உலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலில், தமிழ்நாடு – புதுவைக்கான பங்களிப்பு நாள் இன்று. மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்றும் நாளையும் நடைபெறவிருப்பது இந்தத் தேர்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. இரு தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகளுமே பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் மீதான தீர்ப்பாகவும், ஆட்சி தொடர்வதற்கோ ஆட்சி மாற்றப்படுவதற்கோவான மக்களின் உத்தரவாகவோ மாறுவதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.
வரலாறு நெடுகிலும் சாதிய – நிலவுடைமைச் சமூகமாகச் செயல்பட்டுவந்த இந்தியா போன்ற ஒரு நாட்டில், எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தது ஒரு வரலாற்றுப் புரட்சி – இந்திய சுதந்திரத்தோடு நம்முடைய முன்னோடிகள் இணைப்பாக நமக்குக் கொடுத்துவிட்டுப்போன மாபெரும் ஜனநாயக உரிமை அது. ஆனால், அந்த உரிமையை நாம் எந்தளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்று யோசிக்கையில் வேதனைதான் மிகுகிறது. ‘என் ஒரு ஓட்டு இல்லாவிட்டால் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டுவிடப்போகிறது அல்லது என் ஒரு ஓட்டால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது?’ என்பதுதான் தன்னுடைய வாக்குரிமையை வீணாக்கும் ஒவ்வொருவரும் எழுப்பும் முதல் கேள்வி.
ஜனநாயகத்தில் எந்த மாற்றமும் தலைகீழாக ஒருநாளில் நடந்துவிடுவதில்லை; அதன் பலகீனம்போல பலராலும் ஏசப்படும் இந்த அம்சம்தான் அதன் பெரிய பலமும். ‘ஒரு ஓட்டால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு ஓட்டால் எல்லாமே மாறிவிடும்’ என்பதற்கு இந்திய உதாரணங்களே நிறைய இருக்கின்றன. அரசமைப்பு நிர்ணய சபையில் இந்தியை ஆட்சிமொழியாக்குவது தொடர்பாக 1949-ல் நடந்த வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமமான ஓட்டுகள் விழுந்தன; அவை முன்னவராக இருந்த ராஜேந்திர பிரசாத், இந்திக்கு ஆதரவாகத் தன் ஓட்டை அளித்தார்; ஒரே ஓட்டில் இந்தியாவின் ஆட்சிமொழியானது இந்தி. ஒரு ஓட்டு ஒரு அரசாங்கத்தையே வீழ்த்தியது இந்நாட்டில். 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 272-273 என்ற ஒரே ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஆட்சியே கவிழ்ந்தது. சரி, ஒரு சாதாரண குடிமகனின் ஓட்டுக்கு இத்தகைய முக்கியத்துவம் இருக்கிறதா என்ற கேள்விக்கும் உதாரணங்கள் தொடர்கின்றன. 2004 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், சந்தேமர்ஹள்ளி தொகுதியில் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஓட்டில் தோற்றார்; ஒரு ஓட்டில் வென்ற வேட்பாளர் துருவ்நாராயணா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2008 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் நத்வாரா தொகுதியிலும் இதுவே நடந்தது. சி.பி.ஜோஷி ஒரு ஓட்டில் தோற்றார்; கல்யாண் சிங் சவுகான் ஒரு ஓட்டில் வென்றார்.
இந்தியாவில் இன்றளவும் ஆளுங்கட்சியாக வரக்கூடிய கட்சிகள் பெறும் ஓட்டுகளுக்கு இணையான ஓட்டுகள் தேர்தலுக்கு வெளியே இருக்கின்றன என்பது இந்தியர் ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விஷயம். 2014 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் 31% என்றால், மொத்த வாக்காளர்களில் வாக்களிக்காதவர்களின் விகிதம் 33.6%. ஆனால், இப்படி தங்கள் ஜனநாயகக் கடமைகளிலிருந்து விலகி நிற்பவர்கள்தான் சமூகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் விமர்சிப்பதில் முதல் வரிசையில் இருக்கிறார்கள் என்பது நம் நாட்டின் இன்னொரு துயரம். வாக்களிப்பதில் நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள், வசதியானவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது மேலும் மேலும் சங்கடத்தை உண்டாக்கும் தரவு. அரசியலின்றி நாம் எவரும் இல்லை. நமக்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் வெளிப்படுத்தும் அக்கறையின்மை இந்தச் சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாகத் தொடர்வதற்கான, சமூகத்தை விமர்சிப்பதற்கான அடிப்படைத் தகுதியையே இழக்கச்செய்துவிடுகிறது. ஆகையால், வாக்களிப்போம். சாதிக்காக, மதத்துக்காக, பணத்துக்காக அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைக் கருதி நமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம்!