இந்திய நீதித் துறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது என்றும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர். நீதித் துறைக்கு உள்ளேயே எழுந்திருக்கும் சவால்களை உடனடியாக எதிர்கொண்டு தீர்ப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுவதும், எழுப்பப்படுவதும் அதிகரித்து வருவது மட்டுமல்ல, சில நீதிபதிகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதும் பரவலான கவலையை எழுப்பி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் கடமையிலும், தனிப்பட்ட செயல்பாடுகளிலும் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
நீதித் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதற்கும், அவப் பெயர் எழுந்திருப்பதற்கும், நீதிபதிகளைவிட வழக்குரைஞர்களின் செயல்பாடுதான் காரணம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நீதிபதி தாக்கூர், வழக்குரைஞர்களை நேரிடையாகக் குறை கூறாவிட்டாலும், அவர்களது செயல்பாட்டையும் விமர்சிக்காமல் இல்லை. நீதிபதிகள் கூடுதல் நேரம் பணியாற்றி வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர எத்தனித்தாலும் வழக்குரைஞர்கள் அவர்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்கிற உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் கூறிய கருத்துகள் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவை. “”வெளியிலிருந்து நீதித் துறை பற்றிய விமர்சனங்களை நாம் எதிர்கொள்ள முடியும். ஆனால், நீதித் துறைக்கு உள்ளேயே இருந்து எழுகின்ற சவால்கள்தான் நாம் கவனமாக எதிர்கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன” என்கிற நீதிபதி தாக்கூரின் கூற்று கவனத்திற்குரியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துகள் அனைத்துமே போதிய முன்னுரிமை பெற்று ஊடகங்களால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அவர் சொல்லாமல் விட்ட சில கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சில சட்டங்களை இப்போதும் நாம் அகற்றாமல் பின்பற்றி வருவது குறித்து அவர் ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று புரியவில்லை.
தேச விரோதம் குறித்த சட்டப் பிரிவு 124(அ) உள்ளிட்ட பல சட்டங்கள் மீள்பார்வைக்கு உள்படுத்தப்பட வேண்டும். இப்போதும்கூட நீதிமன்றங்களில் முந்தைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. மாறிவிட்ட காலச் சூழலுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும், சவால்களுக்கும் ஏற்றபடி புதிய கண்ணோட்டத்தில் தீர்ப்புகளை வழங்காமல், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் இன்னமும்கூடத் தொடர்ந்து பல நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், இதை உரக்கச் சொல்ல வழக்குரைஞர்களும் சரி, மாற்றத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் நீதிபதிகளும் சரி தயாராக இல்லை.
அந்தக் கூட்டத்தில் அவர் கூறியிருக்கும் இன்னொரு கருத்தும் இன்றைய சூழலில் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது மட்டுமல்ல, தீர்வு காண வேண்டியதும் கூட. இந்திய நீதிபதிகள் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வேலை பளுவுடன் பணியாற்றுகிறார்கள் என்பதும், குறிப்பிட்ட வரையறைக்குள் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் ஒரு நீதிபதி மூன்று முதல் ஐந்து வழக்குகளைத்தான் ஒரு நாளில் கையாள்கிறார். இந்தியாவில் பல நீதிபதிகள் ஏறத்தாழ 150 வழக்குகளை ஒரு நாளில் கையாள நேர்கிறது. அதுமட்டுமல்லாமல், அதற்கான வசதிகள் தரப்படுகிறதா என்றால் கிடையாது.
உயர்நீதிமன்றங்களில் உள்ள 1,016 இடங்களில் 400 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் 5,000-க்கும் அதிகமான இடங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாத நிலைமை. நீதிபதிகள் நியமன ஆணையப் பிரச்னையால் 2015-ஆம் ஆண்டில் ஓர் இடம்கூட நிரப்பப்படவில்லை. நீதிபதிகள் நியமனம் குறித்து விரைந்து ஒரு முடிவு எடுக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் சூழல்.
மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர இந்திய நீதிமன்றங்கள்
நவீனப்படுத்தப்படுவதும், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம். நீதிபதி தாக்கூர் கூறுவதுபோல, போர்க்கால அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கும் 81 லட்சம் வழக்குகளையாவது விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்தால் ஓரளவுக்கு மூச்சு விடலாம்.
நீதி நிர்வாகத்தை முறைப்படுத்துவது, தேவையில்லாத அரசு தரப்பு வழக்குகளைக் குறைத்துக் கொள்வது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் மாற்று வழிகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் ஓரளவுக்கு வழக்குகள் தேங்காமல் இருக்க உதவக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்கூர் எச்சரித்திருப்பது போல, நீதித் துறை குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இதுதான் இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல்!