அமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்!

பதினேழாவது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு 91 தொகுதிகளில் பெரும்பாலும் அமைதியாகவும் வாக்காளர்களின் உற்சாகப் பங்கேற்புடனும் முடிந்திருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் இன்னும் ஆறு பாக்கியிருக்கின்றன. எஞ்சியுள்ள கட்டங்களில் கொஞ்சமும் வன்முறைக்கு இடம் தராமல் நேர்மையாகவும் சுயேச்சையாகவும் வாக்குப் பதிவு நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆந்திரம், அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிஷாவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்தே வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. திரிபுராவில் 81.8%, வங்கத்தில் 81%, ஜம்முவில் 72%, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லாவில் 35% என வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் 1.7%, வாக்குப் பதிவு இயந்திரப் பகுதியில் 0.73%, கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் 0.61% பழுதடைந்து உடனே மாற்றப்பட்டுள்ளன. ஆந்திரத்திலும் ஜம்மு-காஷ்மீரிலும் அங்கும் இங்குமாக வன்செயல்கள் நடந்துள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் சந்தேகம் கிளப்பியதால் எல்லா வாக்குப் பதிவு இயந்திரங்களுடனும் ஒப்புகைச் சீட்டுப் பிரிவு இணைக்கப்பட்டுவிட்டது. வாக்களித்தபடிதான் பதிவாகியிருக்கிறதா என்று பரிசோதிக்க ஒரு மக்களவைத் தொகுதி, ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தலா ஒரு இயந்திரம் வீதம் ஒப்புகைச் சீட்டை எண்ணி சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நடைமுறை மீது நம்பிக்கை தொடர இத்தகைய நடவடிக்கைகள் அவசியம்.

ஆணையத்தின் ‘பறக்கும் படைகள்’ நாடு முழுவதும் இதுவரையில் ரூ.2,426 கோடி மதிப்புள்ள ரொக்கம், மதுபானம், போதை மருந்து ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளன. நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்கும் ‘நமோ டிவி’ என்ற பெயரில் அவருக்கு ஆதரவான கருத்துகளை ஒளிபரப்பும் தனி அலைவரிசைக்கும் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பது சரியான நடவடிக்கை. எனினும், தேர்தல் பரப்புரையில் ராணுவத்தின் சாதனைகள் தொடர்பாகப் பேசக் கூடாது என்ற நடத்தை நெறிமுறையைப் பிரதமரே மீறியிருப்பதாக வரும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் மவுனம் சாதிப்பது, அதன் நடுநிலையில் விழுந்திருக்கும் கறைதான்.

பறக்கும் படையினர் பணத்தைக் கைப்பற்றுவதும், வருமான வரித் துறை நடத்தும் திடீர் சோதனைகளும் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. தேர்தல் நடத்தை நெறிகள் மீறப்படுவதாக வரும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசும் தன் பங்கைச் செவ்வனே ஆற்ற வேண்டும்.

தி ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP