உலகின் நுரையீரலை அழித்துவிட வேண்டாம்!

பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேஸான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை 24 வரை 4,200 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவருகிறது.

அமேஸான் நதிப் படுகையானது பல நாடுகளில் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் விரிந்து கிடக்கிறது. அடைபட்டிருக்கும் ஏராளமான கரிமத்துக்கு இப்பரப்பு தஞ்சம் கொடுத்திருக்கிறது. பருவமழைகளை வரைமுறைப்படுத்துவதில் இந்தக் காடுகள் மிக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இந்த மழைக்காடுகளில் உயிர்ப்பன்மை செழித்துக் காணப்படுகிறது. கூடவே, 400 வகையான பூர்வகுடிகளும் அங்கே வாழ்கிறார்கள். லாப நோக்கத்துக்காக அந்தக் காடு அழிக்கப்படுவதை அவர்கள்தான் இதுவரை தடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் காடுகளைப் பண்ணை நிலங்களாக, மேய்ச்சல் நிலங்களாக, தங்கச் சுரங்கங்களாக மாற்றவும், அங்கே பெரிய அளவில் சாலைகள் அமைக்கவும் பெரு முயற்சிகள் நடந்துவந்தாலும் அவற்றையெல்லாம் மீறி அமேஸான் காட்டின் பெரும்பகுதியானது தப்பிப் பிழைத்திருக்கிறது.

அமேஸான் காடுகளில் 50 லட்சம் சதுர கிமீ பரப்பை பிரேசில் கொண்டிருக்கிறது. இந்தக் காடு இருக்கும் பரப்பை நியாயமான அளவில் சுரண்டிக்கொள்ளலாம் என்ற ரீதியில் போல்சோனரோ பேசியிருக்கிறார். வனச் சட்ட விதிமுறைகள் மாற்றப்படவில்லை என்றாலும் அவருடைய பேச்சு சட்டத்துக்குப் புறம்பாகக் காடுகளைப் பயன்படுத்துவோருக்குத் துணிவைக் கூட்டியிருக்கிறது. ஆயுதம் ஏந்திய தங்க வேட்டைக் கும்பல்கள் சமீபத்தில் பழங்குடியினர் பிரதேசங்களை ஊடுருவின. அப்படிப்பட்ட ஊடுருவலில் அமாபா என்ற இடத்தில் ஒரு பழங்குடித் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார். செயற்கைக்கோள் தரவுகளையும் வன்முறை பற்றிய செய்திகளையும் பிரேசில் அதிபர் மறுத்திருப்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல.

அமேஸான் காடுகளை இடையூறு செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதால் தனக்கு ஏற்படுவதாக பிரேசில் நினைக்கும் பொருளாதார இழப்புகளைவிட, அது சர்வதேசச் சமூகத்திடமிருந்து பெறும் லாபங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்த வருடாந்திர மாநாடு ஒன்றை நடத்த மறுத்திருப்பதன் மூலம் காடுகளைப் பாதுகாப்பதற்குக் கிடைத்திருக்கக்கூடிய பெரிய அளவிலான நிதியுதவிகளை பிரேசில் இழந்திருக்கிறது. எனினும், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து நல்லவேளையாக பிரேசில் வெளியேறவில்லை. அப்படிச் செய்திருந்தால் பிரேசிலுக்குரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

உலகின் நுரையீரலாக விளங்கும் அமேஸான் காடுகளைக் காப்பதற்குத் தற்போது உலக அளவில் பெரும் உத்வேகம் ஒன்று காணப்படுகிறது. நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆதரவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் அமேஸான் நிதியத்தை பிரேசில் வரவேற்க வேண்டுமேயொழிய, அதை மூடிவிடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. மழைக்காடுகள் எல்லாம் அகில உலகத்துக்கும் பொதுவான பொக்கிஷங்கள் என்பதையும், பழங்குடியினருக்கும் அவர்களுடைய நிலத்துக்கும் இடையிலான உரிமை பிரிக்க முடியாதது என்பதையும் பிரேசில் அதிபர் உணர வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP