அரசியல், கட்டுரை, சிந்தனைக் களம், தமிழ்நாடு, தேர்தல்

ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, அத்தொகுதியைப் பற்றி காலம்காலமாக நம்பப்பட்டுவந்த பல விஷயங்களை வலுவிழக்க வைத்துவிட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இதுவரைக்கும் அரசியல் செய்துவந்த தலைவர்களுக்கும்கூட இப்போது ஒன்றும் புரியாத நிலை உருவாகியிருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில், மற்ற தொகுதிகளைவிட சற்று கூடுதலான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். அந்த வாக்குகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே காய் நகர்த்தலைத் துவங்கின. இதையே முதலீடாக வைத்து, சிறுபான்மையினர் அமைப்புகள் சிலவும், பெரிய கட்சிகளின் தலைவர்களோடு நட்பு பாராட்டினார்கள். நாங்கள் சொன்னால், சிறுபான்மையினர் அவ்வளவு பேரும் உங்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று சொல்லி மாலை மரியாதைகளையும் பெற்றார்கள்.

எப்போதுமே தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளின் நலனுக்காக மட்டுமே சிந்திப்பவர்கள் அவர்கள். அடுத்த தேர்தல் எந்தக் கட்சியோடு கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்ற கணக்குகளைச் சரியாகப் போடும் அந்த அமைப்புகளின் தலைவர்களால் கடைசியில் சிறுபான்மையின மக்களின் எண்ண ஓட்டங்களைக் கணித்தறிய முடியாமல் போனது.

ஒரே வெற்றிச் சூத்திரம்

இடைத்தேர்தல் என்றாலே, அதற்கென்று ஒரு சூத்திரம் இருக்கிறது. வாக்காளர்களில் பெரும்பான்மை – சிறுபான்மை என்ற வேறுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. அதை நன்கு புரிந்துகொண்டு, அதை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வெற்றியை வசப்படுத்திக்கொண்டார் தினகரன். சிறுபான்மையின மக்களுக்கு ஜெயலலிதா செய்த நன்மைகள் ஏராளம்; அதனால்தான், கடந்த தேர்தல்களில் சிறுபான்மையின மக்கள் ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் வாக்களித்தனர். அதேபோல, அவர் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் நம்மையும் நம்பி அவர்கள், வழக்கம்போல நமக்கே வாக்களிப்பர் என்று நம்பினார்கள், பழனிசாமியும் பன்னீர்செல்வமும், .

மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆதரவைப் பெற்றிருக்கும் அதிமுக தலைவர்கள், இரட்டை இலைச் சின்னமும், ஆட்சி அதிகாரமும், பாஜக ஆதரவு வாக்குகளும் தங்களை வெற்றிபெறவைக்கும் என்று நம்பினார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற திமுகவோ, ‘ஜெயலலிதா என்ற ஆளுமையை எதிர்த்துப் பெற்ற வாக்குகளோடு சிறுபான்மையினரின் கட்சிகள் பெற்றுத் தரும் வாக்குகளும் சேர்வதோடு, அதிமுக, இரு கூறாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், ஆர்.கே.நகரில் எளிதாகப் பெற்றுவிடலாம்’ என உறுதியாக நம்பி தேர்தல் வேலை பார்த்தது. கடைசியில், இடைத்தேர்தலின் வெற்றிச் சூத்திரம்தான் நிரூபணமாகியிருக்கிறது.

சிறுபான்மையினர் யார் பக்கம்?

சிறுபான்மையினர் அமைப்புகளின் தலைவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அவ்வின மக்களும் வாக்களிப்பார்கள் என்பது நீண்ட கால நம்பிக்கைகளில் ஒன்று. இந்த நம்பிக்கையை ஆர்.கே.நகரில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் தகர்த்தெறிந்துவிட்டனர். கடந்த சில தேர்தல்களாகவே இந்த நம்பிக்கையை அவர்கள் அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலும், இடைத்தேர்தலில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. தாங்களும் சராசரி வாக்காளர்கள்தான் என்பதை ஓங்கிச் சொல்லியிருக்கின்றனர். அதாவது, சிறுபான்மையினரின் இயக்கம் என்று சொல்லி அமைப்புகளை நடத்துபவர்கள், ‘சிறுபான்மையினரின் வாக்குகள் அனைத்தும் நாங்கள் சொல்கிறவர்களுக்குத்தான்’ எனச் சொல்லி, பெரிய கட்சிகளிடம் கூட்டணி பேரம் பேசுவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையின மக்களுக்கு என்று தனியாக சமையல் எரிவாயு விலையோ, பேருந்துக் கட்டணமோ, சாலை வசதிகளோ, தண்ணீர் வசதியோ கிடையாது. எல்லாரையும் போலவேதான் அவர்களும் வாழ்வின் நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்திலும் அல்லல் படுகிறார்கள். அப்படி இருக்கும்போது, தேர்தலில் வாக்குகளைப் பெறும்போது மட்டும் அவர்களைச் சிறுபான்மையின மக்களாக அரசியல் கட்சிகள் பிரித்துப் பார்க்கின்றனர். அந்த மாய வலைப்பின்னல் இப்போது அறுந்துபோயிருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் சாதி அரசியலும்கூட முழுமையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில், இந்து அடையாளமாகக் கருதப்படும் பாஜக 3,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. அத்தொகுதியில் 20%-க்கும் கூடுதலான எண்ணிக்கையில் நாடார் சமூகத்தினர் வசிக்கிறார்கள். எனவே, இந்தத் தேர்தலில் நாடார் சமூகத்தினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளிவிடலாம் என்று அதே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரைக் களத்தில் இறக்கியது. அவர் பெற்ற வாக்குகள் சுமார் ஆயிரம்தான். ஆக, சாதியைப் பார்த்து யாரும் வாக்களிக்கவில்லை.

அதிமுகவின் மதுசூதனனும், தெலுங்கு பேசும் நாயுடு மக்கள் பெருமளவில் தொகுதிக்குள் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என நம்பிக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததுபோல நடந்திருந்தால், அவர் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடைசியில் சாதி, மதம் என கணக்குகள் போட்டுக் களத்துக்கு வந்த கட்சிகளுக்குப் பெரும் அடி கிடைத்ததோடு, அந்தத் தொகுதிக்கு தொடர்பே இல்லாத தினகரன் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். சாதி, மதங்களை மட்டும் பார்த்து வாக்களிக்கும் வழக்கம் வாக்காளர்களிடம் இல்லை என்பதை, ஆர்.கே.நகர் தேர்தல் தெளிவாக நிரூபித்திருக்கிறது.

எந்தச் சின்னத்துக்கும் மக்கள் மத்தியில் நிரந்தர அபிமானம் இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. இரட்டை இலை சின்னத்துக்காகத் தேர்தல் ஆணையத்தில் பல மாதங்கள் போராடிப் பெற்ற அதிமுக, ஆர்.கே.நகரில் வெற்றிபெறவில்லை. ஆனால், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, குக்கர் சின்னத்தைப் பெற்ற தினகரன் வெற்றிபெற்றிருக்கிறார். சின்னத்துக்கென வாக்களிக்கும் காலமெல்லாம் கடந்துவிட்டது என்பதையும், தினகரன் வெற்றி காட்டுகிறது. இப்படிப் பல தேர்தல் நம்பிக்கைகளை உடைத்திருக்கும் தினகரனின் வெற்றி, அவருக்கு எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வியும் எழவே செய்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்கள் வாக்களிப்பதும் அதன் மூலம் பெறுகின்ற வெற்றியும்கூட, நிச்சயம் ஜனநாயகத்துக்குக் கேடானதுதான்!

– புதுமடம் ஜாபர் அலி,

-தி இந்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *