புது டெல்லி 17 ஏப்ரல் 1950
அன்புள்ள பந்த் அவர்களுக்கு,
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையில், உத்தர பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தர பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னை வியக்கவைக்கிறது. உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய குரல், நான் அறிந்த காங்கிரஸின் குரல் அல்ல… எனது வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களில் எதிர்த்துவந்த குரல்!
ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கிய தலைவர்களின் இதயத்திலும் மனத்திலும் மதவாதம் புகுந்துவிட்டது எனக்குத் தெரிகிறது. இது, நோயாளியால்கூட உணர்ந்துகொள்ள முடியாத மிக மோசமான பக்கவாத நோயாகும். அயோத்தியில் மசூதி மற்றும் கோயில்களிலும் பைசாபாத்தில் விடுதிகளில் நடந்தவை மிக மோசமானவை. இதில் இன்னும் மோசமான செயல் என்னவென்றால், இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடப்பதை நமது தலைவர்கள் சிலரே அங்கீகரிப்பதுதான்.
ஏதோ சில காரணங்களுக்காக அல்லது அரசியல் லாபத்துக்காகவோ இந்த நோயை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இதனால், இந்த நோய் நமது மாநிலம் உட்பட நாடு முழுவதும் பரவிவருகிறது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, இதை மட்டும் எடுத்துக்கொண்டு போராடலாமா என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அப்பணியை மேற்கொள்வேன். அப்போது எனது முழு பலத்தையும் காட்டி இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவேன்.
– ஜவாஹர்லால் நேரு
(இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், பாபர் மசூதி விவகாரம் 22.12.1949 அன்று நள்ளிரவு பெரிதாகத் தலைதூக்கியபோது, பிரதமராக இருந்த நேரு பெரும் மன வருத்தம் அடைந்தார். 1949 டிசம்பர் 26 அன்று, தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அன்றைய முதல்வர் கோவிந்த வல்லப பந்த்துக்கு அனுப்பிய தந்தியிலேயே, ‘அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின் மூலம் உத்தர பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்!’ என்று எச்சரித்தார். தொடர்ந்து இதுகுறித்துப் பல கடிதங்களை அவர் எழுதினார்.)
தமிழில்: ஆ.கோபண்ணா