வாராக்கடன் சுமையால் அழுத்தப்பட்டிருக்கும் அரசுடமை வங்கிகளின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பணம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருக்கிறார்.
வாராக்கடன் சுமையால் புதிய மனுதாரர்களுக்குக் கடன் தர முடியாமல் சிக்கலில் ஆழ்ந்துள்ள அரசு வங்கிகளுக்கு, ரூ.2.11 லட்சம் கோடி மறுமுதலீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ‘எஃப்.ஆர்.டி.ஐ. மசோதா-2017’ அமலுக்கு வந்தால், தங்களுடைய டெபாசிட் பணம் முழுக்கத் திரும்ப வருமா என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை, ‘உள் ஏற்பாடு’ என்கிறது. மறுமுதலீட்டுக்கு டெபாசிட் பணத்தை எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற நிலைக்குழு நிச்சயம் அனுமதிக்காது. அப்படியே அது கவனிக்காமல் விட்டுவிட்டாலும் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்பதற்காகவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி இப்போது உறுதி அளித்திருக்கிறார்.
வங்கிகள் நொடித்துப்போனால், அதில் பணம் போட்டிருந்த டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு சிறிய பங்கையாவது திருப்பித் தருவதற்காக ‘டெபாசிட் காப்பீடு, கடன் உறுதி கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு 1960-களின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. இப்போது அந்த அமைப்பைக் கலைப்பதற்குத்தான் மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. புதிய மசோதாவில், நிதி நெருக்கடி ஏற்பட்டால் டெபாசிட்தாரர்களுக்கு எந்த அளவுக்கு நிதி திரும்பத் தரப்படும் என்று குறிப்பு ஏதும் இல்லை. ரூ.1 லட்சம் வரை போடப்பட்ட சிறு டெபாசிட்டுகள் முழுமையாகத் திரும்பத் தரப்படும் என்ற உறுதிமொழியும் 1993-லிருந்து மாற்றியமைக்கப்படவேயில்லை.
வங்கிகள் போன்ற பெரிய நிதி நிறுவனங்கள் வாராக் கடன் பிரச்சினைகளால் நொடித்துப் போய்விடாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் அவசியம். 2008-ல் அமெரிக்காவின் பெரிய நிதி நிறுவனங்கள் நொடித்துப்போன நிகழ்விலிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்பது அவசியம். இதற்காக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவில் ‘உள் ஏற்பாடு’ என்ற வார்த்தையும் சர்வ தேச நடைமுறையை ஒட்டியே சேர்க்கப்பட்டிருக்கிறது. கடன் அதிகரித்துவிட்டால் மாற்று வழிகளை முயற்சிக்காமல் வங்கியை விற்பது என்ற முடிவைச் சுலபமாக எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ‘உள் ஏற்பாடு’ என்ற வார்த்தை.
வங்கிகளை அதிக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஜன் தன் யோஜனா’வை அரசு கொண்டுவந்திருக்கிறது. அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகளையெல்லாம் ஏழை எளிய, நடுத்தர வங்கி வாடிக்கையாளர்களே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் வகையில் எந்த முடிவையும் அரசு எடுக்கக் கூடாது. ‘உள் ஏற்பாடு’ என்ற வார்த்தைக்குப் பொருள் என்ன, ஏன் அது மசோதாவில் சேர்க்கப்பட்டது என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும். மக்கள் தங்களுடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கிகளில் டெபாசிட் செய்வதுதான் உகந்தது என்ற நம்பிக்கையை அரசு அதிகப்படுத்த வேண்டும்.