சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக் கதை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்?
உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்களுடைய ‘அகரம் ஃபவுண்டேஷன்’ கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, நேர்காணல் நடத்தி அவர்களில் 1,943 மாணவர்கள் இப்போது பல்வேறு கல்லூரிகளில் படிக்க அது உதவிவருகிறது. இவர்களில் 49 பேர் மருத்துவ மாணவர்கள்.
இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள். 91% பேர் முதல் தலைமுறையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பவர்கள். மாத வருமானம் ரூ. 2,000 நிரந்தரமாகக் கிடைக்காத பெற்றோர்களின் பிள்ளைகள்தான் இவர்களில் அதிகம். பதின்பருவ வளர்ச்சிக்குத் தேவையான நல்ல உணவுகூடக் கிடைக்கப் பெறாதவர்கள்.
ஒரே நாடு… ஒரே தேர்வு – வன்முறை!
வீட்டுச் சூழல்தான் இப்படி என்றால், கல்விச் சூழல் இதைவிட மோசமாக இருக்கும். போதிய ஆசிரியர்கள் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை நாட்களில் பகுதிநேரக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த அனுபவத்திலிருந்து கிடைத்த படிப்பினைகளிலிருந்தே இதை எழுதுகிறேன். நாங்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்பதற்கான பஸ் செலவுக்கான சில நூறு ரூபாய் பணம்கூட அவர்களில் பலருக்கு இயலாத காரியம். ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட பல மாணவர்களை நான் பார்க்கிறேன்.
லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு, நல்ல வாழ்க்கைத் தரத்தோடு இருக்கும் மாணவர்களுக்கும், இப்படி எந்த வசதி வாய்ப்பும் இல்லாத மாணவர்களுக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்வு’ என்ற பெயரில் ஒரு தேர்வை நுழைப்பது எவ்வளவு பெரிய வன்முறை! நந்தனாரை ‘நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா’ என்று சொன்ன அந்தக் காலத் தீண்டாமைக்கும், ‘நிறையப் பணம் செலவழித்துத் தனி கோச்சிங் எடுத்து ‘நீட்’ போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்க வா!’ என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
கல்வியின் மூலம் ஏற்றத்தாழ்வு
பாகுபாடுள்ள பள்ளிகள், பாகுபாடுள்ள கல்வி முறை, வசதிக்கேற்ற விதவிதமான பாடத்திட்டங்கள் என எல்லா நிலையிலும் பாகுபாட்டை நிறுவிவிட்டு, ஒரேவிதமான தேர்வு முறையில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரிக சமுதாயம் செய்கிற வேலை இல்லை. வளர்ந்த நாடுகள் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கல்வியின் மூலம் உருவாக்கிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் கல்வியின் மூலமே ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்கிறோம். தீண்டாமையின் புதிய வடிவமாக, ‘தரமான கல்வி, தகுதியான மாணவர்கள்’ என்கிற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. பொதுப்புத்தியில் இப்போது அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் தரமற்றவையாகிக்கொண்டே வருகின்றன. ‘காசு கொடுத்தால்தான் இங்கே தரமான கல்வி கிடைக்கும்’ என்று மக்களை நம்பவைத்து, தாலியையும், சோறு போடும் மண்ணையும் விற்றுக் கல்விக் கட்டணம் கட்ட வைக்கிறார்கள். அனைவருக்கும் பொதுவான, தரமான இலவசக் கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம், தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, தகுதிப்படுத்துகிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?
இனி நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்த ‘நீட்’ தேர்வு மட்டுமே நமது கல்வி முறையின் ஒற்றைப் பிரச்சினை இல்லை. பல்வேறு குறைபாடுகள் கொண்ட நம் கல்விமுறையின் சமீபத்திய பலி அனிதா என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள். 2017 ஜனவரி மாதம் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக ‘நீட்’ தேர்வு பற்றிக் கல்வியாளர், பேராசிரியர் பிரபா கல்விமணி (பேராசிரியர் கல்யாணி) தொகுத்த புத்தகத்தை அகரம் ஃபவுண்டேஷன் வெளியிட்டது. ‘நீட்’ பற்றியும் தமிழகக் கல்விச் சூழல் பற்றியும் அவசரமாக விவாதிக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டுத் தமிழகக் கல்வியாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
கல்வியாளர்கள் மத்தியில் கவனம் பெற்ற நூலின் கருத்துகள், முடிவு எடுக்க வேண்டியவர்களிடம் கவனம் பெறவில்லை. மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்றிவிட்டன. பொறுப்பிலுள்ளவர்களின் தவறுகளுக்கு, அப்பாவி மாணவர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி.
அனைவருக்கும் சமமான கல்வி
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு, இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.
காலத்துக்கேற்ற பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், அனைவருக்கும் பொதுவான அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளிகளை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்தி, நடை முறைப்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகள் அனைத்திலும், ‘பொதுப் பள்ளி’ முறைதான் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் இதை உறுதிப் படுத்துவோருக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.
அதிகார மையங்களைக் கட்டுப்படுத்துவோம்
நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவரும். மாநில அரசு ‘நுழைவுத் தேர்வு இல்லை’ என்று அறிவிக்கும். நீதி மன்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல், மத்திய – மாநில அரசுகளின் நிலைப்பாட்டை வைத்துத் தீர்ப்புகள் எழுதும். சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்போதுகூட எவ்விதமான எதிர்வினையும் ஆற்றாமல் மக்கள் இருப்பார்கள். இந்த நிலை நீடித்தால் எந்த மாற்றமும் வராது. மாணவர்கள் நலனைப் பாதிக்கும் எந்தச் செயலையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு மட்டுமே இந்த அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தும்.
கல்வி மாநில உரிமை
இந்தியா என்பது ஒரே தேசம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடு என்று சுருக்கிவிட முடியாது. கல்வி என்பதை மாநிலங்களின் உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற வேண்டும். ஒரு மாநிலத்தின் தனித்துவமான கல்விப் பிரச்சினைகளை, அதைப் புரிந்துகொள்ள இயலாத பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமை என்பது மீண்டும் அரசியலமைப்புச் சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை
தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள். உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே என்பது அநீதியானது. ஆங்கிலம், இந்தி தவிர அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
நவீனத் தீண்டாமை
‘தரம், தகுதி’ போன்ற வார்த்தைகள் நவீன தீண்டாமையாக மாறிவருகின்றன. மாணவர்கள் அவர்களுடைய சூழ்நிலையில் சிறந்து விளங்க இரவு பகலாக உழைக்கிறார்கள். தரமான, தகுதியான மாணவர்களை உருவாக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு. பல ஆண்டுகளாகப் பொறுப்பற்ற அரசுகளின் தவறுகளுக்கு மாணவர்களைப் பலி ஆக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியது. அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய வசதி வாய்ப்புகள் இன்றி தரமற்ற கல்வியைப் பெறுகிறார்கள் என்றால், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்து, தரமற்ற மனப்பாடக் கல்வியைப் பெறுகிறார்கள். இதில் எங்குமே தரமோ தகுதியோ இல்லை.
அடிமடியில் கை வைக்கும் வேலை
கல்வியில் சீர்கேடு என்பது அடிமடியில் கைவைக்கிற வேலை. அரசுப் பொறுப்பில் இருக்கிறவர்கள் லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடினால், கடுமையாக தண்டிப்பதற்கான விசேஷச் சட்டங்களை உருவாக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் கடைக்கோடி மனிதனையும் முன்னேற்றும் ஏணி என்று நம்பிக்கொண்டிருந்தோம். அந்த ஏணியை வைத்து உயரத்துக்குச் செல்லாமல், கீழே இறங்குவது அறிவுபூர்வமான செயல் அல்ல. ‘நீட் தேர்வு’ பற்றி மட்டும் விவாதிப்பதும், அதற்கென்று தனியாகப் போராடுவதும் முழுமை பெறாத முயற்சிகள் என்பதை இனியாவது புரிந்துகொள்வோம். நீட் தேர்வும், அது தொடர்பான பிரச்சினைகளும் நம் மோசமான கல்விச் சூழலின் கோரமான ஒரு பகுதி மட்டுமே.
குருடாக்கப்படும் எதிர்காலம்
இனிமேலாவது கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்சினை களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கப் பழகுவோம். ஈடு செய்ய முடியாத அனிதாவின் மரணத்துக்கு அர்த்தம் சேர்க்கிற வகையில், இந்தச் சூழலை ஒட்டுமொத்தக் கல்விப் பிரச்சினைகளைத் தொகுத்துப் பார்க்கும் தொடக்கப்புள்ளியாகக் கருதுவோம். இதைக் கவனிக்கத் தவறினால் சமூக நீதிக்குப் போராடிய பெரியாரும், ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த காமராஜரும் வாழ்ந்த மண்ணில், இனி வரும் தலைமுறையினருக்குக் கல்வியின் பெயராலேயே சமூகநீதி மறுக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் குருடாக்கப்படும்.
இந்தப் பரிந்துரைகள் முழுமை பெற்றதாகக் கருதவில்லை. தமிழகத்தில் சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை விவாதித்து ஏற்றுக்கொண்ட பிறகு, நாம் அனைவரும் இணைந்து அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரத் தொடர்ந்து போராட வேண்டும். காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர முடியும் என்பதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வுகளையும், அனிதா போன்ற அப்பாவிக் குழந்தைகளையும் காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதைப் பெற்றுத் தரவேண்டியது நமது கடமை.
இன்றுவரை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் சமூகநீதிக்கான போராட்டங்களில் முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தத் தனித்துவத்தை நாம் இழந்துவிடக் கூடாது.
– சூர்யா, திரைப்பட நடிகர், அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர்.