உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கைரனா, மகாராஷ்டிரத்தின் பால்கர், பண்டாரா-கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதேபோல், நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), பாலுஸ் கடேகான் (மகாராஷ்டிரா), அம்பட்டி (மேகாலயா), தாரலி (உத்தராகண்ட்), மகேஷ்தாலா (மேற்குவங்கம்) ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதேபோல், கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
மார்ச் மாதத்திற்கு பிறகு பாஜக இரண்டாவது முறையாக உபியில் சவாலை சந்திக்கிறது. இந்த தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளனர். கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் இந்தமுறை சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்டரீய லோக்தளம் கடசிகளுடன் காங்கிரஸ் கரம் கோர்த்துள்ளது. இதனால், கைரானாவும், நுபுர்பூரும் பாஜகவிற்கு மீண்டும் சவாலாகி உள்ளன.
மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியாவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளது காங்கிரஸ். இங்கு பாஜகவை தோல்வியுற செய்யவதற்காக சிவசேனாவும் வேட்பாளரை நிறுத்தவில்லை.
மற்றொரு மக்களவை தொகுதியான பால்கரில் சிவசேனை பாஜகவை கடுமையாக எதிர்க்கிறது. இங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கட்சியின் வேட்பாளர்களும் பலமாக உள்ளனர். இதனால், பால்கரில் நான்குமுனைப்போட்டி நிலவி பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்தின் ஒரே ஒரு மக்களவை தொகுதியின் எம்பியாக இருந்தவர், நாகாலாந்தின் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரரான நிபியோ ரியோ. இவர், பாஜக ஆதரவுடன் அம்மாநில முதல்வராகி விட்டார்.
இதனால், நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக்கட்சி இணைந்து தோக்கோ யப்தோமியை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் ஆதரவுடன் நாகா மக்கள் முன்னணி சி.அபோக் ஜமீர் என்பவரை வேட்பாளராக்கி உள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை ராஜேஸ்வரி நகர் பாஜக முன்பு வென்ற இடம். இருப்பினும் அங்கு ஆட்சியை தக்க வைக்கும் போட்டியால், பாஜகவை வீழ்த்த ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 31-ம் தேதி எண்ணப்படுகிறது.