இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ அல்ல; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான்
‘நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இங்கே வேண்டுமென்றே சிலர் காவிரியைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் இல்லை.’ இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நான் சந்தித்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்து இது. ‘இங்குள்ள சாதாரண மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களும் இதையேதான் சொல்வார்கள்’ என்றார் அவர். இருக்கலாம். ஆனால், பெங்களூரு இவரைப் போன்ற சாதாரண மக்களின் நகரம் மட்டுமே அல்ல என்பதால், காவிரி மீண்டும் ஒரு பெரிய சிக்கலாக வெடித்திருக்கிறது.
அவர் சொன்னது உண்மைதான். பெங்களூருவைக் கவ்விப் பிடித்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் நிச்சயமாகக் காவிரி அல்ல. அந்நகரின் பிரதான ஐந்து பிரச்சினைகள் என்று பட்டியலிட்டால், அதில் காவிரி நிச்சயம் இருக்காது. இருந்தும் உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயமாகவும் கர்நாடகத்தின் அதிமுக்கிய பிரச்சினையாகவும் காவிரி அவ்வப்போது முன்னிறுத்தப்படுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். ஆதாயமளிக்கும் ஓர் அரசியல் கருவியாக, வாக்குகள் பெற்றுத்தரும் ஒரு துருப்புச் சீட்டாக அது இன்னமும் அங்கே இருக்கிறது. நிஜத்தில், பெங்களூருவை உள்ளிருந்தே அரித்து வரும், அந்நகரைச் சிறிது சிறிதாகக் கொன்று தின்றுவரும் தலையாய பிரச்சினை வேறு. அது காவிரியைவிட பல மடங்கு பெரியது. ஒரு வகையில், அது இந்தியாவின் பிரச்சினையாகவும் சர்வதேசப் பிரச்சினையாகவும்கூட இருக்கிறது.
துரித நகரமயமாக்கல்
தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பெங்களூருவுக்கு நான் தொடர்ச்சியாகச் சென்று வந்துகொண்டிருக்கிறேன். பெங்களூருவுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதி, எலஹன்கா. இங்குள்ள ஹெரிடேஜ் எஸ்டேட் என்னும் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுப்பில், சுமார் 1,000 குடும்பங்கள் வசித்துவருகின்றன. நீச்சல் குளம், உடற்பயிற்சி அரங்கம், நூலகம், பலசரக்குக் கடை, பூங்கா, விளையாட்டு மைதானம், வழிபாட்டு இடம், விழாக்கூடம் என்று அனைத்தையும் பெற்று, கிட்டத்தட்ட தன்னிறைவடைந்த ஒரு தனியுலகம் போல் பளிச்சென்று அந்த எஸ்டேட் கம்பீரமாக அமைந்திருக்கும். பெங்களூருவின் மற்ற பகுதிகளில் எல்லாம் வெயிலடித்தாலும், இங்கு மட்டும் மிதமான குளிர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த அளவுக்குக் காடு போல் மரங்களும் செடிகளும் குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும். READ MORE…