சிந்தனைக் களம், தமிழ்நாடு, பொருளாதாரம், விமர்சனம்

மாநிலங்களுக்கான நிதியில் பாகுபாடு கூடாது

கரோனா தொற்று பெரும் சவாலாக மாறி நாட்டின் முன் நிற்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாகவும் உடனடியாகவும் மத்திய அரசு வழங்குவது முக்கியம். ஆனால், கரோனாவை எதிர்கொள்வதற்கென்று மாநிலங்களுக்காக மத்திய அரசு தொடக்கமாக விடுவித்துள்ள நிதியின் அளவும், அதில் காட்டப்பட்டுள்ள பாரபட்சங்களும் அதிர்ச்சி அளிக்கின்றன.

மத்திய அரசு தற்போது விடுவித்துள்ள ரூ.17,287 கோடியில் ரூ.11,092 கோடி மாநிலப் பேரிடர் சமாளிப்பு நிதியிலிருந்தும், ரூ.6,195 கோடி நிதிக் குழு பரிந்துரையின்படி வருவாய்ப் பற்றாக்குறை மானியமாகவும் அளிக்கப்பட்டுள்ளன. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் 14 மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு எந்த வகையின் கீழ் அமைந்திருந்தாலும் நோய்ப் பரவலுக்கு ஆளாகியுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

பேரிடர் சமாளிப்பு நிதியின் கீழ் மஹாராஷ்டிரத்துக்கு ரூ.1,611 கோடி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமும், தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுமான கேரளாவுக்கு ரூ.157 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. அதேபோல, மஹாராஷ்டிரத்துக்கு அடுத்து அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் தமிழ்நாட்டுக்கு ரூ.510 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டுடன் பாதியளவிலான பாதிப்பையே கொண்டிருக்கும் உத்தர பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, அதைக் காட்டிலும் மிகக் குறைவான பாதிப்பைக் கொண்டிருக்கும் மத்திய பிரதேசத்துக்கு ரூ.910 கோடி, பிஹாருக்கு ரூ.708 கோடி எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. வட இந்திய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற விமர்சனத்துக்கே இது வழிவகுக்கும்; இது தவிர்க்கப்பட வேண்டும்.

கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாட்டுக்கு ரூ.9,000 கோடி நிதியுதவி செய்ய வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி, கூடவே மாநிலத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் விரைந்து அளிக்கும்படி கேட்டிருந்தார். பஞ்சாப், வங்க அரசுகளும்கூட இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது நிதிப் பற்றாக்குறைக்கான உச்ச வரம்பைத் தளர்த்தும்படியும் கோரியிருக்கின்றன. இவையெல்லாமும் உடனடியாகச் செவிசாய்க்கப்பட வேண்டியவை. இந்த ஒதுக்கீடு பல லட்சம் உயிர்களோடும், பல கோடி வயிறுகளோடும் சம்பந்தப்பட்டது. பாரபட்சமின்றி முன்கூட்டி வழங்கப்படும் நிதியே முன்கூட்டிய நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *