கட்டுரை, சிந்தனைக் களம், போராட்டம், விபத்து, விமர்சனம்

ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது அந்தக் குரல் – “நாங்க நவம்பர் 16-ம் தேதியே தேங்காப்பட்டணம் ஆர்பர்ல இருந்து மீன் புடிச்ச கடலுள்ள போயாச்சி. கடலுன்னா, 200 நாட்டிக்கல் வெலங்க, பெரிய கப்பல்வ போற எடம். நாங்க வழிவலத் தொழிலுக்காக்கும் போனோம். சரியான பாடு இல்ல. திரும்பி வார வழியில, திருழாத் தேரமாச்சேன்னு 29 -ம் தேதி பொழுது விடிய திரும்பவும் வல எளக்குதோம். எங்க கூட்டுப் படகுவளும் இது போலதாம் வல வுடுதாவ. 30-ம் தேதி விடிய காத்து மாறிச்சி, பேக்காத்தா வந்து வுழுது. கடலும் துள்ளாட்டம் போடுது” என்று அச்சம் விலகாமல் சொன்னார், நான் தூத்தூர் சின்னத்துறையில் சந்தித்த அந்தோனிதாஸ். தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் ஒக்கி புயலின் கோரத்தை உணர்த்துகின்றன.

“சேலு சரியில்லியன்னு சொல்லிக் கூட்டுப் படகுவள விளிச்சி, வலயள ஏத்தச் சொல்லிட்டோம். 11 மணிக்குள்ள அத்தன போட்டுலயும் வல ஏத்தி முடிச்சாச்சி. எல்லாரும் கர நோக்கி ஓடுதோம். காத்து பொசலெடுத்து நிக்கிது. இருளங் கெட்டிகிட்டு கண் போச்சலும் மங்கிப் போச்சி. கூட்டுப் படகுவ வருதா, வருல்லியா ஒண்ணுந் தெரியில. எங்க போட்டுல கூலிங் தண்ணி போகாததுனால எஞ்சின் சூடாயி நின்னு போச்சி. பயத்துல கோஸ்ட் கார்ட கூப்புடுதோம், நேவியக் கூப்புடுதோம், கூப்பாடு போடுதோம் ஒருத்தரும் லைனுல வரல.

எங்க போத்திமார் காலத்துலயும் இப்புடி ஒரு பொசல ஒருத்தரும் பாத்ததில்ல. பேயாச் சுத்துன காத்துல, போட்டு ஒசர போறதும் அப்புடியே பொத்துன்னு கீழ சாடுறதுமா இருக்கி. கை பதறி கால் பதறி நிக்கிதோம். திடீர்னு அணியம் தூக்குதன்னு பொறம பாத்தா, பொறம பூரா தண்ணிக்கிள போவுது. கையில கெடைச்ச தண்ணி பாட்டயள புடிச்சிகிட்டு, பத்து பேரும் அணியத்துல ஏறி இருந்தோம். டமார்னு ஒரு சத்தம், போட்டு நடுவுல அப்புடியே நீட்டுவாக்குல ரண்டாப் பொழந்தி, தண்ணிக்கிள போக ஆரம்பிச்சிற்று. இருட்டுல கெடச்ச பிளாஸ்டிக் பாட்டவள புடிச்சிகிட்டு தண்ணிக்கிள எல்லாரும் சாடியாச்சி. ஆனா எங்கோட்டு நீய… வெரளம் போன போக்குல நீய ஆரம்பிச்சோம். ஒருத்தனுக்க மூஞ்ச ஒருத்தம் பாக்க முடியில. மூச்சி வுட வாயத் தொறந்தா கடத் தண்ணி வாய்க்குள போவுது. இருந்தாலும் உயிரப் புடுச்சிண்டு நீயுதோம். பொண்டாட்டி புள்ளய மொகத்தப் பாத்தாவது எங்க உயிரக் காப்பாத்துன்னு நாங்க வேண்டாத தெய்வமில்ல. மாதாவ நெனச்சிண்டே நீஞ்சோம்.

விடிஞ்சி பாத்தா, பத்துல நாலு பேரக் காணல. வயிறு பவுச்சிது, தண்ணித் தாகமும் எடுக்குது, கைகால்லாம் தளந்து போவு. ஆறு பேரும் சேந்து நீயிதோம்… அய்யோ இந்தப் பாத வழியே வார கப்பல்வ எங்களப் பாத்துறாதான்னு எழும்பி, எழும்பிச் சாடுதோம். கூட வந்த நாலு பேரும் பொறம வாராங்களான்னு பெலம் புடிச்சி திரும்பிப் பாத்தா, ஒரு சின்ன பையம் கடத் தண்ணிய குடிச்சி எங் கண்ணு முன்னாலே தாந்து போறாம். எட்டிப் புடிச்ச முடியல. கடைசியா ரண்டு பேர் நீயிதோம். ராப்பூரா நீயிதோம். பொழுதுவிடிய, பக்கத்துல பளிச் பளிச்சின்னு வெட்டுதேன்னு பாத்தா, ஏதோ ஒரு போட்டுலருந்து ஒடைஞ்ச பலவத் துண்டு. ரண்டுயரும் அதுல ஏறிப் படுத்தோம், அய்யோ இந்தப் பலவ பத்து பேர தாங்குமேன்னு மனசு பாடாப் படுத்திச்சி. 2 ம் தேதி காலையில் 11 மணி இருக்கும், வானத்துல ஒரு ஹெலிகாப்டர் தெரியிது. ஆனா எங்க ஒடம்புல ஒணர் இல்ல. மேலருந்து கயிறு போட்டு இறங்குனவங்க எங்க ரண்டியரையும் தூக்குனாங்க. அப்ப நாங்க எங்ககூட இன்னும் நாலுபேரு உண்டுன்னு சொல்லுதோம். அதுக்கு அவங்க நாங்க தேடுறோம், நீங்க மொதல்ல ஆஸ்பத்திரிக்கி போங்கயின்னு சொன்னாங்க’’ சொல்லி முடித்ததும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் அந்தோனிதாஸ்.

மிச்சமிருக்கும் நம்பிக்கை

வயதான கடலோடிகளைக் கேட்டால், இந்தப் புயலும் அதன் தாக்கமும் கடலோரத்தில் தங்களது தாத்தாமார் காலத்திலும் கேள்விப்படாதது என்கிறார்கள். “படிச்சிற்று லீவுக்கு வந்த சின்னப் பயல்வளும் கடலுக்கு போயிறுக்கான்வ மக்களே. சரி, புயல நாம தடுக்க முடியாது, ஆனா ரட்சிக்க முடியுமே! சேதாரத்தக் குறைக்க முடியுமே! கடல்ல இன்னும் உசுரக் காப்பாத்த வாய்ப்பு உண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தாமதமான இந்தச் சூழலிலும் உயிர்கள் இன்னும் காப்பாற்றப்படலாம் என்று மீனவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நாளும் இயற்கை என்னும் மாபெரும் சக்தியை எதிர்த்துப் போராடும் இந்த மக்களின் உணர்வை அரச அதிகாரங்கள் மதிக்கத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.

ஒக்கி புயலால் தாக்குதலுக்குள்ளான பகுதி, பூமத்திய ரேகையிலிருந்து வடக்காய் பத்து டிகிரிக்குள் அமைந்த திறந்த கடல் பகுதி. அங்கு, புயல் காலங்களில் அலைகளின் சுழற்சியும், காற்றின் வேகமும் கணிக்க முடியாததாக இருக்கும். பூமத்திய ரேகையின் தென் பகுதியை விட வட பகுதியில்தான் அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டுக் கடற்கரையில், கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான தென்மேற்குப் பகுதியில்தான் ஆழ்கடல் மீன்பிடிப்பு, பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. ஆள் உயர சீலாவும், சுறாவும், வேளாவும், சூரையும் தூண்டில் கயிறு மூலம் இந்தப் பகுதியில் நமது மீனவர்கள் பிடிக்கிறார்கள். இவர்கள் செய்யும் மற்றொரு தொழில் கடல் வளத்தை எந்த வகையிலும் பாதிக்காத வழிவலைத் தொழில். ஆழ்கடலில், இயற்கையின் தொடர் சவால்களை எதிர்கொண்டுதான் இந்த தொழில் நடக்கிறது. நாட்டின் கடல் மீன்கள் ஏற்றுமதியில் பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டும் வியாபாரத்தில் இந்தப் பகுதி ஆழ்கடல் மீனவர்களின் பங்கு அதிகம்.

புறக்கணித்தலின் அரசியல்

நவம்பர் 29, 30 தேதிகளில் காற்று வேகமாய் வீசும் என்ற அறிவிப்பு வந்தது, ஆனால் கடல் மைல்களுக்கும், கிலோ மீட்டருக்கும் வித்தியாசம் தெரியாதவர்களால் செய்யப்பட்ட அறிவிப்பு அது. எங்களால் புயலின் வேகத்தையும், திசையையும் கணிக்க முடியவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல. நிகழ்வுலகின் இதுபோன்ற யதார்த்தங்கள், வானிலை மையங்கள் உண்மையிலேயே அக்கறையோடு இயங்குகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. புயலுக்குப் பின்னான நாட்களில், தேடுங்கள், சகல சக்தியையும் பயன்படுத்தித் தேடுங்கள், விசைப் படகுகளைப் போல கரை ஒதுங்க வசதியில்லாத ஃபைபர் படகுகளில் சென்றவர்களைத் தேடுங்கள் என்ற கடற்கரையின் அவல ஓலம் அரச பீடங்களில் உறைக்கவே இல்லை. விளைவு, நாள்தோறும் கரை ஒதுங்கும் உயிரற்ற உடல்கள்.

ஒக்கி பேரிடர் என்பது, 2004-ல் வந்த சுனாமியைப் போல் ஒருநாள் துயரமல்ல. தென்கடலின் ஆழ்கடல் மீனவரைத் தாக்கி, அவர்கள், உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, எங்காவது தீவுப் பகுதிகளில் அடைந்திருக்கிறார்களா, அங்கும் அவர்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா, இல்லையா என்று கடலோரம் நின்றபடி பரிதவிக்கும் உறவுகளின் தொடரும் துயரம். தேடப்படுபவர்களில், வேலை வாய்ப்புத் தேடிக் கடலோரம் வந்து தூண்டல் மீன் பிடிக்கும் ஃபைபர் போட்டுகளில் மீன்பிடிக்கப் போன வட மாநிலத்தவர்களும் அடக்கம். கேட்க நாதியற்றுப் போன அவர்களின் நிலையும் பரிதாபத்திற்குரியதே.

‘புறக்கணித்தலின் அரசியலே’ இந்தப் பேரிடருக்கு பின்னான நாட்கள் உணர்த்தும் அரசியல் பாடம். மாபெரும் சக்தியான கடலன்னையிடம் மீனவர்கள் நாளும் போராடிப் பெறுவது மட்டுமல்ல வாழ்வு, மதமாச்சர்யங்களை, சாதியைக் கடந்து ஒன்றுபட்ட இனமாய், நிலப்பரப்பின் நிகழ்கால அரசியலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதும் இன்றைய வாழ்தலின் இன்றியமையாத தேவை என்பதைக் கடலோரத்தில் புரிய வைத்திருக்கிறது ஒக்கி புயல்.

– ஜோ டி குரூஸ், எழுத்தாளர்,

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *