அறிவியல், இந்தியா, விமர்சனம்

7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

7000-was-the-year-before-the-flight-to-mumbai-science-fiction-conventionமும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும் வைத்துள்ளது.

மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு, கடந்த, 3ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. இந்த ஐந்து நாள் மாநாட்டில், விஞ்ஞானிகள் பலர், ஆக்கப்பூர்வமான பல அறிவியல் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.அதே நேரத்தில், ‘இந்தியாவில், 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே விமானங்கள் இருந்தன; அறுவை சிகிச்சைகள் நடந்தன’ என, புராண கால கதைகளில் கூறப்பட்ட விஷயங்களை, சிலர் ஆய்வுக் கட்டுரைகளாக சமர்ப்பித்த, அபத்தங்களும் அரங்கேறி உள்ளன.மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், பைலட் பயிற்சி கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற நபரான, கேப்டன் ஆனந்த் ஜே.போடாஸ் என்பவர், ‘சமஸ்கிருதம் மூலமாக பழமையான அறிவியல்’ என்ற தலைப்பில், ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

விமானங்கள்:

இந்தியாவில், 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே, விமானங்கள் இருந்துள்ளன. அவற்றின் மூலம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டம், கிரகம் விட்டு கிரகங்களுக்கும் பயணித்துள்ளனர். ஆனால், ஆகாய விமானமானது, 1904ம் ஆண்டில், ரைட் சகோதரர் களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என, வரலாறு சொல்கிறது.
பரத்வாஜர் என்பவர், ‘விமான சம்ஹிதா’ என்ற, புத்தகத்தை எழுதி உள்ளார். அதில், விமானங் கள் தயாரிக்க, பல விமான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது, விமானங்கள் தயாரிப்பதற்கான உலோகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ‘விமான சம்ஹிதா’வில், விமானங்கள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை, நம் இளம் தலைமுறையினர் படிக்க வேண்டும். அந்த உலோகங்களை, நம் நாட்டிலேயே தயாரிக்க முற்பட வேண்டும்.

பண்டைய காலங்களில், இந்தியாவில், பெரிய ரக விமானங்களும் இருந்துள்ளன. அதில், 60க்கு 60 என்ற அடியிலான விமானங்களும் அடங்கும். சிலவகை விமானங்கள், 200 அடி அளவுக்கும் இருந்துள்ளன. அவை எல்லாம், ஜம்போ விமானங்கள் என்று அழைக்கப்பட்டுள்ளன. பண்டைய கால விமானங்களில், 40 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பண்டைக்கால இந்தியாவில், ‘ரூபகன்ரகஸ்யா’ என்ற பெயரில் ரேடார் முறையும் இருந்துள்ளது. அந்த ரேடார் முறையில், விமானத்தின் ஒட்டுமொத்த உருவத்தையும், அதை கண்காணிப்பவர் பார்க்க முடிந்துள்ளது. ஆனால், இன்றைய நவீன ரேடார் முறையில், விமானம் குறித்த சிறிய ஒளிப்புள்ளியை மட்டுமே பார்க்க நேரிடுகிறது. பரத்வாஜரின் புத்தகத்தில், அந்த கால விமானத்தின் பைலட்களுக்கு, எருமை, பசு, ஆட்டின் பால் போன்றவை உணவுகளாக, குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டதாகவும், தண்ணீருக்கு அடியில் வளரும் தாவரங்கள் மூலம் விமானிகளுக்கான உடைகள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, போடாசின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆய்வுக் கட்டுரையில், ‘பண்டைக் காலத்தில், அறுவை சிகிச்சைக்காக, இந்தியர்கள், 20 வகையான கூர்மையான உபகரணங்கள் மற்றும் 101 வகையான உணர்வை மழுங்கச் செய்யும் உபகரணங்களையும் பயன்படுத்தி உள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவுத்திறன்:

‘பண்டைக்கால இந்திய பொறியாளர்கள், தாவரவியலில் போதுமான அறிவுத் திறன் பெற்றிருந்தனர். அந்த அறிவுத் திறனை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தி உள்ளனர்’ என, மற்றொரு ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.இந்த ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும், சர்ச்சையை கிளப்பி உள்ளன. அத்துடன், 102வது அறிவியல் மாநாட்டின் பெருமையை சீர்குலைக்கும் விதம் உள்ளதாக, விஞ்ஞானிகள் பலர் விமர்சித்துள்ளனர். கட்டுக்கதைகளை கட்டுரைகளாக சமர்ப்பிக்கும் இப்படி ஒரு அறிவியல் மாநாடு தேவையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நமது ‘பிதாகரஸ்’ தேற்றத்திற்குஉரிமை கொண்டாடும் கிரீஸ் நாடு:
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், ‘மாநாட்டில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள், சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை, மனித சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசியதாவது: பிதாகரஸ் தேற்றத்தை கண்டுபிடித்தவர்கள், நம் விஞ்ஞானிகள். ஆனால் தற்போது, கிரீஸ் நாட்டவர்களான கிரேக்கர்கள், அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதேபோல், நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, ‘அல்ஜீப்ரா’வுக்கு, அரபு நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன.சூரியசக்தி மின்சாரம், மருத்துவம், ரசாயனம் மற்றும் புவி அறிவியல் என, பல விஷயங்களில் நம்முடைய விஞ்ஞானிகளின் அறிவுத் திறனை, நாம் தன்னலமற்ற முறையில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.இவ்வாறு, ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.

புரியாத சந்தேகங்களுக்கு விளக்கமும் இல்லை; ஆதாரமும் இல்லை!
இந்திய அறிவியல் மாநாட்டில், அறிவியல் வல்லுனர்கள் அல்லாதோர் கூறிய கருத்துகள் யாவும், ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியவையே. ‘முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை எனக் கூறப்படுபவற்றுக்கு, அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் நம்மிடையே இல்லாதபோது, வெறும் வார்த்தைகளாக அவற்றைக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?’ என, அறிவியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அவர்கள் எழுப்பும் கேள்விகள்:
*ஆதாரம் என்று காட்டப்படுபவை, எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்தும், தற்போதைய நிலையில் சந்தேகம் எழுகிறது.
*இப்படி தர்க்க ரீதியான வாதம் ஏன் எழுகிறது என்றால், கடந்த, 300 ஆண்டுகால கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. அணு முதல், அண்டம் வரை, அனைத்தையும் பகுப்பாய்ந்து, அவற்றுக்கான விளக்கங்களைப் பதிவு செய்து, அதை வல்லுனர்களிடையே பகிர்ந்து கொண்டு, தொடர் பகுப்பாய்வு செய்து, அனைத்து
தரப்பினரும் ஏற்றுக் கொண்ட பின், ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டது.
*இது போன்ற எந்த பகுப்பாய்வும், தர்க்க ரீதியாக கேள்விகளும், அதற்குரிய சந்தேகங்களும், முற்காலத்தில் எழுப்பப்பட்டனவா, அதற்கான பதில்கள் பெறப்பட்டனவா என்பதற்கும், முடிவுகள் பதிவு செய்யப்பட்டதா என்பதற்கும், எந்த ஆதாரமும் இல்லை.
*ஒரு முனிவர் சொல்லி இருக்கிறார் என்பதை வைத்து மட்டும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் சிலர், புராணக் கதைகளை அறிவியலுடன் ஒப்பிட்டு இருப்பது, அதிருப்தி அளிப்பதாக உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தியாவில் அறிவியல் வியத்தகு முன்னேற்றம் அடைந்திருந்தது என்பதை நிரூபிக்க, போதிய ஆதாரங்கள் இல்லை; வரலாற்று சான்றுகளும் இல்லை.
டாக்டர் அருண் மித்ரா, பொதுச்செயலர்
அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான டாக்டர்கள் அமைப்பு

மத நம்பிக்கைகளுக்கு நாங்கள் உரிய மரியாதை அளிக்கிறோம். அதேநேரத்தில், புராணக் கதைகளை அறிவியலுடன் ஒப்பிடக் கூடாது. புராணக் கதைகளில் அறிவியல் விந்தை போல கூறப்பட்டுள்ள விஷயங்களை, பரிணாம வளர்ச்சியுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
டாக்டர் சாவ்லா, தலைவர்
அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான டாக்டர்கள் அமைப்பு

ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய அறிவியல் மாநாட்டில், போலித்தனமான அறிவியல் ஊடுருவி இருப்பது சரியானதல்ல. இந்த விஷயத்தில், விஞ்ஞானிகள் அமைதியாக இருந்தால், அது அறிவியலுக்கு மட்டுமின்றி, நம் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பது போன்றது.
டாக்டர் ராம்பிரசாத் காந்திராமன்
விஞ்ஞானி, அமெஸ் ஆராய்ச்சி மையம், நாசா

-தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *