மத்தியப் பிரதேசத்தில் சிமி இயக்கத்தோடு தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த எட்டு இளம் விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை உருவாக்குகிறது. பலத்த பாதுகாப்பு அரண்களைக் கொண்ட போபால் சிறையிலிருந்து சிறைக் காவலரைக் கொன்றுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாகவும், காவல் துறையினர் சுற்றி வளைத்தபோது சரண் அடைய மறுத்ததாகவும், அப்போது எட்டுப் பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அரசுத் தரப்பு சொல்வதை ஏற்க முடியவில்லை. பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. கைதிகள் கொல்லப்படுவதற்கு முன்னதாகவும், கொன்ற பிறகும் செல்பேசியில் சிலர் எடுத்துள்ள காட்சிகளைப் பார்க்கும்போதும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் “கைதிகளிடம் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரியவில்லை; கற்களைக் கொண்டே அவர்கள் போலீஸாரைத் தாக்கினார்கள்” என்று சொல்வதைக் கேட்கும்போதும் இது ‘போலி என்கவுன்ட்டர்’ என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.
முதலில் உயர் பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட அந்தச் சிறையிலிருந்து, எட்டுக் கைதிகளும் எப்படித் தப்பிச் சென்றார்கள்? அவர்கள் தப்பிச் செல்வதற்கான உபகரணங்களும் ஆயுங்களும் அவர்களுக்கு எங்கிருந்து வந்தன? காவலரைக் கொன்றுவிட்டுத் தப்பிக்கும் திட்டத்தை யார் வகுத்தது? சம்பவம் நடந்தபோது சிறையின் கண்காணிப்புக் கோபுரங்களில் காவலர்கள் இல்லையா? ஒளி விளக்குகள் எரியவில்லையா? உயரமான இரு மதில் சுவர்களை எட்டுப் பேரும் எவருடைய கண்களிலும் படாமல் அடுத்தடுத்து எப்படி ஏறிக் குதித்துத் தப்பிக்க முடிந்தது? சிறையைச் சுற்றிலும் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கேமராக்கள் ஏன் அன்றைக்கு மட்டும் பழுதாகியிருந்தன? இப்படி எண்ணற்ற கேள்விகள் ஆரம்ப நிலையிலேயே எழுகின்றன.
இப்படிப்பட்ட மோதல்கள் நடந்தால், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணை நடைமுறைகளை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வகுத்துத் தந்திருக்கிறது. பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் உருவாக்கியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணை ஏதும் தேவையில்லை, வெறும் மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணையே போதும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்களைத் ‘தேச விரோதிகள்’ எனச் சித்திரிக்கும் வேலையில் ஆளும் பாஜகவினர் இறங்கியிருப்பது மிக மோசமான போக்கு. என்கவுன்ட்டர் தொடர்பாகக் கேள்வி கேட்பதாலேயே கொல்லப்பட்டவர்களை ஆதரிப்பதாகவோ, அவர்களுடைய சித்தாந்தத்தை ஆதரிப்பதாகவோ ஆகிவிடாது. அந்த விசாரணைக் கைதிகள் உள்ளபடி குற்றவாளிகள் என்றால், நிச்சயம் தண்டனைக்குரியவர்கள்.
ஆனால், அவர்களுக்கான தண்டனையை அளிப்பதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. உரிய சட்டப் பரிபாலன முறை இருக்கிறது. சட்டத்தின்படியான ஆட்சி நடைமுறைகளில் சந்தேகம் எழும்போதும் மனித உரிமைகள் மீறப்படும்போதும் அதைக் கேள்விக்குள்ளாக்குவதிலேயே ஜனநாயகத்தின் சிறப்பு இருக்கிறது. எதிர்க் கேள்வி கூடாது எனும் போக்கு தவறு. இந்த விவகாரம் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்!