கட்டுரை, சிந்தனைக் களம், சுற்றுப்புறம், தமிழ்நாடு

சென்னையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம்?


இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக உருமாற்றப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சாதாரண நாட்களில் இத்தகு விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இக்கட்டான காலங்களில் சென்னையை மேலும் ஆழ்ந்த சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். போகட்டும், சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம்.

ஜனநெருக்கடி மிக்க நகரங்கள் கரோனாவுக்கு மிக அதிகமான விலையைக் கொடுக்கின்றன. ஜனநெரிசல் மிக்க சென்னை நீர்ப் பிரச்சினையையும் எதிர்கொள்வது என்பது இங்கு நாம் எதிர்கொள்ளும் கூடுதல் சிக்கல். கரோனா போன்ற ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில் சுத்தத்தில் மக்கள் காட்டும் அக்கறை இயல்பாக நகரத்தின் தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகமாக்கும். கரோனாவைத் தவிர்க்கும் செயல்முறைகளில் முக்கியமானதாக அரசால் வலியுறுத்தப்படும் அடிக்கடி சோப்பு போட்டுக் கை கழுவும் முறையை எடுத்துக்கொள்வோம். அரசு சொல்வதுபோல, ஒரு நாளைக்கு 15 – 20 தடவை ஒருவர் கை கழுவ வேண்டும் என்றால், ஒருவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் கூடுதலாகத் தேவைப்படலாம்; தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை இது 164 கோடி லிட்டர் கூடுதலாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இன்னும் கூடுதலான குளியல் முதல் கூடுதலான வீட்டைச் சுத்தப்படுத்தல் வரையிலான ஏனைய காரியங்கள் தண்ணீர்த் தேவையை மேலும் பெருக்கும். கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் வாழும் நகரமான சென்னைக்கு இது பெரும் சவால்.

சென்னையின் வழமையான நீர்த் தேவை மாதத்துக்கு ஒரு டிஎம்சி. நகரின் நீராதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு முக்கிய ஏரிகளின் மொத்த நீர் அளவு ஏறக்குறைய 6 டிஎம்சியாக இருப்பதால், பிரச்சினை இல்லை என்றே அரசு அதிகாரிகள் நினைக்கின்றனர். இந்தக் கணக்கைப் பரவிக்கொண்டிருக்கும் கிருமி உண்டாக்கும் அச்சமும், அதிகரிக்கும் நீர்த் தேவையும் உடைத்துவிடும். மேலதிகம் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானால், தண்ணீரை நகருக்குக் கொண்டுவந்து சேர்க்கும் பணியும் சவாலாகிவிடும். தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க நாட்கள் ஆகும் என்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ அவ்வளவுக்கு சென்னைக்கு நல்லது. நகரங்களின் சுகாதாரம் என்பது பற்றாக்குறை இல்லாத நீர் விநியோகத்தில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *