தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக எழும் மக்கள் குரல்கள் நசுக்கப்படும் காலம் இது. மதுக் கடைக்கு எதிராகப் போராடும் பெண்களின் கன்னத்தில் விழும் அறையில் நம் மனம் அதிர்கிறது. உரிமைக் குரல்கள் மீதான அடக்குமுறையின் மற்றொரு அடையாளம்தான் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது. இதழியல் மாணவியான வளர்மதியும் ஜெயந்தி எனும் பெண்ணும் ஜூலை 12 அன்று சேலம் கோரிமேட்டில், அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி முன்பு நின்றுகொண்டு சில துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டையில் நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கும் வாசகங்கள் அடங்கிய அந்தத் துண்டுப் பிரசுரங்களில் நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்களும் இருந்தன. அவர்கள் செய்த ‘குற்றம்’ இதுதான்.
வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தபோதுதான், இந்தப் பிரச்சினையை எந்த எல்லைக்கு எடுத்துச் செல்லத் தமிழக அரசும் காவல் துறையும் விரும்புகின்றன என்பது தெரியவந்தது. இதற்கிடையே ஜெயந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதால் வளர்மதி ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படும் அபாயம் இருக்கிறது. இயல்பாகவே பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் அவரது போராட்ட குணத்துக்காகத்தான் இன்றைக்கு ‘நக்ஸல்களுடன் தொடர்புடையவர்’ எனும் முத்திரை அவர்மீது விழுந்திருக்கிறது.
முதல் மாணவி
“அவர் மீது ஆறு வழக்குகள் இருக்கின்றன. ஒன்றல்ல – ஆறு வழக்குகள்” என்று விளக்கம் வேறு தருகிறார் முதல்வர் பழனிசாமி. ஆனால், “அவற்றில் இரண்டு வழக்குகள் மாணவர்களின் உரிமை தொடர்பான போராட்டங்கள் தொடர்பானவை. மற்ற நான்கு வழக்குகளும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் தொடர்பானவை” என்று குறிப்பிடுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன். குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் முதல் மாணவி இவர்தான் என்கிறார் அவர்.
இலங்கை உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை, போலீஸாரின் தடையை மீறி நடத்த முயன்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஐ.நா. சபை வரை எதிரொலித்த இந்த அத்துமீறல் நடவடிக்கையிலிருந்து அரசு பின்வாங்கவேயில்லை.
1980-களில் பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது குண்டர் சட்டம். 1982-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்று நீளும் இந்தச் சட்டத்தை மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது திணித்து அடக்குமுறையில் ஈடுபடுகிறது அரசு.
கருத்துரிமைக்கு இடமில்லையா?
“அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில், ஐபிசி 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளர்மதி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். உண்மையில், முப்படைகளுக்கு எதிராக, கலவரத்தைத் தூண்டும் விதத்திலான தகவல்களை வெளியிட்டாலோ, அந்தத் தகவல்களால் அரசு முடங்கிப்போகும் அபாயம் இருந்தாலோ, பொது அமைதி முற்றிலும் சீர்கெட்டுப் போகும் அளவுக்கு இருந்தாலோதான் ஐபிசி 505 பிரிவு பொருந்தும்.
1962-ல் கேதார்நாத் – எதிர் – பிஹார் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. கருத்துரிமைக்கு ஆதரவான போராட்டங்களை வைத்து இந்தப் பிரிவின் கீழ் கைதுசெய்யக் கூடாது” என்கிறார் பாலமுருகன்.
ஆனால், பல்வேறு வகைகளில் மத்திய அரசு தரும் அழுத்தத்தை மக்களின் தலைமேல் வேறு வடிவங்களில் சுமத்திவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியம் மிக்க தமிழக அரசிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? “ஜனநாயகம் என்று ஆறு ஏழு முறை போராட்டம் வெளியே நடத்திக்கொண்டிருந்தால் மாநிலச் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக் காக்க முடியும்?” என்று கேட்கும் முதல்வர் பழனிசாமி, அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் அதைவிட தங்கள் கட்சிப் பிரச்சினைகளுக்காகவும் போராடியதை, போராடுவதை அறியாதவரா? அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை எத்தனை வழக்குகளைச் சந்திக்கிறார்கள்!
ஏன் போராட்டங்கள்?
மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 2015-ல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் அதிக அளவிலான போராட்டங்களை நடத்தியவர்கள் அரசியல் கட்சியினர்தான் என்பது வேறு விஷயம். போராட்டத்துக்கான தேவைகள்தான் கவனிக்கப்பட வேண்டியது. குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அரசு சேவைகள் தொடர்பான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தியே அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள் நடந்தன. அரசு ஊழியர்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் பங்கெடுத்தனர். அப்போதும் போராட்டக்காரர்கள்மீது கடும் நடவடிக்கைகள் பாய்ந்தன. இப்போது, ஒருபடி மேலே போய், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர்மீது ‘நக்ஸலைட்டுகள்’ என்று முத்திரை குத்துவதுபோல், தமிழக அரசும் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி தருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை, அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சமூக விரோதிகள் பலர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படாமல் துணிச்சலாக உலவிவரும் சூழலில், சமூகச் செயற்பாட்டாளர்கள்மீது இத்தகைய ஆயுதங்களைப் பிரயோகிக்கிறது அரசு. குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர் இளைஞர்களிடம் வளர்ந்துவரும் அரசியல் விழிப்புணர்வை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் சத்தமில்லாமல் எடுத்துவருகிறது. கதிராமங்கலத்தில் போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 நாட்களான பிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் பிணையில் வெளிவருவதைத் தடுக்க ஓஎன்ஜிசி நிறுவனமும் சட்டரீதியான அழுத்தம் தருகிறது. மதுக் கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகளைக் காவல் துறை எடுத்துவருகிறது.
மாற்றுக் கருத்தின் அவசியம்
அரசியலமைப்புச் சட்டம், ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை மட்டும் வழங்கவில்லை, மக்களுக்கான உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி பொதுமக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஜனநாயக முறைப்படிப் போராடுவதை நசுக்க, அரசுக்குத் தார்மிக உரிமை இல்லை.
வளர்ச்சித் திட்டங்கள் என்று கொண்டுவரப்படும் திட்டங்களால் அபாயங்கள் நேர்ந்தாலும், தலைமுறைகள் தாண்டி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் அரசு மக்கள் பக்கம் நிற்காது; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எப்படியேனும் தப்பித்துக்கொள்ளும் என்பதற்கு நம்மிடம் போபால் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட பல உதாரணங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நியாயமான அச்சங்களைப் போக்குவது, பதற்றமான தருணங்களில் மக்களுக்குத் துணை நிற்பதுதான் அரசின் கடமை. மாறாக, இங்கு அரசு என்றாலே மக்கள் அஞ்சும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
எதிர்ப்பு, மாற்றுக் கருத்து ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பதை அரசுக்கு எதிரான கிளர்ச்சி எனும் அளவுக்குச் சித்தரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. அறவழிப் போராட்டம்தான் நம் நாட்டின் சுதந்திரத்துக்கே வழிவகுத்தது என்பதை நாம் மறந்துவிட்டோமா? அறவழியில் வெளிப்படுத்தும் எதிர்ப்பையும், மாற்றுக் கருத்தையும் தொடர்ந்து ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகார ஆட்சியை நோக்கி மத்திய, மாநில அரசுகள் நகர்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவுசெய்யலாம். அந்த வகையில் உரிமைக் குரல் கொடுப்பவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவாதத்தை அரசு தர வேண்டும். இல்லையேல், அறவழியிலான மாற்றுக்குரல்களை நசுக்கும் அரசு எனும் அவப் பெயர்தான் தமிழக அரசுக்கு ஏற்படும்!
– வெ.சந்திரமோகன்,