nia bill india

nia bill indiaசட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆபத்தானது. ஒரு தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்தத் திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.

தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது மிக ஆபத்தானது. பயங்கரவாதி என்ற முத்திரையால் தனிநபருக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள், ஒரு அமைப்புக்கு ஏற்படுவதைவிட அதிகம். மேலும், கைதுக்கும் சிறைக்காவலுக்கும் அந்தத் தனிநபர்கள் உள்ளாக்கப்படுவார்கள்; நீதிமன்றத்திலிருந்து ஜாமீன் பெற்ற பிறகும் அவர்களின் பயணங்களும் செயல்பாடுகளும் முடக்கப்படும்; கூடவே, பயங்கரவாதி என்ற முத்திரை வேறு. ஆகவே, குழுக்கள், அமைப்புகளைவிட தனிநபர்கள் இந்தப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான நடைமுறைகள் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது.

தவறான முத்திரை குத்துதல் என்பது ஒரு மனிதரின் புகழ், பணிகள், வாழ்வாதாரம் அனைத்துக்கும் சரிசெய்ய முடியாத அளவில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிடும். சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அரசு பயங்கரவாதிகளையும் அவர்களின் அனுதாபிகளையும் சும்மா விடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்டுகள்’ என்ற குறிப்பையும் தனது பேச்சினிடையே இழையோட விட்டார். இதெல்லாமே இந்தச் சட்டத் திருத்தம் எதிர்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைத் தெரிவிக்கின்றன.

கூட்டாட்சிக்கு எதிரான அம்சங்களை இந்த மசோதோ கொண்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வாதிட்டிருக்கின்றனர். பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுவோரின் சொத்துகளைப் பறிமுதல்செய்யும் உரிமையைத் தேசிய விசாரணை முகமைக்குக் கொடுத்திருப்பது மாநில அரசின் உரிமைகள் மீதான மற்றுமொரு தாக்குதல். இதுவரை மாநிலக் காவல் துறை தலைமைதான் அதற்கு அனுமதி வழங்கிவந்தது. மேலும், இன்னொரு பிரிவின்படி என்ஐஏ ஆய்வாளர்களே பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பார்கள். இதுவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரோ காவல் உதவி ஆணையரோ விசாரித்துவந்தார்கள். அதெல்லாம் இனி இருக்காது.

2004-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களே பயங்கரவாதச் செயல்களைத் தண்டிக்கவும், அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் குழுக்களை ‘பயங்கரவாத அமைப்பு’களாக அறிவிக்கவும் போதுமானவையாக இருந்தன. நாடாளுமன்றம் அதில் 2008-லும் 2013-லும் சில திருத்தங்கள் செய்து பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட ஒரு சட்டரீதியான சட்டகத்தை வலுப்படுத்தியது. பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதில் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பதிலோ, பயங்கரவாதச் செயல்கள் பொறுத்துக் கொள்ளப்படக் கூடாது என்பதிலோ துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், குடிமக்கள் மீது சட்டத்தை ஏவும்போது அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள கடப்பாட்டை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *