வெற்றிக்கனியை பறிக்கும் என்று உறுதியாக நம்புகிறது. பாஜ வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா உள்பட அக்கட்சி தலைவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

ஆனால் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜ மேற்கொண்ட பிரசாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் என்ன வளர்ச்சி பணிகள் செய்தார்கள் என்பதை கூறவில்லை. மாறாக மத துவேஷம், வெறுப்பு பேச்சை ஊக்கப்படுத்தி மக்களை திசை திருப்பும் வேலையை செய்தார்கள். இதில் பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் 5 உத்தரவாத திட்டங்களை அறிமுகம் செய்தது.

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2000, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி என்று அறவித்தது. இதனால் அம்மாநிலத்தில் பாஜவை வீழ்த்தி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடக பாணியை அப்படியே மக்களவை தேர்தலிலும் கடைபிடிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விரும்பினார்.

அதன்படி தங்கள் தேர்தல் அறிக்கையில், நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பொது துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 34 லட்சம் வேலைகளை நிரப்புவது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட உத்தரவாதங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. இந்த வாக்குறுதிகள் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதை தங்களது பிரசாரத்தின் போது உணர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக மாநில உத்தரவாத திட்டம் வெற்றி பெற்றது போன்று மக்களவை தேர்தலிலும் காங்கிரசின் உத்தரவாதங்கள் வெற்றிக்கனியை பறித்து தரும் என்பதை உறுதியாக நம்புகிறோம். பாஜ கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இளைஞர்களை வேலையில்லாதவர்களாக மாற்றிவிட்டது. அரசு பணியிடங்கள் எதையும் நிரப்பவில்லை. மோடி பொய்யான வாக்குறுதிகளால் மக்களவை ஏமாற்றிவிட்டார். இதை மக்களும் நன்கு உணர்ந்துவிட்டார்கள்.

அதனால் தான் பாஜ தலைவர்களை பிரசாரத்தின் போது மக்கள் நிராகரித்தார்கள். அதே சமயம் ராகுல், பிரியங்காவுக்கு வடமாநிலங்களிலும் அமோக வரவேற்பை அளித்தார்கள். காங்கிரசின் வெற்றியை இம்முறை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். பாஜ ஆட்சியில் அரசு பணியிடங்கள் எத்தனை நிரப்பப்பட்டது. வேலைவாய்ப்புகளை உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சி என்ன?.

இதுபற்றி பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் எங்கேயும் வாய்திறக்கவே இல்லை. சொல்லிக்கொள்ளும்படி பாஜ எந்த சாதனையும் செய்யவில்லை. மக்களை உணர்வுப்பூர்வமாக சுரண்டுவதை மட்டுமே பாஜ தலைவர்கள் கொள்கையாக வைத்துள்ளனர் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதற்கிடையில், காங்கிரசின் உத்தரவாத திட்டம் வெல்லுமா என்ற கேள்விக்கு ஜூன் 4ம் தேதி விடைகிடைத்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *