கட்டுரை, சிந்தனைக் களம், சுற்றுப்புறம், தமிழ்நாடு

இன்று தண்ணீர்… நாளை காற்று

இயற்கை சீரழிந்து வருவதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாததால், தண்ணீருக்காக கொலைகள் கூட நடந்து வருகின்றன. தண்ணீரை தொடர்ந்து சுத்தமான காற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம். தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்க முடியும். சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க முடியுமா? உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக
உருவெடுத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 46 லட்சம் பேர் சுவாச பிரச்னை காரணமாக இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் இறப்பதாக, டெல்லியை சேர்ந்த அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் தலைநகர் டெல்லி முன்னிலையில் உள்ளது. நகரம் முதல் குக்கிராமங்கள் வரை வாகன எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மாசுபாட்டுக்கு, வாகனப்புகை முக்கியக் காரணம். காற்று மாசுபாடு அதிகரித்தால் காய்ச்சல், கண் எரிச்சல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. காற்று மாசு அதிகரித்துக் கொண்டே சென்றால் இயற்கை சீரழிவு கூட ஏற்படலாம். அவற்றின் உச்சக்கட்டம் ‘அமில மழை’ என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நகர வளர்ச்சி, சாலைப்பணிக்காக ஏராளமான மரங்களை வெட்டித் தள்ளுகிறோம். வெட்டிய மரங்களுக்கு பதிலாக கூடுதலாக மரக்கன்றுகள் நடுவதில்லை. இதனால் நச்சு வாயு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. வெப்பமயமாதலை குறைக்க, தூயக்காற்றின் மிகச்சிறந்த தோழனான மரங்களை அதிகளவு வளர்க்க வேண்டியது அனைவரின் கடமை. காற்று மாசு, அதன் விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் அதிகளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களின் தரத்தை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

நகர் பகுதிகளில் திடீரென காற்று மாசுபாடு அதிகரித்தால், உடனே அதற்கான காரணத்ைத கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசுபாடுக்கான காரணங்களை கண்டறிந்து, அதை குறைப்பதற்கான மாற்று முயற்சியில் இறங்க வேண்டியது அரசின் கடமை. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என்பதால், பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான காற்று மாசு நிலை வெகுதூரத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தனிநபர் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும். மக்கள் பொதுவாகனங்களை பயன்படுத்தத் துவங்கினால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். உயிர் வாழ தேவையான காற்றின் மீது அனைவருக்கும் அக்கறை வேண்டும். காற்று மாசு என்பதை  அரசியல் பிரச்னையாக எடுத்து, அதை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

அந்நியருக்குக்கூட, வாரி வழங்கிய தமிழகத்தில் இன்று தண்ணீருக்காக அடித்துக்கொள்ளும் நிலை. தண்ணீருக்காக இரண்டு கொலைகள் நடந்தேவிட்டன. இந்த வன்முறை பெரும் அச்சுறுத்தலை தருகிறது. சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான்.  தமிழக மக்களுக்கு அன்றாடம் 730 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு தினமும் 52.5 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடும் வறட்சி காரணமாக தற்போது 40 சதவீத குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், தண்ணீர்  பற்றாக்குறை ஏற்பட்டு, தமிழகம் தவிக்கிறது. மக்கள், அன்றாடம் காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக வீதி வீதியாக அலையும் பரிதாப நிலை தொடர்கிறது. கண்ணீரை வரவழைக்கிறது.

தலைநகர் சென்னையில், ஓட்டல்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த, ஐ.டி., நிறுவனங்கள், மகளிர் விடுதிகள் என வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. ஓட்டல்களில், தட்டுக்களை கழுவக்கூட தண்ணீர் இல்லாத துயரம். வாழை இலை, பாக்கு மட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.‘தண்ணீர் தட்டுப்பாட்டால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்படலாம்; அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம்’ என ஓட்டல் நிர்வாகங்கள், விளம்பர பலகை வைத்துள்ளன. பல இடங்களில், சிறு ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. ஐ.டி., நிறுவன பணியாளர்கள், வீட்டில் இருந்தபடியே தகவல் தொழில்நுட்பம் மூலம் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் பஞ்சம் தொடர்வதால், மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கிவிட்டன.

இப்பிரச்னைக்கு, போர்க்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டியது அரசின் கடமை. தண்ணீரை, திருட்டுத்தனமாக சேமித்து, அதிக விலைக்கு விற்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கடும் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் ெதாய்வின்றி குடிநீர் சப்ளை ெசய்ய வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, குடிநீர் விநியோகத்தை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல்  மாசு மற்றும் இயற்கை வளம் அழிப்பு காரணமாக மழை பெய்வது அரிதாகிவிட்டது.  அப்படி அரிதாக ெபய்யும் மழை நீரை, ெசாட்டு விடாமல் அணை, ஏரி, குளங்களில்  சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

தமிழக அரசு  விழித்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றவேண்டும். வருங்கால  சந்ததியினரை மனதில் கொண்டு, தண்ணீர் சேமிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த  வேண்டும். மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து, நீர்நிலைகளின் முழு கொள்ளளவும் நிரம்பும்  வகையில் தண்ணீர் சேமிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையேல், தண்ணீருக்காக தமிழகம் தவிக்கும் நிலை தொடரும்.

தினகரன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *