இன்றைய அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, கணக்கிட முடியாத அதன் இயற்கை வளங்கள், பரந்த நிலப் பரப்பு. அளவான மக்கள்தொகை. இரண்டாவது, அங்கு சென்றடைந்த மக்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு சென்றார்கள். உழைத்தார்கள். மேற்கே செல்லச் செல்ல அவர்களுக்கு நிலம் முடிவே இல்லாதபடி கிடைத்துக்கொண்டிருந்தது. மூன்றாவது, உலகின் பெரிய நாடுகள் அனைத்தும் உலகப் போர்களில் பெருத்த அழிவைச் சந்தித்தன. இந்தியா போன்ற நாடுகளில் போர்க்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் மாய்ந்தனர். அமெரிக்கா மட்டும்தான் அதிக அழிவில்லாமல் தப்பித்துக்கொண்டது. உள்நாட்டுக் கடன் இருந்தாலும், உலக நாடுகள் அனைத்துக்கும் கடன் கொடுக்கும் நிலையில் அது இருந்தது.
நான்காவது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித மேதைமையின் மையம் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறிவிட்டது. உலகிலேயே அதிக நோபல் பரிசு பெற்றவர்கள் அமெரிக்கர்கள். முதல் 45 ஆண்டுகளில் 29 பேர். அடுத்த 70 ஆண்டுகளில் 334 பேர். உலகத்துக்கே உதாரணமாக அமெரிக்கா இருந்திருக்கலாம். ஆனால் இல்லை. காரணம் என்ன? கட்டுக்கடங்காத செலவு ஒரு காரணம்.
கடன் சுமை
அமெரிக்காவின் கடன் சுமை 20 ட்ரில்லியன் டாலர்கள். இதில் வெளிநாட்டுக் கடன் 6.5 ட்ரில்லியன் டாலர்கள். ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பங்கள் மீதும் 8 லட்சம் டாலர்கள் (ரூ.5 கோடி) கடன் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 3 ட்ரில்லியனாக இருந்த கடன், இப்போது 15 ஆண்டுகளில் ஏழு பங்கு ஏறிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ரூ.100 என்றால், கடன் ரூ.106.
அமெரிக்க அரசு அநாவசியச் செலவைக் குறைத்து, பணக்காரர்கள் மீது வரியை அதிகரித்தால் கடனைக் குறைக்கலாம். 2008-ல் பொருளாதார நெருக்கடியின்போது ஜார்ஜ் புஷ் வரியைக் கணிசமாகக் குறைத்ததால், அரசின் வருமானம் குறைந்து கடன் சுமை அதிகரித்தது என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். குடியரசுக் கட்சியினர் மக்கள் நலனுக்கு அரசு அதிகம் செலவிடக் கூடாது என்று சொல்லிவந்தாலும், மக்கள் நலனுக்கான செலவைச் சீர்செய்வதன் மூலம் கணிசமான செலவுக் குறைப்பை நிகழ்த்தலாம் என்று ட்ரம்ப் சொல்கிறார். ‘என்னைப் போன்றவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்கிறார். ஆனால், பல முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் ‘ஒபாமாகேர்’ போன்ற மக்கள் மருத்துவ வசதித் திட்டங்கள் கடன் சுமையை அதிகரிக்குமே தவிர, குறைக்காது என்கிறார்கள். அமெரிக்காவின் கடன் அவ்வளவு சீக்கிரம் குறையும் என்று தோன்றவில்லை. மற்றவர்களை நெருக்குவதுபோல அமெரிக்காவை நெருக்க முடியாது. காரணம், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற பயம் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது.
ராணுவச் செலவு
அமெரிக்காவின் ராணுவச் செலவு, சுமார் 600 பில்லியன் டாலர்கள். இது எவ்வளவு அதிகம் என்பதற்கு இரு உதாரணங்கள் தருகிறேன். மக்கள் நலனுக்கு அமெரிக்க மைய அரசு செலவழிப்பது சுமார் 30 பில்லியன் டாலர்கள். மக்கள் மருத்துவ வசதித் திட்டங்களுக்கு 66 பில்லியன் டாலர்கள். அமெரிக்காவின் ராணுவச் செலவு, உலகில் அதிகமாக ராணுவச் செலவு செய்யும் அடுத்த ஏழு நாடுகளான சீனா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா இவற்றின் மொத்தச் செலவை விட அதிகம். ஆனால், ராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்று எழும் குரல்கள், மக்களுக்காக அரசு செய்யும் செலவைக் குறைக்க வேண்டும் என்று எழும் குரல்களைவிட மிகக் குறைவு. நமது தேசபக்தர்களைக் காலை உணவுக்குச் சாப்பிடக்கூடிய ராட்சச தேசபக்தர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவர்கள் முக்கியமான இடங்களில் இருப்பதால் ராணுவச் செலவைக் குறைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமாகத் தோன்றவில்லை. ஒருவேளை, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நிலைமை மாறலாம்.
எரிசக்தியும் நுகர்வு சக்தியும்
அமெரிக்காவில் வெயில் அடிக்கும் இடங்கள் அதிகம். ஆனால், துணிகள் வெளியில் உலர்வதைப் பார்க்கவே முடியாது. எல்லா வீடுகளிலும் மின்சார உலர்த்திகளின் மூலமே துணிகளைக் காய வைக்கிறார்கள். அமெரிக்கர்கள்தான் உலகிலேயே எரிசக்தியை அதிகம் பயன்படுத்துபவர்கள். இந்தியர்களைவிட 30 மடங்குகளுக்கும் மேல் எரிசக்தியைப் பயன்படுத்துகிறார்கள். எதற்கும் காகிதம். மூக்கைத் துடைப்பதிலிருந்து தரையைத் துடைப்பது வரை. டெல்லியில் எங்கள் வீட்டில் ஒரு மாதம் சேரும் காகிதக் குப்பை இங்கு ஒரு நாளில் சேர்ந்துவிடுகிறது. இந்தியர்களும் சீனர்களும், அமெரிக்காவில் வசிப்பவர்களைப் போல வாழ ஆரம்பித்தால் உலகம் தாங்காது. ஆனால், இவற்றைப் பற்றிப் பேச்சையே காணோம். எல்லோரும் அமெரிக்க மக்களின் நுகர்வு சக்தியையும் பணம் செலவு செய்யும் சக்தியையும் அதிகரிக்க வேண்டும் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்றத் தாழ்வு
ஜனவரி 2016-ல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஏற்றத்தாழ்வின் ஐக்கிய நாடுகள் (The United States of Inequality) என்ற கட்டுரை வந்தது. அது 2009 லிருந்து 2013 வரை நடந்த வளர்ச்சியில் 85% வருமானத்தின் உச்சத்தில் இருக்கும் 1% மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்றது. அமெரிக்காவின் முதல் 1. 6 குடும்பங்கள் அடுத்த 166 மில்லியன் குடும்பங்களைவிட 25 மடங்குக்கும் மேல் அதிக வருவாய் ஈட்டினார்கள் என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.
இருவரில் யார் வந்தால் ஏற்றத்தாழ்வு குறையும்?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.