நெகிழிப் பொருள்கள் குறித்தும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகமும், அகில இந்திய நெகிழி உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா பேசுகையில், “நெகிழிப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அரசு ஊக்கமளிக்கும்’ என்றார். இந்த மாநாட்டில், நெகிழிக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்தும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்வதால் மட்டும், நெகிழியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைந்துவிடாது என விஞ்ஞானிகள் கூறுவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படாதது பெரும் குறையே. நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் இந்தத் தொழில் மேலும் விரிவடைந்து, சுற்றுச்சூழலுக்கு அதிகப்படியான கேடுகளை விளைவிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளும், நெகிழி உற்பத்தி நிறுவனங்களும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டன.
உலகில் 1950-களில்தான் நெகிழிப் பொருள்கள் அறிமுகமாகின. இந்தியாவில் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி 1957-இல்தான் தொடங்கியது. 2020 ஜனவரி நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 30,000 நெகிழிப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 85-90 சதவீதம் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களில் சுமார் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) நெகிழி நுகர்வு 8 சதவீதமாக உள்ளது.
வேளாண்மை, நீர் மேலாண்மை, ஆட்டோமொபைல், சரக்குப் போக்குவரத்து, கட்டுமானம், பொருள்களைக் கட்டுதல், நுகர்பொருள்கள், தொலைத்தொடர்பு, மின்னணு சாதனங்கள், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றில் நெகிழிப் பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. பொருள்களைக் கட்டுவதற்குத்தான் மிக அதிகளவில் (35 சதவீதம்) நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.53,200 கோடி அளவுக்கு நெகிழிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நெகிழிப் பொருள்களைப் பொறுத்தவரை, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மிக மெல்லிய பைகளால்தான் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. மக்கும் தன்மை இல்லாத ஒரு நெகிழிப் பை சிறு சிறு துண்டுகளாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும்.
காகிதம் போன்ற மற்ற பொருள்களைப் போல் நெகிழிக் கழிவுகள் எளிதில் மக்குவதில்லை. சாலைகளிலும், கழிவுநீர்க் கால்வாய்களிலும், நீர்நிலைகளிலும், கடலிலும் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகளால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, ஆடுகள், மாடுகள், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நெகிழிப் பைகள் தயாரிக்க ûஸலின், எத்தலின் ஆக்ûஸடு, பென்ஸின் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நெகிழிப் பைகள், சூடான உணவுப் பொருள்களையும், குடிநீரையும் அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சாலைகளில் வீசப்படும் நெகிழிக் கழிவுகளை விழுங்கிவிடும் ஆடுகள், மாடுகள், பறவைகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன் நெகிழிக் கழிவு கடலில் கலக்கிறது. கடலில் சேரும் நெகிழிக் கழிவுகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்குக் கடும் இன்னல்கள் ஏற்படுகின்றன. நெகிழிக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், நெகிழிக் கழிவுகளில் 1முதல் 3 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் உற்பத்தியாகும் நெகிழிப் பொருள்களில் 50 சதவீதப் பொருள்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு பின்னர் கழிவுகளாக மாறுகின்றன. ஆண்டுதோறும் 5 டிரில்லியன் (5 லட்சம் கோடி) நெகிழிப் பைகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், நெகிழிப் பொருள்களில் 80 சதவீதம் பயன்பாட்டுக்குப் பிறகு கழிவுகளாக தூக்கிவீசப்படுகின்றன. நமது நாட்டில் தினமும் 25,940 டன் நெகிழிக் கழிவுகள் உருவாவதால், அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
நெகிழிப் பைகள் பயன்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தடை விதிப்பதாலோ கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஊக்குவிப்பதாலோ சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூடிவிட்டு, அவற்றுக்கு பதிலாக மக்கும் தன்மையுடைய காகிதம், துணி, சணல் ஆகியவற்றாலான பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பெருமளவில் தொடங்குவதன் மூலமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இந்த விஷயத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்!
நெகிழி விஸ்வரூபம்! | நெகிழி மறுசூழற்சி குறித்து தில்லியில் நடைபெற்ற சா்வதேச மாநாடு பற்றிய தலையங்கம்
31
Mar