அரசியல், இந்தியா, தேர்தல், விமர்சனம்

இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), பாலுஸ் கடேகான் (மகாராஷ்டிரா), அம்பட்டி (மேகாலயா), தாரலி (உத்தராகண்ட்), மகேஷ்தாலா (மேற்குவங்கம்) ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இவற்றில் உ.பி. கைரானா மக்களவை தொகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு, பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரால் தொட முடியாத அளவு முன்னிலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளரை விட, தபசம் ஹசன் 36,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாததளம் வெற்றி

பீகார் மாநிலத்தின் ஜோகிஹாத் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் என். முனிரத்னா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 41162 ஆயிரம் வாக்குகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில், மார்ச் மாதத்திற்கு பிறகு பாஜக இரண்டாவது முறையாக உபியில் சவாலை சந்திக்கிறது. இந்த தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்ததால் வெற்றி கிடைத்துள்ளது. அதுபோலவே,

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா – கோண்டியா மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். அங்கு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்த்தன.

அதே சமயம் பால்கர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இங்கு மட்டும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

இதுபோலவே ஆளும் கட்சியாக உள்ள நாகலாந்து மற்றும் ஜார்கண்ட் இடைத்தேர்தலிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

tamil.thehindu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *