வெல்லவே முடியாத, அசகாய சூரர் என்று நரேந்திர மோடியைப் பற்றிய பிம்பம் உருவாக்கப்பட்டது குஜராத் என்ற உலைக்களத்தில்தான்; அவருடைய அரசியல் பாணியை ஏற்றுக்கொண்ட குஜராத் வாக்காளர்கள் தொடர்ந்து அவருக்கு பொதுத் தேர்தல்கள்தோறும் வாக்களித்தார்கள். பிரதமராவதற்காக 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் அபரிமிதமாக ஆதரித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவருக்கு அளித்துவந்த அந்த அமோக ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 99 இடங்களை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள். என்றாலும் ஆதரவு தொடர்கிறது!
மோடியின் பலம், அவருடைய படைக்கலத்தின் பலவீனத்தை மட்டுமல்ல, ‘குஜராத் மாதிரி’ என்று நாட்டையே நம்பவைத்த அவருடைய சாதனையும் எப்படிப்பட்டது என்பதை மக்கள் காட்டிவிட்டார்கள். அதேசமயம், நாட்டின் பிற பகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்கூட இதன் மூலம் அரசியல் செய்தியொன்றைச் சொல்லியிருக்கிறார்கள்; காங்கிரஸ் அதை எப்படிப் புரிந்துகொண்டு செயல்படப்போகிறது என்று பார்க்க வேண்டும்.
குஜராத் தேர்தல் முடிவு வெளியானதும் முதலில் கருத்து தெரிவித்தது மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி. “2019-க்கு முன்னதாகவே பூனைக்கு மணியைக் கட்டிவிட்டது குஜராத்” என்று கூறியிருக்கிறார். “2019-ல் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் காங்கிரஸ் அரவணைத்துச் செல்ல வேண்டும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசத்திலிருந்து கோரியிருக்கிறார். “நாட்டின் பன்மைத்துவத்தைக் காக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும், இதுவே குஜராத் சொல்லும் செய்தி” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மீண்டெழும் காங்கிரஸ்
1985-க்குப் பிறகு தன்னால் ஏன் இப்படிச் சிறப்பாகச் செயல்பட முடிந்தது என்பதையும், அதே சமயம் ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்ற முடியாமல் போனது ஏன் என்பதையும் காங்கிரஸ் கட்சி ஆராய வேண்டும். தன்னால் மக்களைப் பொதுக்கூட்டங்களுக்கு ஈர்க்க முடியும், அந்தக் கூட்டத்தை அப்படியே வாக்குகளாக மாற்றவும் முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா உட்பட பல தலைவர்கள் கட்சியைவிட்டு விலகியிருந்த நேரத்தில், தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டி, மாநில காங்கிரஸ் கட்சி அமைப்பைச் சீர்படுத்தி கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஒருங்கிணைத்துவிட்டார் குஜராத் மாநிலப் பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான அசோக் கெலாட்.
மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி எதிர்ப்பு வாக்குகளைத் திரட்டவும், காங்கிரஸ் புத்துயிர் பெறவும், தேர்தலில் கணிசமான வெற்றி பெறவும் பெரிதும் பாடுபட்டவர்கள் மூன்று இளைஞர்கள். அண்ணா ஹசாரே தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கம் காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தியை விசிறிவிட, அதன் பலன் முழுவதையும் பாஜக 2014-ல் அறுவடைசெய்தது.
அதேபோல மூன்று இயக்கங்களின் போராட்டம் காங்கிரஸுக்குப் பயன்பட்டிருக்கிறது. ‘படிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ தலைவர் ஹர்திக் படேல், இதர பிற்படுத்Sதப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், பட்டியல் இனத்தவருக்கான ஓஎஸ்எஸ் அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாக்கோர், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் தங்களுடைய போராட்டங்களாலும் தங்களுடைய அமைப்புகளாலும் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். நாடு முழுவதும் மக்களுக்குள்ள அதிருப்தியை, குறைகளைக் கண்டு அவற்றுக்காகப் போராடுவதன் மூலம் ஆதரவைத் திரட்டிவிடலாம் என்பதை குஜராத் கிளர்ச்சிகள் உணர்த்துகின்றன.
இம்மூன்று சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்களின் உயர் கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக மூவரும் பாடுபட்டது இச்சமூக இளைஞர்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அல்பேஷ் தாக்கோர் காங்கிரஸ் சார்பிலும் மேவானி சுயேச்சையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். குஜராத்தின் நான்கு பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, சக்திசிங் கோஹில், துஷார் சவுத்ரி, சித்தார்த் படேல் ஆகியோர், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்த இந்த நேரத்திலும் தோற்றிருக்கின்றனர் என்பதால், இம்மூன்று இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.
ஆத்ம பரிசோதனைக்கான நேரம்
பிஹார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வென்ற கட்சிகளுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்த நிலையில், குஜராத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினாலும் ஏன் அப்படிப்பட்ட ஆதரவைத் தங்களுக்கு அளிக்கவில்லை என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும் காங்கிரஸ். அப்படியானால் ஆட்சியை குஜராத் காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைக்க மக்கள் முழுதாகத் தயாராக இல்லையா? காங்கிரஸ் வென்றால் இவர்தான் முதலமைச்சர் என்று யாரையும் சொல்ல முடியாமல் போனதேன்? கிராமப்புறங்களில் மிக மோசமாகத் தோற்ற பாஜக, நகர்ப்புறங்களில் மட்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்றது எப்படி? பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் வணிகர்கள், நடுத்தர வகுப்பினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தும் வென்றது எப்படி? ஜவுளி உற்பத்தியாளர்களும் வைரம் வெட்டும் தொழில் செய்பவர்களும் ஜிஎஸ்டியைக் கண்டித்து தங்களுடைய உற்பத்திப் பிரிவுகளை இரு வாரங்கள் மூடிவைத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அகமதாபாத், வடோதரா, ராஜ்கோட், சூரத் நகரங்களில் பாஜகவுக்கு அதிக இடங்கள் எப்படிக் கிடைத்தன?
காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் கற்றுக்கொள்ள இதில் நிறையப் பாடங்கள் உள்ளன. வேளாண் துறையில் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் மக்கள் தாங்கொணாதத் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகநலத் துறைகளை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அறவே தவறிவிட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசும் அதே வேளையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தங்களிடம் உள்ள திட்டம் என்ன என்பதைத் தெளிவாகவும் விரிவாகவும் தயாரித்து மக்களிடம் பேச வேண்டும். அவர்களுடைய கவனம் நகர்ப்புறங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் மீதும் இருக்க வேண்டும்!
– ஸ்மிதா குப்தா,
தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்