இந்தியா, பயங்கரவாதம், விமர்சனம்

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

The Babri Masjid

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’ என்ற பெயரில் சில சடங்குகள் செய்யப்பட்டிருப்பதும் வரப்போகும் ஆபத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னும் ஓராண்டில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இப்போதே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன.

கோயில் கட்டுவதற்குத் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பில், கட்டுமானத்துக்கான கற்களில் பாதிக்குமேல் வந்து இறங்கிவிட்டன. ஒவ்வொரு முறை கற்கள் வந்து இறங்கும்போதும் நடத்தப்படும் பூஜைகள் மக்களை எதற்கோ தயார் செய்வதைப் போலிருக்கிறது. இப்படி பூஜைகள் செய்வது வழக்கம்தான் என்று பரிஷத் கூறினாலும் கிட்டத்தட்ட 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இது நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் கோயிலை இடித்துத் தள்ளிவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான சட்டப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்களில் பலர் நம்புகின்றனர். இந்த இடத்தை மூன்றாகப் பிரித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த இடம் பற்றிய பிரச்சினையில் பழைய நிலையே நீடிக்கிறது என்பதால், இப்போதைக்குக் கோயில் கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை.

இந்நிலையில், நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப்போகிறது என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லாமல் கோயில் கட்டுமானத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘ராம ஜன்மபூமி நியாஸ்’ என்ற அறக்கட்டளை, இந்தப் பிரச்சினை தொடர்பாக மத உணர்வுகளைத் தூண்டிவிடப் பார்க்கிறது. இந்த அறக்கட்டளை விசுவ இந்து பரிஷத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முன் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாநிலக் காவல் துறைக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. எனினும் ஓரிரு வதந்திகள் பரவினால் போதும், வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்க்கப்படும் அபாயத்துக்கு வாய்ப்பிருக்கிறது.

நீதிமன்ற ஆணையை மீறியதாகத் தங்கள் மீது பழி வந்துவிடக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக நேரடியாக எதையும் கூறாமல் சுற்றிவளைத்துப் பேசுகிறார்கள். பாஜக இப்போது விசுவ இந்து பரிஷத்தின் போர்வைக்குள்ளிருந்து கோயில் கட்டுவதற்கான வேலைகளைத் தீவிரமாக முடுக்கப் பார்க்கிறது. கோயிலைக் கட்ட முடிந்தால் புகழ் தனக்குச் சேரவும், விபரீதமாகிப் பழி ஏற்பட்டால் அதை பரிஷத் மீது போட்டுவிடவும்தான் இந்த உத்தி.

விசுவ இந்து பரிஷத் உசுப்பிவிடப்போகும் சக்திகளைத் தக்க நேரத்தில் தன்னால் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று பாஜக நினைத்தால் அது தவறான முடிவாகும். வெறுப்பூட்டும் பிரச்சாரங்களுக்கு வீரியம் அதிகம். ஒரு கட்டத்தில் நாசகரமான விளைவுகளை அவை ஏற்படுத்திவிடும். வகுப்பு துவேஷத்தை வளர்க்கும் அரசியல் விளையாட்டுகளுக்கு யாரும் ஊக்கம் அளிக்கக் கூடாது. பாஜக என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தது என்பதை பிரதமர் மோடி மறந்துவிடலாகாது!

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *