விபத்து

விபரீதத்தில் முடிந்த ‘வெட்டிங் போட்டோசூட்’! ஆற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி!

திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷூட்டின்போது, பாறையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்தவர் ரெஜில். இவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் திருமணத்துக்குப் பிந்தைய போட்டோஷூட் எடுப்பதற்காக ஜானகிகாடு அருகே குட்டியாடி ஆற்றிற்கு வந்தனர்.

நேற்று காலை 7 மணி முதல் போட்டோஷீட்டில் தம்பதியர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு பாறை மீது போட்டோஷீட் எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரியாத காரணத்தால் ரெஜில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் காப்பாற்றப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பெருவண்ணாமுழி காவல்துறையினர் கூறுகையில், “குட்டியடி ஆற்று நீருக்கு அடியில் பல ஆழமான குழிகள் உள்ளன. இதை அறியாமல் கடந்த காலங்களில் பல சுற்றுலா பயணிகளுக்கு அவை மரண பொறியாக மாறியுள்ளன. நீச்சல் தெரியாத ரெஜில், அந்த குழி ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தனர். திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், போட்டோஷீட் எடுக்க வந்து மாப்பிள்ளை உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *