Hijab Row : கடந்த 2021-ல் SSLC தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று தொடங்கிய SSLC தேர்வை சுமார் 21 ஆயிரம்பேர் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக் கூடாது என்று அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த சூழலில் மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கும் என்றும், இதில் பங்கேற்பவர்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று தேர்வு தொடங்கியபோது முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருப்பி அனுப்பினர்.
நேற்று தேர்வு எழுத தகுதி பெற்றவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று கடந்த 2021-ல் தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.