சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம்

பாலியல் கொடூரங்கள்: தமிழகத்தின் தலைகுனிவு

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையும், கடந்த ஆறேழு ஆண்டுகளாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி பாலியல் வக்கிரத்துக்குப் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதைபதைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. குற்றவாளிகளின் வலைப் பின்னல், அரசியல் கட்சித் தொடர்புகளின் பின்னணி என்று அடுத்தடுத்து வரும் செய்திகள் மக்களை மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. பெண்ணடிமைக்கு எதிரான போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடத்தி,  இன்றைக்குப் பெண் கல்வியிலும் பாலினச் சமத்துவத்திலும் தேசத்திற்கே முன்னோடியாக இருக்கிறோம் என்று ஒருபுறம் நாம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் நிலையில்தான் மறுபுறம் இப்படியான மாபெரும் சறுக்கல்களையும் எதிர்கொள்கிறோம். பெண்கள் குறித்த, பெண்ணுடல் குறித்த உள்மன விகாரங்களின் உச்சம் இது.

பாலியல் சீண்டல்கள்,  வல்லுறவு முயற்சிகள், நம்பிக்கைத் துரோகங்கள் என்ற அளவில் இதுவரை பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டிருந்த பெண்களுக்கு இது அடுத்தகட்ட கொடுமையாக முளைத்திருக்கிறது, அவர்களை அந்தரங்கமாகப் படம் பிடித்து, அதைக் காட்டி மிரட்டி பாலிய வல்லுறவுக்குள்ளாக்கி, அதையும் படமாக்கி பணம் பறிப்பது – கூட்டு வல்லுறவுக்குப் பயன்படுத்துவது, வன்முறைக்கும் உள்ளாக்குவது என்பது. தமிழ்நாட்டின் சகல திசைகளிலிருந்தும் ‘அவர்களை சும்மா விடக்கூடாது’ என்ற வார்த்தைகள் ஏன் இன்று குற்றவாளிகளுக்கு எதிராக ஒலிக்கின்றன என்றால், அவ்வளவு பெரிய மனக்கொதிப்பை இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அரசின் அமைப்புகள் – குறிப்பாக கோவை மாவட்டக் காவல் துறை – இந்த விஷயத்தை அணுகும் விதம் இச்சம்பவத்தின் தீவிரத்தையே அவர்கள் உணரவில்லையோ என்ற கேள்வியையே எழுப்புகிறது.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தங்கள் தரப்பில் குற்றமிழைத்தோர் இருப்பின் அவர்களை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்குவதும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுமே ஆளுங்கட்சி செய்ய வேண்டிய முதல் வேலை. அப்படி இல்லாதபட்சத்திலும் குற்றவாளிகள் – அவர்கள் எந்த அரசியல் பின்னணியில் இருந்தாலும், அவர்கள் பின்னே குற்றவலையின் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் கைதுசெய்வதன் மூலமாக, அவர்கள் மீது பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமாக தன்னுடைய தொடர்பின்மையை நிரூபிக்க வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆளும் தரப்பு தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை இதில் ஆளுங்கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை என்றாலும்கூட இப்படியான ஒரு சம்பவம் நடக்கையில், அதை அணுகும்போது பாதிக்கப்பட்டோர் மீதான அரசின் பரிவு அதில் மிக மிக முக்கியமானது என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது – சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டுவதும், அரசியலாக்குவதும்தான் எதிர்க்கட்சிகளின் கடமை என்றாலும்கூட, அடிப்படையில் இது உயிர்களோடும் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட பிரச்சினை – பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கிவிடக் கூடாது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. எத்தகைய சூழலிலும் பாதிக்கப்பட்டவர்கள் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டுவிடக் கூடாது. ஒட்டுமொத்த சமூகமும் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய ஒரு தருணம் இது.

புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரும் புதிய குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களும், விசாரணை அமைப்புகளும் தேவை என்பதையும்கூட இச்சூழல் உணர்த்துகிறது. குற்றவாளிகளில் சிலரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறது காவல் துறை. ஆனால், இதற்கு முன்பு இப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் பலரும் அவ்வழக்குகளிலிருந்து எளிதாக பிணையில் வெளிவந்திருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகும். அசாதாரணமானதும் இதுவரையில் சந்தித்திராததுமான இத்தகைய குற்றச்செயல்களை விசாரிக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, அச்சட்டத்துக்கு முன்மேவு அதிகாரம் வழங்கப்பட்டு தனி நீதியமைப்பும் விசாரணை நடைமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

சட்டம், அரசுசார் நடவடிக்கைகள் எல்லாமே குற்றங்களைக் குறைக்கவும் நம்முடைய ஆற்றாமைகளைக் குறைக்கவும் உதவலாமே தவிர, குற்றங்களை ஒழிக்க சமூகத்தின் மனதில் புரையோடியிருக்கும் நோய்க்கூறுகள் விடுபடுவதே வழி என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும். பாலியல் வக்கிரத்துக்கு ஆளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துயரத்தைப் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம், நீதி அமைப்புகளிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்குத்தான் நம்முடைய சமூகச் சூழல் இருக்கிறது என்றால், அதற்காக நாம் ஒவ்வொருவருமே வெட்கப்பட வேண்டும். அடிப்படையில் நம்முடைய குடும்பங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம், பெண்களை அங்கே எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறோம் என்பதை ஆழமாக ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காணொளி வழியாகப் பதிவுசெய்யப்பட்ட இக்கொடுமைகளைப் பார்த்த பின்னும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஒரு இளைஞரின் தாய் நீதிமன்றத்தில் தன் மகன் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டான் என்று கூறி செய்த ரகளை நம்முடைய சமூகம் இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான உதாரணம்.

பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதிலிருந்தும், ஆணின் தவறுகளை ஏதோ ஒருவகையில் நியாயப்படுத்துவதிலிருந்தும் விடுபடாத வரை இத்தகைய கொடூரங்களிலிருந்து நம் சமூகம் விடுபடவே முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்றால், வீடுகளிலிருந்து மாற்றங்கள் தொடங்க வேண்டும்; கடுமையான தண்டனைகள், பிரச்சாரங்கள் வழி அரசு இதற்கான முனைப்பை உருவாக்க வேண்டும்!

-தி ஹிந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *