அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்னமும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது.
‘அமெரிக்காவால் பிற நாடுகள் செல்வந்தர் ஆனதெல்லாம் போதும்’ என்று பதவி ஏற்ற உடனேயே ட்ரம்ப் ஆற்றிய உரை, உலக நாடுகளை கொந்தளிக்க வைத்தது. ‘அமெரிக்காவால்’ செல்வம் கொழித்த நாடு என்று எதுவும் இருப்பதாகத் தெரிய வில்லை. உண்மையில், சர்வதேச உடன்படிக்கைகள், அமெரிக்கா வுக்கு சாதகமாக இருப்பதாகவும், பிற நாடுகளின் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுரண்டு வதற்கு வழி வகுப்பதாகவும்தான் பரவலாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
தற்காலிக தடை
அமெரிக்க – மெக்ஸிகோ இடையே சுவர் எழுப்ப இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. இதற்கான செலவை மெக்ஸிகோ ஏற்க வேண்டும் என்றும் ட்ரம்ப் சொல்லி வருகிறார். மெக்ஸிகோவுடனான தகராறு போதாது என்று, இஸ்லாமிய நாடுகளைக் குறி வைத்தும் காய்களை நகர்த்தி இருக்கிறார் ட்ரம்ப்.
ஈரான், இராக், ஏமன், சூடான், லிபியா, சோமாலியா, சிரியா பயணிகளுக்கான விசா வழங்க தற்காலிகத் தடை, எல்லா நாட்டு அகதிகளுக்கு 120 நாட்களும், சிரிய அகதிகளுக்கு நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா நாட்டுப் பயணிகளுக்கு, மிகக் கடுமையான ஆய்வுக்குப் பிறகே அனுமதி. அடுக்கடுக்காக வருகிற அறிவிப்புகள் பல நாடுகளை அச்சத்தில் உறைய வைத்து இருக்கின்றன.
மோசடி நாடகம்
அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, அதிபர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட அன்றே, அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராகத் தெருக்களில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தேர்தல் வெற்றியே, ரஷ்யா நடத்திய மோசடி நாடகம் மூலம் கிட்டியதுதான் என்று அமெரிக்க மக்களில் சிலர் கருதுகின்றனர்.
சில நாட்களுக்கு முன், கனடா நாட்டின் அகதிகள் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்று இருக்கிறார் அகமது ஹசன். தற்போது 41 வயதான ஹசன், தன்னுடைய 16-வது வயதில், சோமாலியாவில் இருந்து அகதியாக கனடாவில் தஞ்சம் புகுந்தார். கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. வரலாறு, தொடர்ந்து சட்டம் படித்து முடித்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். 2001-ல் பொதுச் சேவையில் இறங்கினார். ஓர் அகதியாக நுழைந்து அமைச்சராக உயர்ந்து புதிய நம்பிக்கைச் சரித்திரம் படைத்து இருக்கிறார் அகமது ஹசன்.
கனடா மட்டும் விதி விலக்கு
எல்லா நாடுகளிலும் அகதிகள் இரண்டாம் தரக் குடிமகன்களாகவே நடத்தப் படுகின்றனர். கனடா மட்டும் விதி விலக்கு. அங்கு அகதி, குடிமகன் என்கிற பேதம் அறவே இல்லை. மற்ற குடிமக்களுக்கு இருக்கிற அத்தனை உரிமைகளையும் அகதிகளுக்கும் உறுதி செய்கிறது.
அவர்களின் நலனில் முழுமையான உண்மையான அக்கறை செலுத்துகிறது. முந்தைய ஆறு ஆண்டுகளில் 1460 நாட்கள் (அதாவது 4 ஆண்டுகள்) கனடாவில் வாழ்ந்து இருக்க வேண்டும்; 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அவ்வளவுதான். கனடா நாட்டின் குடிமகன் ஆகி விடலாம். இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்பதால், எந்த நாட்டு அகதியும் இந்த முறையில் கனடா தேசத்தவன் ஆகிவிடலாம்.
அகதிகளையும், கல்வி, பணிக் காகக் குடியேறுகிறவர்களையும் கனடா நாட்டு மக்களும் மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்கின்றனர். அண்டை நாடான கனடா காட்டுகிற இந்த வழிமுறையை அமெரிக்காவும் பின்பற்றலாம்.
சமீபத்திய புள்ளி விவரப்படி, 65.3 மில்லியன் மக்கள், கட்டாய மாக இடம் பெயர்ந்தவர்கள். அதாவதுவேறு வழியின்றி வெளி யேறியவர்கள். உலகில் மொத் தம் உள்ள அகதிகளில் பாதிக்கு மேல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலோர், சிறுவர்கள், குழந்தைகள். இவர்களைத் தான் அமெரிக்கா, ‘முத்திரை குத்தி’ உள்ளே வர விடாமல் தடுக்கிறது.
அதிபர் கையில்…
அண்டை நாடுகள், இஸ்லாமிய நாடுகள் வரிசையில், ஐரோப்பிய நாடுகளும் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவும் எதிர்ப்பும் இன்னும் சில வாரங்களில் தெளிவாகும்.
உலக நாடுகளால் தனிமைப் படுத்தப்பட்ட எந்த நாடும் வளர்ந்த தாக சரித்திரம் இல்லை. இதனை எத்தனை விரைவில் ட்ரம்ப் உணர்ந்து கொள்கிறாரோ, அத்தனைக்கு அமெரிக்கா வுக்குமே கூட நல்லது. இல்லை யேல்….,
‘முதலில் அமெரிக்கா’ என்கிற கோஷம் ‘முடிவில் அமெரிக்கா’ என்று பரிணமிக்கலாம். அமெரிக்காவின் வாழ்வும் தாழ்வும் – அமெரிக்க அதிபரின் கையிலே!