கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, “கோவா ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பாஜகவினர் கவர்னர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்வதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
மணிப்பூரிலும், கோவாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்கு பாஜகவின் பண பலத்தால் ஜனநாயகம் கீழிறக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகிறோம். நாங்கள் எதிர்க்கும் பாஜகவின் கொள்கைகளைதான் பாஜக கோவாவிலும் மணிப்பூரிலும் செயல்படுத்தியுள்ளது” என்றார்.
உத்தரப் பிரதேச தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“வெற்றி தோல்விகள் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. நாங்கள் உத்தரப் பிரேதசத்தில் தோல்வி அடைந்தோம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நாங்கள் 5 மாநில தேர்தலில் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இது மோசமான முடிவு அல்ல.
அதே வேளையில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட்டில் தோல்வி அடைந்ததுள்ளோம் என்பது உண்மை. உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றத்தற்கு நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன”
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.