புதுடில்லி: கழிப்பறை இல்லா கிராமங்களில் வசிப்போர், தங்களை அறியாமலே, மனிதக்கழிவு கலந்த உணவை உண்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கை:
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ‘கிராம பஞ்சாயத்துகளில் துப்புறவுக்கான அடிப்படை நூல்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:1,200 பேர் வசிக்கும், கழிப்பறை வசதியற்ற ஒரு கிராமத்தில், ஒரு நாளைக்கு, 300 கிலோ, மனிதக்கழிவு வெளியேற்றப்படுகிறது. அங்கு ஒருவர், தினமும் தன்னையறியாமலே, 3 கிராம் மனிதக்கழிவு கலந்த உணவை உண்கிறார்.இந்த கணக்கின் படி, இக்கிராமங்களில், ஒருவர் ஒருநாள் உண்ணும் உணவிலும், அருந்தும் பானங்களிலும், குறைந்தபட்சம் ஒரு சதவீத கழிவு, மறைமுகமாக கலந்துள்ளது. இது, ஒரு சாக்லெட்டுக்கு சமமாகும்.கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், திறந்தவெளி கழிப்பிட போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண் கிருமிகள்:
சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராம பள்ளிகள், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளிடம், ஆரோக்கிய பராமரிப்பு குறித்து விளக்க வேண்டும்.
திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதால் அவற்றில் இருந்து ஏராள மான நுண்கிருமிகள் உருவாகின்றன. இவை காற்று, தூசி, ஈக்கள், போன்றவற்றின் மூலம் உணவுகளில் படிகின்றன.மேலும் பிராணிகள் வாயிலாகவும், கை கழுவாமல் உண்பதாலும், அசுத்த உணவை உட்கொள்ள நேரிடுகிறது. இத்துடன், வாகன போக்குவரத்து காரணமாகவும், திட மற்றும் திரவ கழிவுகள் காற்றில் கலந்து, தின்பண்டங்களில் தஞ்சமடைகின்றன.இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
*மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், கழிப்பறை வசதியில்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.
*தற்போது, கிராமங்களில் உள்ள, 65 சதவீதம் பேர், திறந்தவெளியைத் தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
-தினமலர்