”பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது 2014 மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு முறையே ரூ. 9.48; ரூ. 3.65 என்ற அளவில் இருந்தது.
கடந்த 2014 நவம்பர் 12 முதல் 2016 ஜனவரி 14 வரையில் 14 மாதங்களில் மோடி அரசு கலால் வரியை பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10.77; டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 12.70 ஆக உயர்த்தியது. இதனால் மத்திய அரசுக்குக் கலால் வரியாக மட்டும் பெட்ரோலுக்கு ரூ. 20.25; டீசலுக்கு ரூ. 16.35 போய்ச் சேருகிறது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29.70 அமெரிக்க டாலர் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது. கச்சா எண்ணெய் விலை சுமார் 5 மடங்கு சரிந்துள்ள நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை 2 மடங்கு அளவுக்காவது குறைத்து இருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் டீசல் விலைகளைக் குறைப்பதற்கு முயற்சிக்காமல் கலால் வரியைத் தாறுமாறாக நிர்ணயிப்பது கண்டனத்திற்கு உரியதாகும். இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ. 23.77 மட்டுமே. இதைப் போலவே டீசல் உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ. 24.67 மட்டும்தான். ஆனால், மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் (VATS) மற்றும் விற்பனை வரி போன்றவற்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கின்றன.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்திற்குத் தகுந்தாற்போல, விலை நிர்ணயம் செய்து அநியாயமாக விதிக்கப்படும் கலால் வரி மற்றும் இதர வரிகளைக் குறைத்தால், இப்போதுள்ள விலையைக் காட்டிலும் பாதி அளவுக்குக் குறைக்க முடியும்.
ஆனால், மத்திய அரசு பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 2014-15 நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்குப் பெட்ரோலியத் துறையிடம் இருந்து கலால் வரியாக ரூ. 99,184 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இந்தத் தொகையை மேலும் அதிகரிக்கவே கலால் வரியை மத்திய அரசு உயர்த்துகிறது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேராமல், அரசு மட்டுமின்றி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றன. இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, மத்திய அரசு மக்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.