காஷ்மீரில் கலவரத் தடுப்புப் பணியின்போது ‘பெல்லட்’ வகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்லி படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருப்பது ஒரு பெரும் பதற்றச் சூழலிடையே வெளியாகியிருக்கும் சின்ன ஆறுதல் செய்தி. காஷ்மீர் கலவரங்கள் இம்முறை கிட்டத்தட்ட 50 உயிர்களைப் பலி வாங்கவும் 1,000-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தவும் முக்கியமாகப் பலர் பார்வையைப் பறிக்கவும் காரணமாக இருந்தவை ‘பெல்லட்’ வகைக் குண்டுகள்.
புர்ஹான்வானி கொல்லப்பட்ட நாள் முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு கொந்தளிப்பில் இருக்கிறது. புர்ஹான்வானி இறந்த நாளிலிருந்து காஷ்மீர் நாளேடுகளில் அரைப் பக்கத்துக்கு அவருடைய புகைப் படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் வரத் தொடங்கின. அத்துடன் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் ஏற்பாடு செய்திருந்த திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை, ‘இப்போதுள்ள சூழல் காரண’மாகத் தள்ளிவைத்திருக்கிறோம் என்றும் விளம்பரமாகத் தெரிவித்தனர். அடுத்தடுத்து, பாதுகாப்புப் படையினருடன் கிளர்ச்சியாளர்கள் மோதலும், அரசு அலுவலகங்கள் – சொத்துகள் மீதான கல்வீச்சும் நடந்தன. கலவரங்களைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததுடன் செல்பேசிகள், கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளையும் அரசு முடக்கியது. அத்துடன் தினசரிப் பத்திரிகைகள் விநியோகமும் நின்றது.
மக்களுடைய கோபத்தால் மூண்ட எழுச்சியைக் கட்டுப்படுத்த வழி தெரியாத அரசும் காவல் துறையும் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்தன. நிலைமை மேம்பட்ட பிறகு, இந்தத் தடைகளை நீக்குவது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறிய அரசு வட்டாரங்கள், கண்டனங்கள் அதிகரித்தவுடன் ‘தடை ஏதும் விதிக்கப்படவில்லையே?’ என்று மாற்றிப் பேசத் தொடங்கின. பிறகு, ‘அரசின் கட்டளைகள் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல், தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு’ என்று சமாளித்தன. செல்பேசி, இணையதளம் வழியாகத் தகவல்கள் பரிமாறப்பட்டு, பொதுஇடங்களில் மக்கள் திரள்வது இது முதல் முறையல்ல. அவ்வாறு மக்கள் கூடுவதை காஷ்மீரில் அரசு தடை செய்ய நடவடிக்கைகள் எடுப்பதும் இது முதல் முறையல்ல. ஆனால், அதிகாரிகள் நினைப்பதுபோலத் தடைகள் போராட்டங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு விதங்களில் தவறான செய்திகளும் வதந்திகளும் பரவி நிலைமையை மேலும் மோசமாக்குவதையே காஷ்மீரில் தொடர்ந்து நாம் பார்க்கிறோம்.
வீடுகளில் அத்தியாவசியப் பண்டங்களின் கையிருப்புகள் குறைந்து தட்டுப்பாடுகள் தலைதூக்க ஆரம்பிப்பது என்ன மாதிரியான சூழலை வீடுகளில் உருவாக்கும்? உணவு மட்டுமல்லாது அத்தியாவசிய மருந்துகளுக்கும்கூட மக்களை அல்லலுறச் செய்வது எப்படியான செய்திகளை வெளியே பரப்பும்? தொடர்ந்து, இப்படியான தவறுகளையே அரசு செய்துவந்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய காஷ்மீர் பயணத்தின்போது, பல்வேறு இயக்கத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயத்தை அவர் பிரதமர் மோடியிடமும் ஏனைய சகாக்களிடமும் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல வேண்டும். “காஷ்மீர் பிரச்சினையைச் சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் மூலமாக எல்லாம் தீர்த்துவிட முடியாது. அடிப்படையில் இது அரசியல் பிரச்சினை. அரசியல் தீர்வுகளை நாம் தேடும் வரை பள்ளத்தாக்கில் பிரச்சினைகள் ஓயாது!”