உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதன்று.
1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது 1.25 அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது. 1978இல் மொரார்ஜி தேசாய் அரசு ரூ. 10000, ரூ. 5000, ரூ. 1000 பணத் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது.
இவ்விரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவே இல்லை. 1946ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த 70 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலர் 65 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
2016 நவம்பர் 8ல் பிரதமர் மோதி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். பொருளாதாரக் கோட்பாடுகளின்படி பணம், பரிவர்த்தனை, முன்னெச்சரிக்கை, யூக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இக்கருத்தின்படி பொருளாதாரத்தில் பணத்தின் சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். 132 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் பெரிய சந்தையாகக் கருதப்படுகிற இந்தியாவில் முன்னெச்சரிக்கை, பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காகப் பணத்தைக் கையாள்வோர் 90 விழுக்காட்டினர். எஞ்சிய கறுப்புப் பணக்காரர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை வரிக்கட்டாமல், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ளனர்.
இந்தியாவில் கறுப்புப்பண அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. செல்வாக்குமிக்க அரசியல் தலைமையிடமும், உயர் அதிகாரிகளிடமும் உள்ள ரகசியத் தொடர்பு காரணமாக பணம் பதுக்குவோரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியவில்லை.
2013ல் தேசியப் பொது நிதியியல் மையம் (National Institute of Public Finance and Policy) அன்றைய நிதியமைச்சரிடம் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என்ற அறிக்கையை அளித்தது. ஆனால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுங்கூட, அது தொடர்பான முழுவிவரங்களை நடுவணரசு வெளியிட மறுக்கிறது.
பனாமா தீவுகளிலுள்ள பணத்தின் அளவை 190 ஊடகங்களின் கூட்டமைப்புதான் கண்டுபிடித்து வெளியிட்டது. 2016இல் வந்த புள்ளிவிவரங்களின்படி சேனல், பிரித்தானிய வெர்ஜின், கேமன், வனட்டு நாட்டுத் தீவுகள், பஹரைன், நவுரு நாடுகளில் பெருமளவு கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் முன்னாள் உயர் அலுவலரும், தேசியப் பொது நிதியியில் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் தீக்’த் சென் குப்தா இந்து நாளிதழில் (ஏப்ரல் 11,2016) குறிப்பிட்டுள்ளார்.
The Drivers and Dynamics of Illicit Financial Flows from India: 1948-2008 என்ற ஆய்வறிக்கையில் இந்தியாவினுடைய கருப்புப்பண நடவடிக்கைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன. மொத்த சட்ட விரோத சொத்துக்களில் 72.2 விழுக்காடு – 32 இலட்சம் கோடி – அளவிற்கு வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் 27.8 விழுக்காடு – 12 இலட்சம் கோடி – அளவில் பதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பெரும் முதலாளிகளே உள்ளனர்.
இந்தப் பின்னணியில் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகப் பணத்தைப் பயன்படுத்தியவர்களும், தங்களின் சிறுசிறு வணிக நடவடிக்கைகளுக்காகவும். முன்னெச்சரிக்கை நோக்கத்திற்காகவும் சேமித்த விவசாயிகள், சிறுகுறு தொழில் முயல்வோர், நடுத்தரப் பிரிவினர் நவம்பர் 8, 2016ல் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
2017ல் ரிசர்வ் வங்கி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக சுழற்சியிலிருந்த 15.28 இலட்சம் கோடி ரூபாய் பணம் (99 விழுக்காடு) மீண்டும் வங்கிகளுக்கே வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுழற்சியில் இல்லாத, கணக்கில் வராத பணத்திற்கு இந்நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்குச் சான்றாக, உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 2016இல் அமெரிக்காவின் கோடீசுவரர்கள் 4.6 விழுக்காடும், ஐரோப்பிய நாடுகளில் 1.2 விழுக்காடும், ஆசியா நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முறையே 22.15 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் பணக்காரர்களின் செல்வமும் வளமும் உயர்வதற்கு இப்பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்திருக்கலாம். மேலும். ஒரு விழுக்காடு பணக்காரர்கள் 21 விழுக்காடு செல்வத்தையும் பணத்தையும் வைத்திருப்பதாக ஆய்வு புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.
2014-15ல் இந்தியாவினுடைய தொழில் உற்பத்தி 5 விழுக்காடாக இருந்தது. 2015-16இல் 3.3 விழுக்காடாகக் குறைந்து 2016-17இல் 4.6 விழுக்காடாக சிறிதளவே உயர்ந்துள்ளது. உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் உள்நாட்டு சேமிப்பு வீதம், குறிப்பாக, குடும்ப சேமிப்பு 23.5 விழுக்காடாக இருந்தது 2015-16ல் 19.2 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது.
உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதியின் அளவும் குறைந்து வருகிறது. தனியார், பொதுத்துறைகளில வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. ஆனால், பல இடர்களைச் சந்திக்கும் வேளாண் துறையின் பங்கு நாட்டின் சரியவில்லை. இந்தியாவில் தொன்றுதொட்டு இயங்குகின்ற நெசவு, கைவினைத் தொழில்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பன்முக வறுமையின் அளவு இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய 50 தனியார் நிறுவனங்கள் 15 இலட்சம் கோடிக்கு மேல் திரும்பச் செலுத்தாததால் வாராக்கடனாக மாறியுள்ளது. இதனால் வங்கிகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குக் கடன் வழங்க இயலவில்லை.
வங்கித்துறையில் ஏற்பட்ட தொய்வைச் சரி செய்வதற்கு 1.35 லட்சம் கோடியை மூலதனமாக நடுவணரசு அறிவித்துள்ளது. இது யாருடைய பணம்? ஏழை தொடங்கி எல்லோரும் அளிக்கும் வரிப்பணத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கூறிய புள்ளிவிவரங்கள் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முழு அளவில் தோல்வியடைந்ததையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
(கட்டுரையாளர், தமிழக திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பொருளாதார பேராசிரியர்.)