நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல..

இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு:

“பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ஏற்படுத்தும் ஒரு கருத்து” என்று கூறப்படுவதுண்டு. நவம்பர் 9, 2016 அன்று கோடிக்கணக்கானோருக்கும் மேலான இந்தியர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 85% மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் அறிவித்தார். போதிய சிந்தனையற்று வலுக்கட்டாயமாக எடுத்த முடிவினால், நாட்டின் பிரதமர் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.

பிரதமர் நாட்டுக்கான தனது உரையில், “ஒரு நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் வலுவான தீர்மானகரமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை உள்ளதை உணரும் நேரம் வரவே செய்யும்” என்று கூறி இரண்டு முதன்மை காரணங்களை முன்மொழிந்தார். ஒன்று எல்லை தாண்டி பகைவர்கள் கள்ள நோட்டுகளை பயன்படுத்துவது, மற்றொன்று, ‘ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியை உடைப்பது’ ஆகியவையாகும்.

இந்த இரண்டு காரணங்களும் மரியாதைக்குரியவையே, முழு மனதுடன் ஆதரிக்கத் தகுந்தவையே. கறுப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே. இவற்றை நம் கைவசம் உள்ள அனைத்து சக்திகளையும் கொண்டு ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடில்லை. எனினும் வழக்கமாக கூறப்படும் ஒரு வசனம் போல், “நரகத்திற்கான பாதை நல் நோக்கங்களால் ஆனது” என்பதை இங்கு எச்சரிக்கையாக நினைவுபடுத்துவது பொருந்தும்.

பிரதமர் ஒரேநாள் எடுத்த இந்த நோட்டு நடவடிக்கை ‘அனைத்து ரொக்கமும் கறுப்புப் பணம், அனைத்துக் கறுப்புப் பணமும் ரொக்கத்திலேயே உள்ளன’ என்ற தவறான கருத்தின் விளைவாகத் தெரிகிறது. இது உண்மையல்ல. ஏன் இது உண்மையல்ல என்பதை புரிந்து கொள்வோம்.

சீர்கேட்டிற்கும் குழப்பத்திற்கும் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை

இந்தியாவின் 90% ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை ரொக்கமாகவே பெற்று வருகின்றனர். இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். 2001-ற்குப் பிறகு நாட்டில் வங்கிகள் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருந்தாலும் சிறு ஊர்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் 600 மில்லியன் மக்கள் வங்கிச் சேவை கிடைக்கவில்லை. இவர்கள் வாழ்க்கை ரொக்கப்பணத்தில்தான் நடைபெற்று வருகிறது. இவர்களது அன்றாட வாழ்வாதாரமே ரொக்கப்பணம் என்பது ஒரு செல்லக்கூடிய பணமாக மாற்றப்படக் கூடியதால்தான்.

இவர்கள் பணத்தையே சேமிக்கின்றனர், இது வளர்ச்சியடையும் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகவே சேமிக்கின்றனர். இதனை கறுப்புப் பணம் என்று கிழித்து எறிவதும் கோடிக்கணக்கான ஏழைகளுடன் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை இத்தகைய சீர்கேட்டுக்கும் இட்டுச் சென்றதுதான் மிகப்பெரிய துயரம். இந்தியர்களின் பெரும்பான்மையானோர் ரொக்கப்பணத்தில்தான் சம்பாதிக்கின்றனர், அதில்தான் புழங்குகின்றனர், ரொக்கத்தில்தான் சேமிக்கின்றனர். இவையெல்லாம் சட்டப்பூர்வமானதே, நியாயமானதே. எனவே இறையாண்மை பொருந்திய எந்த ஒரு நாட்டின் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அடிப்படை கடமை யாதெனின் குடிமக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் எப்பாடுபட்டாவது காப்பதே. எனவே பிரதமரின் சமீபத்திய நோட்டு நடவடிக்கை இந்த அடிப்படை கடமையை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

இந்தியாவில் கறுப்புப் பணம் என்பது ஒரு உண்மையான கவலையே. இந்த சொத்துக்கள் கணக்கில் காட்டப்படாமல் ஆண்டுக்கணக்கில் சேர்ந்ததாகும். ஏழைமக்களைப் போல் அல்லாமல் இந்த கறுப்புப் பணதாரிகளுக்கு நிலம், தங்கம், அன்னியச்செலாவணி இன்னபிற வடிவங்கள் இருக்கின்றன பதுக்குவதற்கு. கடந்த காலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தாமாகவே முன்வந்து வெளிப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மூலம் இந்த சட்டவிரோத பணத்தை மீட்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கணக்கில்வராத சொத்துகளை குவித்தவர்கள் மீது குறிவைத்து எடுக்கப்பட்டவையாகுமே தவிர அனைத்து குடிமக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்ல.

இந்தக் கடந்த கால நடவடிக்கைகள் உணர்த்தியது என்னவெனில் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் பணமாக வைத்துக் கொள்ளப்படவில்லை என்பதையே. அனைத்து கறுப்புப் பணமும் ரொக்கமாக இருக்கவில்லை. ஒரு மிகத்துளி பகுதியே ரொக்கமாக உள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது பிரதமரின் இந்த நடவடிக்கை ரொக்கமாக தங்கள் ஊதியத்தை சம்பாதிக்கும் நேர்மையான இந்தியர்களுக்கு கவலையளிக்கக் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மாறாக கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் மீது இந்த நடவடிக்கை ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே என்பதாக முடிந்துள்ளது. இன்னும் மோசமடையச் செய்யும் விதமாக அரசு கறுப்புப் பணம் மேலும் பெருக வழிவகை செய்யும் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கை கறுப்புப் பணத்தை ஒட்டுமொத்தமாக அசைக்க முடியவில்லை என்பதோடு அதன் பெருக்கத்தை தடுக்கவும் இல்லை.

எனவே பில்லியன்கள் கணக்கான பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை அளிப்பது என்பதன் நடைமுறை கடினப்பாடுகள் மிகப்பெரியது என்பதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒரு சவாலாகவே திகழ்ந்துள்ளது, அதுவும் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் இது இருமடங்கு கடினப்பாடுகள் நிறைந்த சவாலே. இதனால்தான் பெரிய மதிப்பு நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் போது பல நாடுகள் மெதுவாக, படிப்படியாக செய்து வந்ததே தவிர ஒரே இரவில் செய்யவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான பணத்திற்காக வங்கிகள் வாசலில் மிகப்பெரிய வரிசையில் நிற்பதைப் பார்க்கும் போது மனம் உடைந்து போகிறது. போர்க்காலங்களில் மக்கள் ரேஷன்மயமாக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்காக நீண்ட நெடும் வரிசையில் காத்திருப்பதைப் போன்று ரேஷன்படுத்தப்பட்ட பணத்திற்காக என் தேசத்து மக்கள் ஒருநாள் முடிவற்று வரிசையில் காத்திருப்பார்கள் என்று நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

அரசின் இந்த நடவடிக்கையினால் பெரும்பொருளாதார தாக்கம் மிகத்தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்தியாவின் வர்த்தகம் மிகவும் சரிவு கண்டிருக்கும் போதும், தொழிற்சாலை உற்பத்திகள் குறைந்துள்ள போதும், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் சோகையாக இருக்கும் போதும் இந்த முடிவு பொருளாதாரத்திற்கு ஒரு எதிர்மறை அதிர்ச்சியே. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணத்தின் பங்காற்றல் பிறநாடுகளை ஒப்பிடும் போது இந்தியவில் அதிகம். இதுவே இந்தியப் பொருளாதாரம் ரொக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதன் அடையாளமாகும். நாட்டின் வளர்ச்சியில் நுகர்வோர் நம்பிக்கை என்பது மிகமுக்கியமான அம்சமாகும். இதனால்தான் கோடிக்கணக்கான இந்திய நுகர்வோரின் நம்பிக்கை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இந்தியர்களின் நேர்மையான செல்வங்கள் ஒரே இரவில் இல்லாமல் செய்யப்பட்டதும், புதிய நோட்டுக்கள் எடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பதும் சேர்ந்து ஏற்படுத்திய காயத்தின் தழும்பு ஆறுவதற்கு பல காலமெடுக்கும். இது ஜிடிபி-யிலும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே ஒரு தேசமாக நாம் கடினமான காலக்கட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது தேவையில்லாததுதான்.

கறுப்புப் பணம் நம் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனை அகற்றுவது முதற்கண் கடமையாகும். இதனை செய்யும் போது கோடிக்கணக்கான நேர்மையான இந்தியர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் மனதில் கொள்வது அவசியம். தங்களிடமே அனைத்திற்கும் தீர்வு உள்ளது என்றும் முந்தைய அரசு கறுப்புப் பண ஒழிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இந்த அரசு நினைப்பது ஆசையைத் தூண்டுவதும், சுயநிறைவை அளிப்பதாகவும் தோன்றலாம். ஆனால் இது அப்படியல்ல. அரசுகளும் தலைவர்களும் நலிவுற்றோர் மீது அக்கறை செலுத்த வேண்டும். எந்த நிலையிலும் இந்தப் பொறுப்பை இவர்கள் கைவிடுதல் கூடாது. பெரும்பாலான கொள்கைகள் நாம் எதிர்பார்காத விளைவுகளை ஏற்படுத்தும் இடர்பாடுகளைக் கொண்டதே. இவ்வகையான இடர்பாடுகளை இத்தகைய முடிவுகளினால் விளையும் நன்மைகளைக் கொண்டு சமன் செய்ய வேண்டும். கறுப்புப் பணத்திற்கு எதிராக போர் தொடுப்பது நம்மை மயக்குவதாக இருக்கலாம் ஆனால் இவற்றால் நேர்மையான இந்தியர் ஒருவர் உயிர் கூட பலியாகக் கூடாது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *