சென்னை: “நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி உள்ளிட்ட தமிழகத்தின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “தமிழ்நாட்டு மக்கள் ஆதரவுடன் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பிரதமர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தொடங்கிவைக்க வந்துள்ள உங்களுக்கு, பொதுமக்கள் சார்பிலும், முதல்வர் என்ற அடிப்படையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள்.
தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக உள்ளது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை என்று பல துறைகளில் தமிழ்நாடு நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. இந்த வளர்ச்சி சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என்று அனைவரையும் உள்ளடக்கியது. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்
நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தில் தமிழக அரசு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். இதுதான் உண்மையான கூட்டுறவு, கூட்டாட்சி.
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் காலப்போக்கில் ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைவதால் மாநிலம் அரசின் பங்கு உயருகிறது. மேலும் பயனாளிகளில் செலுத்த வேண்டிய தொகையும் மாநில அரசுதான் ஏற்கிறது. இதன் காரணமாக மாநில அரசின் நிதி சுமை உயருகிறது.
எனவே, தொடக்கத்தில் கூறிய ஒன்றிய அரசின் பங்கு, திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாகளின் பங்களிப்பு ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும்.
கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம், ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இழப்பீடு காலத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நம்புகிறேன்
நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல ‘உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’ எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எட்ட, மக்கள் நலத்திட்டங்களை இணைந்து செயல்படுத்துவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.