சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம், விமர்சனம்

மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு!- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி

ஒக்கி புயலின் பாதிப்புகள் குமரியை அடித்து நொறுக்கியிருக்கின்றன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்குச் சென்ற ஏராளமான மீனவர்கள் காணாமல்போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குமரியை கேரளத்துடன் இணைக்க வேண்டும் என்கிற அளவுக்குத் தமிழக அரசு மீதான அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, குமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டவரும் சமூகச் செயல்பாட்டாளருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் இதுகுறித்துப் பேசினேன். அவருடனான பேட்டி:

உங்களுக்கு 90 வயதாகப்போகிறது. சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகளில் குமரியின் இந்தப் பாதிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2004-ல் சுனாமி! குமரியில் மட்டும் 800 பேரை வாரிச் சுருட்டிக்கொண்ட பேரழிவு அது. அப்போது கடலோரத்தில் வசித்த மக்கள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இப்போது ஒக்கி புயல் ஒட்டுமொத்த குமரி மாவட்டத்தையும் உலுக்கிவிட்டது. 1992-ல் குமரியில் கனமழை பெய்தபோது கடும் சேதம் ஏற்பட்டது. 10 பேர் உயிரிழந்தார்கள். ஆனால், ஒக்கி புயல் போல் இதுவரை ஒரு புயலை நான் பார்த்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேல், கடலுக் குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரைக்குத் திரும்பாதது பதைபதைக்க வைக்கிறது.

இத்தனை பெரிய சேதத்துக்கு என்ன காரணம்?

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

சுனாமி வந்தபோது அதுகுறித்த முன் அனுபவம் நமக்கில்லை. விழிப்புணர்வோ முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோ இல்லை. ஆனால், சுனாமிக்கு 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் கடற்கரை அதே நிலையில்தான் இருக்கிறது என்பதை இந்த ஒக்கி புயல் உணர்த்துகிறது. புயல் பற்றிய முன்னெச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் வெளியிடவில்லை. இதனாலேயே இவ்வளவு பெரிய சேதம் விளைந்தது. எந்தத் தகவலும் இல்லாமல் திடீரென்று புயலை எதிர்கொண்ட மக்கள் எத்தனை இன்னல்களை அனுபவித்திருப்பார்கள். கடலில் கையறு நிலையில் மீனவர்களைத் தவிக்கவிட்டது கொடுமையல்லவா? இது இயற்கை யின் பிழை அல்ல. மன்னிக்க முடியாத அரச தவறு!

தமிழக அரசின் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கேரள முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். நேரில் சென்று பார்க்கிறார். மக்கள் மத்தியில் நிற்கிறார். இங்கே தமிழ்நாட்டிலோ ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத் தில் நின்றுகொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். துணை முதல்வரும் அமைச்சர்களும் வந்து மட்டும் என்ன செய்தார்கள்? பன்னீர்செல்வத்தை வரவேற்க ஆளுங்கட்சியினர் நடத்திய காரோட்டம் ‘கார் ரேஸ்’ போல இருந்தது. மக்களை மக்களாக அல்லாமல் ஓட்டுகளாக, உருப்படிகளாக அல்லவா பார்க்கிறது அரசு!

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஏராளமான மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை. கரையொதுங்கும் மீனவர்களின் உடல்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது. ஆனால், எத்தனை மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள் எனும் புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. நம்முடைய கடற்படை, விமானப்படை எல்லாம் தங்களுடைய சாதுரியத்தை இப்போதல்லவா காட்ட வேண்டும்? ஆனால், மீனவர்களின் வாயை அடைக்கத்தான் வேலை நடக்கிறது. நம் வீட்டில் ஒருவர் காணாமல்போனால் எப்படித் துடிப்போமோ அப்படித் துடித்துச் செயலாற்ற வேண்டும் அரசு.

இந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களிலேயே மோசமானது என்று

எதைக் கருதுகிறீர்கள்?

60 ஆண்டுகளுக்கு முன்னர் ‘குமரியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்று ரத்தம் சிந்திப் போராடிய மண் இது. இன்றைக்கு ‘மீண்டும் கேரளத்துடன் சேர வேண்டும்’ என்று அதே மக்கள் பேசத் தொடங்குகிறார்கள் என்றால், குமரியைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரிப் போராடிய என்னைப் போன்றவர்களுக்கு இதைவிடத் துயரம் வேறு இருக்குமா? ஒரு மொழி பேசும் மக்களே, வேறு மாநிலத்துடன் சேர வேண்டும் என்று சொல்கிறார் கள் என்றால், தமிழக அரசுக்கு இதைவிட ஒரு அவமானம் வேண்டுமா? எந்த வேலை யைக் காட்டிலும் தமிழக ஆட்சியாளர்கள் குமரி மீது கவனம் செலுத்த வேண்டும்!

– என்.சுவாமிநாதன்,

– தி இந்து  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *