தமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:
சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் 38.2 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 2035-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 கோடியாக உயரும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவில் 6.4 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இன்னும் 7 கோடி பேருக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நூற்றில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று நிறையக் குழந்தைகள் உடல் பருமனோடு இருப்பதைக் காணமுடிகிறது. உடல் பருமன்தான் சர்க்கரை நோய்க்கு முக்கியக் காரணம், மேலும், பல்வேறு நோய்களுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. குறைவான உடலுழைப்பு, ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவை தான் உடல் பருமனுக்கான முக்கியக் காரணங்களாகும்.
பெருகி வரும் சர்க்கரை நோயாளிகளைக் கணக்கில் கொண்டு, அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றார் ரோசய்யா.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பேசுகையில், “மருத்துவமனையின் சார்பில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்குடன் இணைந்து வடசென்னையில் உள்ள குடிசைப் பகுதி வாழ் மக்கள் மத்தியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம். மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவுபெறும்’ என்றார்.
தினமணி