அறிவியல், இந்தியா, கட்டுரை, விமர்சனம்

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

flying between planetsஅறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு.

‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் போதனைகள் செய்துவிட்டு விடைபெற்றுக்கொள்கிறார்கள். மறைந்த வர்களுக்குத் திதி கொடுக்கும் சடங்குபோல ஒவ்வொரு வருடமும் இந்தச் சடங்கு நடைபெறுகிறது.

இந்த வருடமும் நமது பிரதமர் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, நேரு எவ்வாறு அறிவியலும் தொழில்நுட்பமும் நாட்டின் முன்னேற்றத்தின் இதயத் துடிப்பாக இயங்க வேண்டும் என்று விரும்பினார் என்பதையும், அரசு இயந்திரங்களின் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் அறிவியல் இருக்கிறது என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கூடவே, இந்தியாவின் அறிவியல் வரலாறு பழமையானது என்பதையும் இந்தியா உலகுக்கு அளித்த அறிவியல் கொடைகளைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றின் பெருமைபற்றி நம்மில் யாருக்கு எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், நமது மூதாதையர்களின் கண்டுபிடிப்புகள் அசாதாரணமானவை, தற்கால அறிவியல் கூறுகளைத் தன்னடக்கிக் கொண்டவை என்று நினைப்பதுதான் அபாயம். இவ்வாறு அறிவியலைப் பற்றி அதிகப் புரிதல் இல்லாத சாதாரண மக்கள் நினைத்தால், நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், தங்களைத் தாங்களே அறிவியல் அறிஞர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவ்வாறு நினைப்பதுதான் இந்திய அறிவியலுக்கு எதிர் காலமே இல்லையோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

அற்புத விமானங்கள்

இந்தக் காங்கிரஸில் ஒரு ‘அறிவியல்’ கட்டுரை படிக்கப்படவிருக்கிறது. புராதன விமானத் தொழில் நுட்பம் பற்றிய கட்டுரை அது. காப்டன் போடாஸ் என்பவர் அந்தக் கட்டுரையைப் படிக்கிறார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைப் பற்றி அவர் முன்னோட்டமாகச் சொல்லியவற்றில் சில: “அன்றைய விமானங்கள் பூவுலகில் மட்டுமல்ல, கிரகங்களுக்கு இடையேயும் பறந்தன.’’ “அன்றைய விமானங்கள் முன்னால் செல்லும் திறனை மட்டுமல்லால், பக்க

வாட்டில் பறக்கவும், பின்னால் செல்லும் திறன் களையும் பெற்றிருந்தன.” இந்தக் கட்டுரை படிக்கப்படுவதை எதிர்த்து நாஸாவில் வேலை செய்யும் இந்திய விஞ்ஞானி காந்திராமனும் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்களும் அறிக்கை விட்டிருக் கிறார்கள். அதில் இதுபோன்ற கட்டுரைகள் இந்திய அறிவியலின் நிறைமையையே குலைத்துவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் எழுதிய வியாசத்தின் தரத்தில் உள்ள கட்டுரைகளை இங்கே படிக்க அனுமதி அளிப்பது, ஏற்கெனவே தாழ்ந்து பறக்கும் நமது அறிவியல் கொடியை மேலும் தாழ்த்திவிடும்.

விமானம் எவ்வாறு பிறந்தது?

கல்லை மட்டுமே பயன்படுத்தத் தெரிந்த பழங்குடி இனங்களுக்குக்கூட வானில் பறப்பதைப் பற்றிய கனவுகள் இருந்திருக்கும், அத்தகைய கனவுகளே தொன்மங்களாக நம்மிடம் வந்திருக்கின்றன. ‘வலவன் ஏவா வான ஊர்தி’யும், ராவணனின் புஷ்பக விமானமும் அத்தகைய கனவுகளின் பதிவுகளே. ஆனால், உண்மை யான விமானத்தில் பறப்பதற்குக் கனவுகள் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. கனவு நனவாகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ரைட் சகோதரர்கள் 1903-ம் ஆண்டு முதன்முதலாக விமானத்தில் பறக்க முடிந்தது என்றால், அறிவியல் அதற்கு முன்னால் பல மைல்கற்களைத் தாண்ட வேண்டியிருந்தது. நியூட்டனின் விதிகளும் பெர்னூலியின் கொள்கையும் இல்லையென்றால், விமானம் பிறந்திருக்காது. ரப்பர், அலுமினியம், பெட்ரோல் இல்லையென்றால் விமானம் பிறந்திருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘உள் எரிபொறி’ (இன்டெர்னல் கம்பஷன் இன்ஜின்) கண்டுபிடித்திருக்காவிட்டால், விமானம் பிறந்திருக்காது. மற்றைய அறிஞர்களின் தோள்களில் ஏறி நின்றே புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் நிகழ்த்துகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் கொள்கைச் சங்கிலிகளில் ஒரு இணைப்பு அறுந் தாலும், புதிய கண்டுபிடிப்புகள் அரிதாகிவிடும். மேலாக, மனிதனுக்குப் பயன்படும் எந்த அறிவியல் கண்டு பிடிப்பையும் அவன் மறந்ததாகத் தெரியவில்லை. எனவே, விமானங்களைச் செய்து அவற்றைப் பறக்கவைக்கும் தொழில்நுட்பம் மனிதனுக்குத் தெரிந்திருந்தால், அதை அவனால் மறந்திருக்கவே முடியாது.

வ்யாமானிக சாஸ்திரம்

காப்டன் போடாஸ் படிக்கப்போகும் கட்டுரை ‘வ்யாமானிக சாஸ்திரம்’ என்ற புத்தகத்தைப் பற்றியது. பாரத்வாஜ முனிவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் புத்தகத்தை ஆராய்ந்த இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி தேஷ்பாண்டே என்பவர், இந்தப் புத்தகத்தை 1904-ம் ஆண்டுக்கு முன்னால் எழுதியிருக்க முடியாது என் பதையும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முறைப்படி விமானம் செய்தால் அது பறக்க முடியாது என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘வ்யாமானிக சாஸ்திரம்’ என்ன சொல்கிறது?

இந்த விமானத்தை ஓட்டுபவர் 32 ரகசியங்களைத் தெரிந்திருக்க வேண்டும். ரகசியங்களில் சிலவற்றை அறிந்தால் மாயமாக மறையலாம், உடைக்க முடியாத, எரிக்க முடியாத, அழிக்க முடியாத விமானங்களைப் படைக்கலாம். சூரிய கிரணங்களின் ‘கரிய’ பொருண்மையைப் பெற்று, எதிரியின் கண்களிலிருந்து விமானத்தை மறைக்கலாம்.

இது போன்று பல சக்திகளைப் பெற்று விமானத்தைச் சுருக்கலாம், மாயக் கண்ணாடிகள் மூலமாக அதைப் பெரிதாகக் காட்டலாம். மற்றும் புலி, காண்டாமிருகம், பாம்பு, மலை, ஆறு போன்ற வடிவங்களை விமானம் பெற வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பார்ப்பவர் கண்ணைக் கவரும் வகையில் பேரழகி ஒருத்தியை நம் கண் முன் கொண்டுவரலாம்!

விமானத்துக்கு ஏழு விதமான சக்திகள் கிடைக்கலாம் என்று நூல் சொல்கிறது. அவற்றில் சூரிய வெளிச்சத்தை உறிஞ்சும் சக்தி, எதிரி விமானத்தின் சக்தியைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் சக்தி அடங்கும். இந்த சக்திகளின் பிறப்பிடங்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, நீர் முதலானவை!

அறிவியலும் போலி அறிவியலும்

போலி அறிவியலின் முக்கியமான கூறுகளில் ஒன்று நமக்கு மனதளவில் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய ஆனால், நடைமுறையில் சாத்தியமே இல்லாத கருதுகோள் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, அது உண்மைதான் என்று நிரூபணம் செய்ய முயல்வது. நமது முன்னோர்கள் விமானம் ஓட்டும் திறமையைப் பெற்றிருந்தார்கள் என்பது உண்மையாக இருந்தால், அது நமக்கு மிகுந்த பெருமையை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பெருமையை அளிக்கும் என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தச் சாதாரணப் புரிதல்கூட இல்லாதவர்கள் அறிவியல் அரங்குகளில் இடம்பெறுவது நமது அறிவியலில் தரம் எங்கு இருக்கிறது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் அறிவியல் துறைகளில் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதாகப் புள்ளி

விவரங்கள் சொல்கின்றன. இது போன்ற கட்டுரைகளுக்கு அறிவியல் அரங்குகளில் இடம் கிடைப்பது, இளைஞர்களை அறிவியல் பக்கமே வராமல் செய்வதற்கு வழியை அமைத்துக் கொடுக்கிறது.

– பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *