அரசியல், கட்டுரை, சிந்தனைக் களம், தமிழ்நாடு, தேர்தல்

இரட்டை இலை மட்டுமே வெற்றியை ஈட்டுமா?


இரட்டை இலை சின்னம் திரும்பக் கிடைத்ததில் திரும்ப ஆட்சியே கிடைத்தது போல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அதிலும் பதவியில் உள்ளவர்கள் ஆடும், ஆட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் அளவேயில்லை.

தவற விட்ட ஆட்சியே திரும்பக் கிடைத்தது போலவும், அடுத்த நடக்க உள்ள தேர்தலில் எதிர்க்கட்சியே இல்லாமல் செய்து விட்டது போலவுமான உற்சாகத் துடிப்பின் உச்சத்திலேயே அவர்கள் நிற்கிறார்கள். தம் உற்சாக வெள்ளம் தங்கள் அளவில் கரை புரள வைப்பது மட்டுமல்லாமல், தொண்டர்களும் பட்டாசு, மத்தாப்பு, இனிப்பு வகைகளால் சூழப்பட்டிருப்பது போன்றதொரு மாயத்தோற்றத்தையும் உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கொண்டாட்டம் இரட்டை இலை இருப்பதால் இனி வரும் தேர்தலில் இவர்களே வெற்றி பெற்று திரும்ப ஆட்சி அமைத்து விடுவார்களோ என்ற சந்தேகத்தை சில எதிர்க்கட்சியினருக்கு கூட உருவாகிவிடுவதைக் காண முடிகிறது. இரட்டை இலை என்பது அதிமுகவின் வெற்றியின் சின்னமா? அது இருந்தால் எதிர் அணியால் தோற்கடிக்கவே முடியாதா?

நிச்சயம் கிடையாது. 1977 தேர்தலில் எம்ஜிஆர் என்ற மாபெரும் நடிக சக்தி அரசியல் சக்தியாக நின்ற வேளை, ஊழல், சர்க்காரியா கமிஷன், மிசா பாதிப்பு என நிறையவே உழன்று கிடந்தது திமுக. அதிலும் திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றி எதிர்மறை சிந்தனை இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது போல் எந்த காலகட்டத்திலும் உருவாகவில்லை என்று சொல்லும் அளவுக்கு எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள் துள்ளத் துடிக்க, இளமை பொங்கிட தேர்தல் பணியாற்றி இருந்தார்கள்.

எம்ஜிஆரின் பிரச்சார பீரங்கிகள் தனிப்பட்ட முறையிலேயே திமுக தலைவரை தாக்கி விமர்சனம் செய்திருந்தார்கள். அநேகமாக எதிர்க்கட்சியே இல்லாத நிலைதான் தமிழக அரசியலில் உருவாகப்போகிறது என்ற எண்ணம் நிறைய அரசியல் நோக்கர்கள் மத்தியில் மிதமிஞ்சி இருந்தது. ஆனால் அப்படியொரு பெருவெற்றியை எம்ஜிஆரால் பெற முடியவில்லை. 130 சீட்டுகள் கிடைத்து அதிமுக ஆட்சியமைத்தாலும், 48 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு திமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

அந்த அளவுக்கு திமுகவிற்கான அஸ்திவாரத்தை அண்ணாவும், கருணாநிதியும் ஏன் எம்ஜிஆரும், நெடுஞ்செழியன் போன்றவர்கள் கூட உருவாக்கி வைத்திருந்தார்கள். அதன் ‘சூரியன்’ சின்னத்தை மாற்றி வேறு ஒரு சின்னத்திற்கு ஒட்டுப் போட மாட்டேன் என்ற அளவிலான பாமர மக்களையும் இந்த அணி உருவாக்கி விட்டிருந்தது.

அந்த காலகட்டத்தில் இந்திராகாந்தியின் பசுவும் கன்றும், ப.காங்கிரஸ் காமராஜின் ராட்டை நூற்கும் பெண் இரண்டாம் கட்ட மக்களின் சின்னமாக கருதப்பட்டது. அதன் பிறகு வந்த தேர்தல்களில்தான் இ.காங்கிரஸிற்கு கை சின்னமும், ஜனதா கட்சிக்கு ஏர் உழவன் சின்னமும் கூட மக்கள் மத்தியில் பரிச்சயப்பட்டு எழுச்சியைப் பெற்றது.

அந்த காலகட்டத்தில் பசுவும் கன்றும் இல்லாமல் இந்திரா ஜெயிக்க முடியுமா? ராட்டை சுற்றும் பெண் சின்னம் இல்லாமல் ஜனதா ஜெயிக்க முடியுமா என்றும் கூட கட்சிக்காரர்கள் கேள்வி கேட்டபடிதான் இருந்தார்கள். வி ஃபார் விக்டரி என்பதற்கும், இரட்டை இலை என்பதற்கும் இரட்டை விரல் காட்டினால் போதும் என்ற நிலையை எம்ஜிஆர் எட்டி நிற்க, அந்த காலகட்டத்தில்தான் திமுக தலைவர் கருணாநிதி ஐந்து விரலையும் விரித்துக் காண்பித்து உதயசூரியனுக்கு சுருக்க வழியை பிரபலப்படுத்தினார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் இரட்டை இலையை வீழ்த்த முடியாது. சூரியன் அஸ்தமித்தே தீரும் என்றெல்லாம் தமிழக அரசியல் சூழல் நகர்ந்த வேளையில்தான் 1980-ல் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் பாண்டி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக- காங்கிரஸ் கூட்டணி வென்றது. அதில் வெற்றி கண்ட சின்னங்கள் உதயசூரியன், கை ஆகியவை. இத்தனைக்கும் கை சின்னம் காங்கிரஸிற்கு புத்தம் புதுசு. படுதோல்வி அடைந்த இரட்டை இலைக்கு எதிர்காலமே இல்லை என்று பேசப்பட்டது.

சட்டப்பேரவை அந்த சமயம் கலைக்கப்பட்டது. திமுக-காங்கிரஸ் ஆகப்பெரும் கட்சிகள் கூட்டணியில் போட்டியிட, தான் தனித்துப் போட்டியிடுவதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்தார் எம்ஜிஆர்.

குமரி அனந்தன், நெடுமாறன் என தனித்தனி கட்சி கண்ட தலைவர்களை கூட தம் கூட்டணியில் இணைத்தார். சிறு கட்சிகளுக்கும் கூட இரண்டு சீட்டுகள் ஒதுக்கீடு செய்தார். தமிழகமெங்கும் சென்றார். நான் என்ன தவறு செய்தேன்; எதற்காக என் தலைமையிலான உங்கள் ஆட்சியை கலைத்தார்கள் என கேள்வி கேட்டு மக்களிடம் கனிந்துருகினார். சில இடங்களில் நா தழு,தழுத்து கண்ணீர் உகுத்தார்.

அதில் உருகிய மக்கள் அவருக்கே அவருக்கு என ஓட்டளித்தார்கள். திமுகவிற்கு 37 இடங்களே கிடைக்க, இரட்டை இலைக்கு 129 இடங்கள் கிடைத்தது. 48 சதவீத ஓட்டுகளை அதிமுக கூட்டணியும், 44 சதவீத ஓட்டுகளை திமுக கூட்டணியும் பெற்றது. இதையடுத்து 1984 சட்டப்பேரவை தேர்தல். அதிமுக – காங்கிரஸ் கூட்டணி. அதில் அதிமுக 132 இடங்களும், திமுக 24 இடங்களாகவும் மாற்றம் கொண்டன.

இதையடுத்து 1989 தேர்தல். எம்ஜிஆர் மறைவு. ஜானகி, ஜெயலலிதா அணிகளாக அதிமுக உடைந்தது. இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜெயலலிதா அதிமுக சேவல் சின்னத்திலும், ஜானகி அதிமுக இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டது. திமுகவின் உதய சூரியன் 150 சீட்டுகளை அள்ளியது. ஜெயலலிதாவின் சேவல் 28 இடங்களையும், ஜானகியின் இரட்டை புறா 2 சீட்டுக்களையும் வென்றது. அப்போது இரண்டாக கட்சி உடைந்த நின்றபோதும், இரட்டை இலை முடக்கப்பட்ட போதும் கூட ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தை பார்த்து அதிமுகவினரும், அதன்பால் பற்று வைத்த மக்கள் ஓட்டுப்போட்டதையும் எந்த தேர்தலிலும் மறக்கவே முடியாது.

திமுகவே வென்றாலும், அப்படியொரு எழுச்சி அந்த தேர்தலில் இரண்டு அதிமுகவிடமும் இருந்தது. அதுதான் அடுத்தது ஜெயலலிதாதான் அதிமுக என்பதை பறைசாற்றி அவரிடமே கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்குமளவு ஜானகியை அரசியலை விட்டே ஒதுங்கச் செய்தது. 1991 தேர்தல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை. காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த அதிமுகவின் இரட்டை இலைக்கு அமோக ஆதரவு அலையை பெற்றுத் தந்தது. திமுகவின் உதயசூரியன் 2 சீட்டுகளை மட்டுமே பெற்றது.

1996 சட்டப்பேரவை தேர்தல். இமாலயம் அளவு தமிழக அரசியலில் வளர்ந்திருந்தார் ஜெயலலிதா. எந்தக் கட்சி, எத்தனை கட்சி கூட்டணி போட்டாலும் என்னை, என் இரட்டை இலையை, என் கட்சியை வெல்ல முடியாது என்ற நிலையில் ஜெயலலிதாவே தன்னம்பிக்கையுடன் நின்ற காலம் அது. இரட்டை இலை வரலாறு காணாத தோல்வி கண்டது. அந்த சின்னத்தில் நின்ற ஜெயலலிதாவே கூட பர்கூரில் சுகவனம் என்ற அவ்வளவு பிரபலம் இல்லாத ஒரு திமுக இளைஞரிடம் தோற்றுப்போனார்.

இந்தத் தேர்தல்தான் ஜெயலலிதாவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும், அதன் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் தங்களை தாங்களே ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்த தேர்தலாக, சுயவிமர்சனம் செய்து கொள்ளத்தக்க தேர்தலாக அமைந்தது. இரட்டை இலை சின்னமானாலும், எம்ஜிஆர் கண்ட கட்சியானாலும், மக்களின் – குறிப்பாக பெண்களின் அமோக செல்வாக்கு பெற்ற ஜெயலலிதா ஆனாலும் மக்களுக்கான எண்ண ஓட்டத்துடன் இல்லாவிட்டால் தோற்றுத்தான் போவார்கள் என்று பயமுறுத்திய தேர்தல்.

இதற்குப் பின்புதான் தமிழக அரசியலில் புதியதொரு மாற்றம் வந்தது. கருணாநிதியானாலும், ஜெயலலிதாவானாலும் அடுத்த ஐந்தாண்டு என்பது சீக்கிரமே வந்துவிடும், இடையில் மக்களவைத் தேர்தலையும் சந்திக்க வேண்டி வரும். எனவே கவனமாக ஆட்சியை நடத்த வேண்டும் என்று நிதானத்தை ஏற்படுத்தித் தந்தது என்று சொல்லலாம். அதுதான் ஆயிரம் இறுமாப்பு, தைரியம், கர்வம் இருந்தாலும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு 2001 தேர்தலில் அத்தனை கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஜெயலலிதாவை தேர்தலை சந்திக்க வைத்தது.

அதில் அமோக வெற்றி பெற்ற பின்னர் 2006ல் கூட அவரை கவனமாக பாஜகவுடன் கூட்டணி போடவும் வைத்தது. அப்போது புதிய கட்சி தேமுதிக தனித்து நின்று ஆட்சிக்கெதிரான நடுநிலை ஓட்டுக்களை திமுகவிற்கு போகவிடாமல் செய்ததால் 61 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக அதிமுகவை அமரச் செய்தது. வரலாற்றிலேயே இல்லாத விதமாக சிறுபான்மை அரசாக திமுக இயங்க வேண்டிய சூழலையும் அது ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் 2011 தேர்தல். இதில் தேமுதிகவை சேர்க்காவிட்டால், அந்த முரசு சின்னமும் இரட்டை இலையோடு இணைந்து நிற்காவிட்டால் ஆட்சி என்பது கேள்விக்குறி என்பதை எத்தனை அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள். ஜெயலலிதாவிற்கு வழிகாட்டினார்கள் என்பதெல்லாம் வரலாறு சொல்லும். முரசும், இலையும் இணைந்த இணைப்பில் அதிமுக இரட்டை இலை ஆட்சியில் அமர, தேமுதிக முரசு எதிர்க்கட்சி தலைமை பீடமாக ஒளிர, திமுக உதயசூரியன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதும் நடந்தது.

இதில் இரட்டை இலை பெரிதா, முரசு பெரிதா என்கிற மாதிரி இக்கட்சி தலைவர்கள் மோதிக் கொண்டதை பயன்படுத்த திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த தேர்தலில் (2016) என்ன பாடுபட்டார் என்பது தமிழ் கூறும் நல்லுலகு அறியும். இந்த அணி உருவாகாமல் இருந்தால், மூன்றாவது அணியாக தள்ளப்பட்டால் இரட்டை இலையே துளிர்க்கும் என நடந்த அரசியல் சதுராட்டங்கள் என்னென்ன என்பதையும் அந்த தேர்தல் களத்தின் நகர்வுகளை பார்த்தாலே சொல்லிவிடும்.

ஒரு வேளை அன்றைக்கு முரசும், உதயசூரியனும் தொகுதி உடன்பாடு கொண்டு உதிரிக் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்திருந்தால், தமிழ்நாட்டின் சமகால கட்ட நிலை சுத்தமாக தலைகீழாக மாறியிருக்கும் என்பதை நடுநிலையான அரசியல் நோக்கர்கள் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

89 சீட்டுகளை தனக்கும், 10 சீட்டுகளை கை சின்னத்திற்கும் பெற்றுத் தந்த உதய சூரியன், முரசுவையும் சேர்த்திருந்தால் அதிமுகவின் இரட்டை இலை துளிர்த்திருக்குமா? ஜெயலலிதா முதல்வர் ஆகியிருப்பாரா? பிறகு ஆஸ்பத்திரி சென்றிருப்பாரா? முதல்வர் இட்லி சாப்பிட்டார், பிரட் சாப்பிட்டார் என்று முதல்வர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதே உணராமல் இருக்கும் மக்களுக்கு யார் யாரோ சொல்லும் நிலை ஏற்பட்டிருக்குமா? கட்சி பதவிக்கும், ஆட்சிக்கட்டிலுக்கும் அடித்துக் கொண்டு, முதல்வர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னேன் என்று ஒரு அமைச்சரே பின்னால் வாக்குமூலம் அளிக்கும் நிலையும் கண்டிருப்போமா?

இதையெல்லாம் அரசியல் நோக்கர்கள் இப்பவும் கணக்கிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் ரசிப்பை வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ, வெறுப்பை உமிழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். இவர்கள் ஆட்சியில் இருப்பதை எப்படியெல்லாமோ பார்க்கும் மக்கள் இப்போது இரட்டை இலை வைபவ கொண்டாட்டத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 2006 முதல் 2016 வரையில் நடந்துள்ள அத்தனை பொதுத் தேர்தல்களும், இடைத்தேர்தல்களிலும் வாக்காளர்களுக்குப் பணம் என்பது கரைபுரண்டு ஓடச் செய்தும் இருக்கிறது.

அப்படியானால் பிரபல சின்னம் ஏன் வாக்காளர்களுக்கு பணத்தை அளிக்கச் செய்தது. இதுவெல்லாம் இரட்டை இலை சின்னம் மட்டுமே வெற்றியை ஈட்டாது என்பதை அழுத்தமாக உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த வெற்றிக் கொண்டாட்டமே அதை இன்னமும் மோசமான சூழலுக்கும் கொண்டு சென்று சேர்த்து விட வாய்ப்புண்டு என்பதே உண்மை. இது கொண்டாடுபவர்களுக்கும் தெரியும்தான். பிறகு எதற்கு கொண்டாட்டம். இதில் தோற்ற அரங்கம் ஒன்றிருக்கிறது; அதை எரிச்சல் மூட்டலாம் அல்லவா? வாஸ்தவம்தான். அதுவே மக்களுக்கான எரிச்சலாக மாறிவிடக் கூடாது இல்லையா?
–நன்றி தி இந்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *