இந்தியா, சிந்தனைக் களம், பொருளாதாரம், விமர்சனம்

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா?

நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடிமகனும் கவலை, எதிர்பார்ப்பு சூழ் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன் முதலாவது முழு ஆண்டுக்குமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். சென்ற ஆண்டில் புதிய அரசு அமைந்ததும், பாதி நிதியாண்டில் அவர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையின் போக்கிலேயே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது. நாட்டின் தொழில் துறையினர் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை ஒவ்வொரு தரப்பினரின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிதியமைச்சர் கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பது தெரிகிறது; ஆனால், எல்லாவற்றுக்குமான தீர்வுகளை நிதிநிலை அறிக்கை கொண்டிருக்கிறதா என்று கேட்டால், திருப்தியான பதிலை நாம் சொல்ல முடியவில்லை.

புதிய வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் பெரும் நேரடித் திட்டங்கள் அல்லது மக்களால் கொண்டாடப்படும் அளவுக்கான வரிச் சலுகைகள் அல்லது நுகர்வைத் தீவிரமாக உத்வேகப்படுத்தும் அறிவிப்புகள் என்று பெரிதாகக் குறிப்பிட எதுவும் இல்லை. ‘நிதிப் பற்றாக்குறை வரம்பைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், பொதுச் செலவைத் தாராளப்படுத்துங்கள்; அதுதான் உற்பத்தி, வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெருக உதவும்’ என்று பல தரப்புகளிலிருந்தும் கூறப்பட்ட துணிச்சலான யோசனைகள் ஏற்கப்படவில்லை. அதேசமயம், நெருக்கடியை அனுசரித்து, சூழலை பழைய பாதைக்குக் கொண்டுவர பாதுகாப்பான ஒரு ஆட்டத்தில் அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3% என்பது மேலும் 0.5% அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுகூட குறையும் வரி வருவாயை உத்தேசித்துத்தானே தவிர, அரசின் செலவை அதிகப்படுத்த அல்ல. 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 10% ஆக இருக்கும் என்ற நன்னம்பிக்கையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7.5% ஆக இருக்கும் என்று அது குறிப்பிடுகிறது. அதாவது, பொருளாதாரம் அதிவேகத்தில் மீட்சி பெற்றால்தான் 10% வளர்ச்சி சாத்தியம். நிறுவன வரி வசூல் 11.54% அதிகமானதால், மொத்த வரி வருவாயும் 11.99% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறைந்து, நிறுவன வரியும் குறைக்கப்பட்டிருக்கும் சூழலில், எந்த அடிப்படையில் அரசு இப்படி மதிப்பிடுகிறது என்று தெரியவில்லை; வியப்பாக இருக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2,10,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம், ‘பாரத் பெட்ரோலியம்’ ஆகியவற்றின் பங்குகள் விற்கப்படும் என்று அறிவித்தார்கள், இப்போது ‘எல்ஐசி’ நிறுவனப் பங்குகளையும் பொது வெளியீடு மூலம் விற்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வழக்கமான உரிமக் கட்டணம், அலைக்கற்றை ஏலம் மூலம் வருவாய் என்று மொத்தம் ரூ.1,33 லட்சம் கோடி கிடைக்கும் என்பது மற்றொரு எதிர்பார்ப்பு. பங்கு விலக்கலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்தான இந்த வருவாயும் சேர்ந்தாலே அடுத்த நிதியாண்டில் அரசு எதிர்பார்க்கும் வருவாயில் 11% கிடைத்துவிடும் என்று அரசு நம்புகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் அரசுக்கு அள்ளிக்கொடுக்கும் நிறுவனங்களின் மேல் கை வைப்பது நீண்ட கால நோக்கில் இழப்பாகவே அமையும்.

வருமான வரி விதிப்பில் ஏற்கெனவே உள்ள முறைமையோடு புதிதாக இன்னொரு முறைமையையும் அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே வீட்டுக்கடன், சிறு சேமிப்புகளில் முதலீடு, காப்பீடுகளில் முதலீடு போன்றவற்றைச் செய்தோர் அவற்றைத் தொடர விரும்பினால் பழைய வருமான வரி முறைமையில் தொடரலாம்; எந்தச் சலுகையும் விலக்கும் வேண்டாம் என்று முடிவெடுத்தால் வருமான வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ள புதிய முறைமைக்கு மாறிக்கொள்ளலாம். ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை என்று தொடங்கி ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25% வரி என்று முடியும் புதிய மாற்றங்களுடனான புதிய முறைமை வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புத் திட்டங்களிலிருந்து விலகியிருப்போருக்குச் சற்று வரியை மிச்சப்படுத்தும். சேமிப்புக்கு அளிக்கப்பட்ட ஊக்குவிப்பு இப்போது நுகர்வுக்கும் அளிக்கப்படுவது இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகிறது. வங்கிகளில் வைப்புத்தொகை முதலீடு செய்வோர் மகிழ்ச்சி அடையும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. ஒருவர் வங்கியில் எவ்வளவு தொகை வைப்புத்தொகை வைத்திருந்தாலும், வங்கிக்கு ஏதாவது நேரிட்டால் ஒரு லட்ச ரூபாயை மட்டுமே அதிகபட்சம் திரும்பப் பெற முடியும் என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது முதலீட்டாளர்களுக்கும், முதலீடுகளுக்கும் உத்வேகம் அளிக்கும். நிறுவனங்கள் அறிவிக்கும் லாப ஈவுகள் (டிவிடெண்ட்) மீதான விநியோக வரி (டிடிடி) ரத்துசெய்யப்படுகிறது. இது வரிச் சீர்திருத்தத்தில் முக்கியமானது. ஆனால், லாப ஈவு பெறுவோர் அதைத் தங்களுடைய வருவாயுடன் சேர்த்து, அதற்கு வரி செலுத்த வேண்டும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மரச்சாமான்கள், பொம்மைகள், மின் விசிறிகள் போன்றவற்றை விலை குறைவாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்கும் விதமாக, அவற்றுக்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதியாகும் சில பண்டங்களின் விலை உயரும், ஆனால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்.

செலவு இனங்களில் நிதியமைச்சர் கடுமை காட்டியிருக்கிறார். பல சமூக நலத் துறைகளுக்குக் கடந்த முறை ஒதுக்கப்பட்ட அளவைத் ஒதுக்கீடு பெரிய அளவில் தாண்டவில்லை. சமூக நலத் திட்டங்களுக்கான நிதிக்குறைப்பு நீண்ட காலப் பாதிப்புகளை உண்டாக்கும். அதேபோல, மாநிலங்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான கவலைகள் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டியவை.

மொத்தமாகப் பார்க்கும்போது, ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் நிதியாண்டில் அரசின் செயல்பாடுகளே இந்த நம்பிக்கைக்குப் பதில் சொல்வதாக அமையும்.

Will the economy improve by selling shares of public sector companies?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *