உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முடிந்துள்ளது. காங்கிரஸுக்குச் சாதகமானது இது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் கடைசி நேரப் பதற்றங்கள் இருந்தன என்றாலும், இறுதியாக, சமாஜ்வாதிக்கு 298 இடங்கள், காங்கிரஸுக்கு 105 என்று தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.
இரண்டு கட்சிகளுக்கும் சரியான வாய்ப்புகளை இந்தப் பங்கீடு உருவாக்கியுள்ளது. கிடைக்க வேண்டியதைவிட அதிக மாக இருவருக்கும் கிடைத்துள்ளது என்றும் சொல்லலாம். இரு கட்சிகளுக்கும் இது சரியான நேரமும்கூட. ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி, தனது ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அது மட்டும் அல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் வெறும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்றனர். அந்தப் பின்னடைவையும் அந்தக் கட்சி எதிர்கொண்டாக வேண்டும். முதல்வர் அகிலேஷ், தனது அப்பா முலாயம் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீறிக் கட்சியைத் தனது கட்டுப் பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு, கட்சி சின்னமான சைக்கிளை யும் கைப்பற்றிக்கொண்ட கடுமையான காலகட்டத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார். காங்கிரஸும் அப்படித்தான். கட்சியின் வரலாற்றில் ரொம்ப மோசமாக அது தோற்றுப்போனது, 2014 மக்களவைத் தேர்தலில்தான். வெறும் 8% வாக்குகளை மட்டுமே பெற்றது. கட்சியின் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் இருவர் மட்டுமே அங்கு ஜெயித்தனர். ஆக, இந்தத் தேர்தலிலிருந்தே அது மீண்டெழ வேண்டும். இருவருக்கும் முன்னுள்ள பெரிய சவால், பொது எதிரி பாஜக. அதுதான் இதுநாள் வரை இல்லாத வகையில் இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கி யிருக்கிறது. முலாயம் சிங் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் உறவுகளில் போதுமான நம்பகத்தன்மை இல்லை. சமாஜ்வாதியினர் தங்களின் வாக்குகளைக் காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதில்கூட அவநம்பிக்கை இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் 42% வாக்குகளையும் 72/80 இடங் களையும் பெற்றது பாஜக. இதுவே உத்தரப் பிரதேச அரசியல் கள ஆட்டங்களை மாற்றியமைக்க அடிப்படையானது.
முதல்வர் அகிலேஷ் இந்தக் கூட்டணியின் மூலம் பாஜக, பகுஜன் சமாஜுக்குக் கடும் போட்டியை உருவாகியிருக்கிறார். சமீபத்திய நடவடிக்கைகளின் மூலம் தன்னை ஒரு வலுவான தலைவராக மறுவார்ப்பு செய்துகொண்டிருக்கிறார் அவர். “அதிகாரத்துக்காக அல்ல, கொள்கைக்காகவே கட்சிக்குள் சண்டை போடுகிறேன்” என்று அவர் மக்களிடம் பேசுவது எடுபடுகிறது. ஆக, சமாஜ்வாதி இந்தக் கூட்டணியின் பலனை அறுவடை செய்வது உறுதியாகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதுதான் பெரிய கேள்வி. ஏனென்றால், காங்கிரஸைப் பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உத்தரப் பிரதேசத்தோடு முடிவதல்ல; இன்றைய தேதியில் அங்கிருந்துதான் ஆட்டம் தொடங்கவுள்ளது!