டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசு, டெல்லி மாநில அரசு இடையிலான மோதலாகவே இவ்விஷயம் மாறியிருக்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது சுமத்தியிருக்கிறது ஆஆக.
டெல்லி முதல்வரின் முதன்மைச் செயலாளர் ராஜேந்தர் குமார் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் தேடுவதற்காக மேற்கொண்ட சோதனை என்று சொல்லப்பட்டாலும், இவ்விஷயத்தை சி.பி.ஐ. இன்னும் நாசூக்காகக் கையாண்டிருக்கலாம். முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல் சோதனை போடப்பட்டது என்பதற்காக சி.பி.ஐ.யைக் குறைகாண முடியாது. ஆனால், இந்தியா போன்ற கூட்டாட்சி நடைபெறும் தேசத்தில், ஒரு மாநில முதல்வரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. நுழைகிறது என்றாலே அதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்யும். சமீபத்தில் இமாச்சலப்பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்கும் இதேபோல சி.பி.ஐ. சோதனைக்கு ஆளானார். ஆனால், அவர் மீது ஊழல் புகார் இருப்பதால் அது பெரிய பிரச்சினை ஆகவில்லை. அதையும் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சோதனையாகவே காங்கிரஸ் கண்டித்தது குறிப்பிடத் தக்கது.
2007 முதல் 2014 வரையில் ராஜேந்தர் குமார் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்த முடிவுகள் குறித்துத்தான் சி.பி.ஐ. விசாரித்துவருகிறது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரையில் முதல்வர் அலுவலகத்துக்கு வந்த கோப்புகள், வெளியே சென்ற கோப்புகள் பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளதாக கேஜ்ரிவால் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால், சோதனையின் இலக்கு ராஜேந்தர் குமார் மட்டுமல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதேசமயம், சோதனைக்குக் காரணம் மோடிதான் எனும் எண்ணத்தில் ‘கோழை’ என்றும் ‘மனநோயாளி’ என்றும் கேஜ்ரிவால் வசைபாடியது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஜன்லோக்பால் என்று தான் கொண்டுவர விரும்பும் விசாரணை அதிகாரிக்கு வரம்பற்ற அதிகாரம் தரப்பட வேண்டும் என்று வாதிடும் கேஜ்ரிவாலா இப்படி நடந்துகொள்வது எனும் கேள்வி எழுகிறது. மோடிக்கு எதிராக தேசிய அளவில் திரளும் அரசியல் கூட்டணியின் முகமாக இருக்க விரும்புகிறார் கேஜ்ரிவால். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக – அகாலிதளக் கூட்டணி மீது மக்களுக்குள்ள அதிருப்தியைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளப் பார்க்கிறது ஆஆக.
இவ்விஷயத்தில் பாஜக தலைவர்கள் நடந்துகொள்ளும் விதமும் விமர்சனத்துக்குரியது. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தாங்கள் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதையும் பாஜகவினர் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு, அம்மாநில ஆளுநர் மூலம் மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவே விமர்சிக்கப் படுகிறது.
கூட்டாட்சித் தத்துவத்தின்படி நடைபெறும் நாட்டில் மத்திய அரசு, மாநில அரசுகளை நடத்தும் விதம் விமர்சனத்துக்குரியதாக மாறியிருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும். அதேபோல், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் புகார்களைச் சட்டபூர்வமாகச் சந்திக்க அருண் ஜேட்லி முன்வர வேண்டும். அப்போதுதான், மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கும்.
-தி இந்து