வியாழன் , மார்ச் 19,2015,
தாம்பரம்,
கணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்–2 மாணவி சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் இன்பராணி(வயது 17). இவர், புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
தற்போது பிளஸ்–2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலையில் எழுந்த இன்பராணி, வீட்டில் உள்ள தனி அறையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் இன்பராணியின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாணவி இன்பராணி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வுக்கு பயந்து… சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இன்பராணியின் அண்ணன் இன்பராஜ், பிளஸ்–2 படிக்கும் போது கணித பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். இதனால் தானும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துவிடுவோமோ? என்ற பயத்தில் மாணவி இன்பராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-தினத்தந்தி