மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. எனினும், 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன்வந்தார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார் என்ற தகவல் உண்டு. இப்போதும் கூட்டணியற்ற கூட்டணியாக இரு கட்சிகளையும் அவர்களுடைய அரசியல் எதிரிகள் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 1998-க்குப் பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்படும் எனச் செய்திகள் வெளியாவது இயல்பு. இந்தத் தேர்தலிலும் இப்படித்தான் பேசப்பட்டுவந்தது. ஆனால், அது சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
இரு கட்சிகளுக்கும் இடையேயான ‘தாமரை இலை’ தொடர்புகள் ஆச்சரியமளிப்பவை. திராவிடக் கட்சியாக இருந்தாலும் அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆரும், அதன் பிறகு அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதாவும் வெளிப்படையாகவே இந்து அடையாளங்களை ஏற்றவர்கள். மண்டைக்காடு மதக் கலவரத்தின்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அன்றைக்கு வளர்ந்துவந்த இந்து முன்னணியை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டு இன்றைக்கும் உண்டு. கன்னியாகுமரியில் பாஜக வளர்ந்ததற்கும்,தமிழகத்தில் வேர் விட்டதற்கும் இதுவே காரணம் எனப் பேசுவோரும் உண்டு.
திருப்புமுனை கூட்டணி
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜெயலலிதா, 1998 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, மதிமுகவுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்தார். இது தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் பாஜகவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை கூட்டணி அமைக்கத் தயங்கிய கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் துணிந்தன. பாஜகவுடன் கூட்டணி என்ற ஜெயலலிதாவின் அந்த முடிவுதான் 1998-ல் 20-க்கும் அதிகமான சிறிய கட்சிகளை இணைத்து வாஜ்பாய் ஆட்சி அமைக்க வழிவகுத்தது.
13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த் தாலும், அதன் பிறகு பாஜக – திமுக கூட்டணி ஏற்பட்டாலும் கொள்கை அளவில் பாஜகவுக்கும் அதிமுகவுக்குமிடையே முரண்பாடு பெரிய அளவில் இருப்பதாக இரு கட்சியினரும் நினைக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக அரசு அமைந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக 2001 முதல் 2004 வரையிலான அதிமுக ஆட்சி இருந்தது என்று சொல்பவர்களும் உண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் பாஜக ஆளும் மாநில அரசுகளே கொண்டுவரத் தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. குஜராத் கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். கிராமக் கோயில்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுவதைத் தடை செய்தார். பெரும்பான்மையினரை வஞ்சித்து சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் ஓட்டுவங்கி அரசியல் நடக்கிறது என பகிரங்கமாக அறிக்கைகள் விடத் தொடங்கினார். அப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்தனர். இதே காலகட்டத்தில்தான் வாஜ்பாய் அரசில் திமுக அங்கம் வகித்தது என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.
மாறிய முகம்
ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்த பிறகு ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை தலைகீழாக மாறத் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குள் மதமாற்றத் தடைச் சட்டம், கோயில்களில் விலங்குகளைப் பலியிடத் தடை என அனைத்தையும் திரும்பப் பெற்றார். 2004 ல் தீபாவளிக்கு முதல் நாள் ஒரு கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியார் ஜெயந்திரர் கைதுசெய்யப்பட்டார்.
இதனால், 1999- ல் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த போதுகூட இல்லாத அளவுக்கு அதிமுக – பாஜகவுக்கு இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. 2004-க்குப் பிறகு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைத் தவிர மற்ற பாஜக தலைவர்களை ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. தேர்தல் கூட்டணியும் வைக்கவில்லை. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அப்போதைய பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி தீவிர முயற்சி மேற்கொண்டும் அது பலிக்கவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்துவதுபோல இடதுசாரி கட்சிகளைக் கூட்டணியிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனாலும் அதிமுக – பாஜக கூட்டணி அமையவில்லை.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. எனினும், 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன்வந்தார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார் என்ற தகவல் உண்டு. இப்போதும் கூட்டணியற்ற கூட்டணியாக இரு கட்சிகளையும் அவர்களுடைய அரசியல் எதிரிகள் பார்க்கின்றனர்.
தயக்கமும் வியூகமும்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் முதலில் 10 %க்கும் அதிகமாக உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளில் ஒரு பகுதியை அதிமுக இழக்கவேண்டியிருக்கும். அடுத்ததாக அந்த வாக்குகள் சுளையாக திமுக பக்கம் போய் விழும் என்று பலரும் கூறுகின்றனர். இன்னொரு காரணமும் உண்டு. மற்றக் கட்சிகள் அனைத்தும் மதவாதத்தை வீழ்த்துவதே தங்களது முதல் இலக்கு எனக் கூறி திமுக அணியில் இணைந்துவிடும் என்பதே அது. இதுதான் 2004-ல் நடந்தது. அப்படியொரு மகா கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதே இதில் முக்கியமான விஷயம். இந்நிலையில்தான், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழிசை செளந்தரராஜனும் இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்.
2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாகத் தமிழகத்தில் எடுக்கப்பட்ட அனைத்துக் கணிப்புகளிலும் நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு இருந்தது. 60 %- க்கும் அதிகமானோர் மோடி பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் எதிராக இருந்தன. பாஜக கூட்டணிக்கு 2 இடங்களும், தனித்துப் போட்டியிட்ட அதிமுகவுக்கு 37 இடங்களும் கிடைத்தது எப்படி? பலர் சொல்லும் காரணம், மோடி ஓட்டுகளையும் அதிமுகவுக்கே போட்டோம் என்பதுதான். பாஜகவுக்கு வாக்களித்தால் வெற்றி பெறுவது கடினம்.தேர்தலுக்குப் பிறகு மோடி ஆட்சி அமைக்க அதிமுக உதவும். அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு மோடி பிரதமராக வழிவகுக்கும். ஆக, கூட்டணி இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இந்த அளவுக்கு வாக்காளர்களின் புரிதல் இருந்தது.
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் எப்படியானதாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அதிமுகவின் ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக மாநிலங்களவையிலும், மாநிலங்களவைத் தேர்தலிலும். ஆக, மத்தியில் ‘அந்தக் கூட்டணி’ இன்றுபோல் என்றும் தொடரும். ஆனால், மாநிலத் துக்குள் அது வெளிப்படையாக இந்தத் தேர்தலில் அமையாது என்பதே உள்ளரசியல் தெரிந்தவர்கள் சொல்லி வந்த ஊகம். அரசியல் என்பதே விசித்திரமானது. கொள்கைரீதியாக எதிரெதிர் துருவங்களிலுள்ள திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து 2 தேர்தல்களைச் சந்தித்தன. 5 ஆண்டுகள் பாஜக அரசில் திமுக அங்கம் வகித்தது. பெரிய வேறுபாடுகளில்லாத அதிமுக – பாஜக கூட்டணி 13 மாதங்களே நீடித்தது. விரும்பியவர் களுடன் இணைய முடியாததும், விரும்பாதவர்களுடன் கூட்டணி அமைக்க நேர்வதும்தான் அரசியல்.
– முத்தையா சரவணன்,
– தி இந்து