சிந்தனைக் களம், சுற்றுப்புறம்

மாசுக்களைக் குறைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் இன்றைய திருநாளை

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நமது இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்ட பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைவில் முழுவதுமாக விடுபடுவோம் என்ற நம்பிக்கையை இந்தத் தீபாவளித் திருநாள் வழங்கட்டும். புதிய உற்சாகத்தோடும் புதிய தெம்போடும் இனி வரும் நாட்களை எதிர்கொள்வோம்.

தீபாவளிப் பண்டிகையைப் பட்டாசு வெடிச் சத்தங்கள் இல்லாமல் கற்பனை செய்ய இயலாது. எனினும், காற்றுவெளியில் கலக்கும் கரிமம் உள்ளிட்ட மாசுக்களின் அளவை உடனடியாகக் கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால், உலகின் வெப்பநிலை உயர்ந்து பெரும் இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடல் நீர்மட்டம் உயர்ந்து, கரையோர நகரங்கள் பாதிப்படையக் கூடும் என்று சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் விளைவுகள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்நாட்களில், அந்த எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொண்டதாக நமது கொண்டாட்டங்கள் அமையட்டும்.

தீபாவளிக் கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிப்பது மட்டுமின்றி, நமது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும் நினைவுக்குக் கொண்டுவருபவை. பட்டாசுகள் வெடிப்பது குறித்த கட்டுப்பாடுகள் நமது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன என்று வருத்தப்படுவதைக் காட்டிலும் நாம் வாழும் உலகைச் சுற்றுச்சூழல் மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்க விரும்புகின்றன என்பதை முதலில் உணர வேண்டும். இனி வரும் ஆண்டுகளில், பசுமைப் பட்டாசுகளின் உற்பத்தியும் விநியோகமும் படிப்படியாக அதிகரித்துவிடும். அப்போது, பட்டாசுகளின் காரணமாக ஏற்படும் காற்று மாசுபாடு குறையக்கூடும். அதுவரையில் ஒலி, காற்று மாசுபாடுகளைக் குறித்த கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமைப் பட்டாசுகளிலும்கூட வெளியேறும் நைட்ரஜன், கந்தக வாயுக்களின் அளவு குறைவாக இருக்குமே தவிர, கரிம வாயுக்களின் வெளியேற்றம் முழுமையாகக் குறைந்துவிடாது.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அடிக்கடி கிருமிநாசினியைப் பயன்படுத்தி, கைகளைச் சுத்தம்செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுவருகிறது. தீபாவளி நேரத்தில் கிருமிநாசினியைப் பயன்படுத்துவது குறித்தும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. கிருமிநாசினியில் அடங்கியுள்ள ஆல்கஹால், எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. எனவே, கைகளில் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்துகொண்டவர்கள் உடனடியாகப் பட்டாசு கொளுத்தக் கூடாது. அது விபத்துகளுக்குக் காரணமாகக் கூடும் என்ற எச்சரிக்கையையும் மனதில் கொள்ள வேண்டும்.

நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் பார்வையாளர்கள் முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளித் திருநாளைப் புதிய திரைப்படங்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள ரசிகர்கள், கடந்த ஆண்டு அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, திரையரங்குகள் முழுவதுமாக நிரம்பும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் முகக்கவசத்தை அணிய வேண்டியது மிகவும் கட்டாயமானது. தனிமனித இடைவெளிக்கு வாய்ப்பில்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் கூடாது. பெருந்தொற்றுப் பரவலும் அதற்கான வாய்ப்புகளும் முற்றிலும் நீங்கிவிடாத நிலையில்தான் இந்தத் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்பது எப்போதும் நம் நினைவில் இருக்கட்டும். வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *