நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்- 2021, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்கள் வாக்காளர்களிடம் அவர்களது ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இல்லாதபட்சத்தில் வேறு அடையாளச் சான்றுகளைக் காட்டவும் இச்சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது என்றபோதும், இச்சட்டத் திருத்தம் அரசியல் வெளியில் தொடர்ந்து சூறாவளிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம், அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் தனித்தியங்கும் அதிகாரத்தை அரசமைப்பின் வாயிலாகப் பெற்றுள்ளது; ஆதார் தரவுகளை நிர்வகிக்கும் ஆணையமோ மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இயங்கிவருகிறது என்பதே இந்த எதிர்ப்புக்கான முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் நடந்த வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு முயற்சிகள், அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலைத் தங்களுக்கேற்றவாறு திருத்திக்கொள்ளும் வாய்ப்புகளுடன் இருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே, தொழில்நுட்பச் சிக்கல்களுடன் இயங்கிவரும் ஆதார் தரவுத்தளத்துடன் தேர்தல் ஆணையம் தன்னுடைய தரவுகளையும் பகிர்ந்துகொள்வது சரியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதை ஆதரிப்பவர்களும்கூட அதே அளவுக்குக் காரணங்களைப் பட்டியலிடுகின்றனர். இதன் மூலமாக, ஒரே நபர் இருவேறு இடங்களில் வாக்குரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அவர்களது முக்கிய வாதம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றுவதற்கான ஒரு கருவி என்று ஆதார் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரைக்கும் அதற்கு எதிராகப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன, அதன் தொடர்ச்சியே இப்போதைய எதிர்ப்புப் பிரச்சாரமும் என்று இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெற்றபோதும், எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. ஆனால், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கள்ள வாக்குகள் போடுவது குறைந்தது. வாக்கு இயந்திரங்கள் குறித்து நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் எழுந்தபோது, வாக்குப் பதிவை உறுதிசெய்துகொள்ளும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன. எனவே, இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் மறைந்துவிடும். எதிர்ப்புக்கு வலுவான காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அவை சரிசெய்யப்படும்.
வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைத்ததால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகித்துவருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலமாகப் போலி வாக்காளர் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்ட முடியும். 18 வயதாகும் புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைப்பதும் எளிதாகும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கி, புதிய பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறைகளும் எளிதாகும். நேர்மையான, வெளிப்படையான ஜனநாயக நடைமுறைக்குத் துல்லியமான வாக்காளர் பட்டியலே தொடக்கப்புள்ளி. ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டபோது, எதிர்ப்புத் தெரிவிக்காத எதிர்க்கட்சிகள் மக்களவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அப்பட்டமான கட்சி அரசியலாகவே பார்க்கப்படும்.
TAG: VOTER ID WITH AADHAR