புதுவை யூனியன் பிரதேச ஆளுநர் கிரண்பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார்.
பல்கலைகழக விழாவில் கலந்துகொள்வதற்காக கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முக்கிய அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியது தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைகழக விழாவில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தானே முன்னின்று அந்த ஆய்வில் ஈடுப்பட்டிருக்கிறார் தமிழக ஆளுநர்.
புதுச்சேரியில் துணை ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி வருகிறார். தற்போது அதேவழியில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தமிழக ஆளுநர் மேற்கொண்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் வலிமையான தலைவர்கள் இல்லாத தருணத்தில் ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் மத்திய அரசு ஆளுநரை பயன்படுத்தி தமிழக அரசின் மாநில அதிகாரங்களில் தலையிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.